Header Ads



யார் இந்த காசீம் சூலேமானி..? ஈரானின் ஹீரோ, அமெரிக்கத் தாக்குதலில் வீழ்ந்தது எப்படி..?


இரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சூலேமானியை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை "மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது" என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.

இரானின் ஆட்சியில் ஜெனரல் காசீம் சூலேமானி, ஒரு முக்கியமான நபர். அவரது படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் தலைவர் ஆயத்துல்லா அலி காமினேவிடம் தொடர்பில் இருக்கும். மேலும் சூலேமானி, அந்நாட்டில் ஹீரோ போல பார்க்கப்பட்டவர்.

என்ன நடந்தது?

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சூலேமானி கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை உறுதிபடுத்தியுள்ளது.

இராக் போராளிகளின் தலைவர் அபு மஹ்தி அல்-முஹன்டியும் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசீம் சூலேமானியை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.

"இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாதில் இராக்கின் போராளிகள் தலைவர்கள் சிலர் அமெரிக்கப் படைகளால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராளிகள் அமைப்பு சுற்றி வளைத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யார் இந்த காசீம் சூலேமானி?

1998 ஆண்டு முதல் காசீம் சூலேமானி, இரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்த வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

இரான் புரட்சிகர காவலர் படையையும், அதன் பிரிவையும் தீவிரவாத அமைப்பு என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் பட்டியலிட்டார் அமெரிக்க வெளியுறவு செயலரான மைக் பாம்பையோ.

No comments

Powered by Blogger.