Header Ads



ரஞ்சனின் குடியுரிமையை, இரத்துச் செய்யுமாறு கோரிக்கை

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நாட்டின் தனித்தன்மை குறித்து அறிவில்லாத பாடசாலை செல்லும் மாணவர் குழுவொன்றே கடந்த காலத்தில் ஆட்சி நடத்தியுள்ளது எனவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை கண்டியில் இடம்பெற்ற தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிகழ்வான்றில் பங்கேற்றிருந்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபாலவிடம், ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகள் தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

உண்மையில் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் கதைக்க எனக்கு விருப்பமில்லை. எமது வீட்டில் குழந்தைகளுடன் மனைவியுடன் அல்லது சகோதரியுடன் இணைந்து கேட்கக்கூடிய சொற்களா அவரது உரையாடல்களில் உள்ளது? எமது நாட்டின் நம்பிக்கைத்தன்மையை பாதிப்புறச் செய்த ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமையையும் நீக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதாலேயே கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவதற்கு ஆதரவு வழங்கியதாகவும் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பக்கம் இழுத்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றொன்றைத் தெரிவிப்பார். அதேபோல நாடாளுமன்றில் இருந்தவர்கள் தொடர்பில் தற்போது நன்றாகத் தெரிகின்றது. குரல் பதிவுகளை பதியும் குழுவொன்றே அரசாங்கத்தை நடாத்தியுள்ளது. கலாசாரம், தனித்தன்மை, தேசியத் தன்மை என எது குறித்தும் அறிவில்லாத பாடசாலை செல்லும் மாணவர் குழுவொன்றே ஆட்சி நடத்தியுள்ளது.

நாம் துன்பமடைந்தது போதும். இவர்களின் இந்த செயற்பாடுகள் காரணமாகவே அன்று பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்து நாம் அங்கிருந்து வெளியேறினோம். அத்தோடு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக இருப்பதற்கு தகுதியற்ற ஒருவராவார். அதனாலேயே நாம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினோம்.

எனினும் உச்சநீதிமன்றம் எம்மை முன்நோக்கி பயணிக்க இடமளிக்கவில்லை. உலகின் முதன்முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை நாம் மாற்றியமைக்க முயற்சித்தோம். அதன் காரணத்தால் நாம் அந்த சந்தர்ப்பத்தில் மேலும் பின்னால் சென்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.