Header Ads



இலங்கை பிக்குணிகளின், கண்ணீர் கதைகள்

- BBC -

''தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,'' என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார்.

அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது.

ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ''பிக்குணிகள்'' என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இனியும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்றும் கூறியதால், அடையாள அட்டை பெறும் தகுதி பறிக்கப்பட்டது.

அப்போதிருந்து, பௌத்த மத பிக்குணிகள் - கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளைப் போன்றவர்கள் - சிக்கலில் மாட்டியிருக்கின்றனர். உரிமைகள் எதுவும் இல்லாமல் சேவையாற்றும் இவர்கள், சமுதாய மக்களால் நேசிக்கப்படுகின்றனர்.

''வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போல எங்களை நடத்துகிறார்கள். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்,'' என்று நாட்டின் மிக மூத்த பெண் துறவியான கோத்மலே ஸ்ரீ சுமேதா பிக்குணி பிபிசியிடம் தெரிவித்தார். ''புத்தரின் மகள்களாக நாங்கள் இந்த மண்ணில் பிறந்தோம். இது பாலின பாகுபாடு இல்லாமல் வேறு எதுவும் இல்லை,'' என்று அவர் கூறினார்.

இலங்கையில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பிக்குணிகள் கிடையாது. இலங்கையின் மீது போர் தொடுத்த இந்து, தென்னிந்திய மன்னர்களால், மத அடிப்படையிலான துபுறுத்தல்களால் அவர்கள் இறந்து போய்விட்டனர்.

பிறகு 1998ல், அந்த நூற்றாண்டில் முதல்முறையாக புதிய பெண் துறவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில், 150 பெண் துறவிகள் உருவாகியிருந்தனர். இப்போது சுமார் 4,000 பேருக்கு மேல் உள்ளனர் என்றும், ஆறு வயது முதல் பெண்கள் துறவிகளாக உள்ளனர் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை. அடுத்த புத்தர் தோன்றும் வரையில் பிக்குணி அந்தஸ்துகளை உருவாக்க முடியாது. ஏனெனில் இலங்கையில் கடைபிடிக்கப்படும் பௌத்த பாரம்பர்யத்தில் பெண் துறவிகள் நடைமுறை இல்லை என்று தலைமை மதகுரு கூறியுள்ளார். பெண்கள் துறவிகளாக இருப்பதையே சிலர் ஆட்சேபிக்கின்றனர்.

''பெண் பௌத்த துறவிகளுக்கு புத்தர் அனுமதித்த காலத்திலேயே, தயக்கம் இருந்தது. ஏனெனில் பெண்கள் வலு குறைந்தவர்கள், மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலை இருந்தது,'' என்று மான்ட்டா பானி என்ற துறவி பிபிசியிடம் 1998ல் கூறியுள்ளார்.

அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து, அடையாள அட்டை பெறுவதற்கான உரிமை பறிக்கப்பட்டது.

பள்ளிக்கூட இறுதித் தேர்வு எழுதுவதற்காக தேசிய அடையாள அட்டை (என்.ஐ.சி.) பெறுவதற்கு சமந்தபத்ரிகா விரும்பினார். இலங்கையில் அடையாள அட்டை இல்லாமல், உயர்நிலைத் தேர்வுகளில் யாரும் பங்கேற்க முடியாது.

''தலைமை மதகுருக்களின் அனுமதி இல்லாமல் அவருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடியாது என்று பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையர் கூறிவிட்டார்,'' என்று இலங்கையின் வடமேற்கில் தொலைதூரத்தில் உள்ள போதுஹரா நகரில் தன் கோவிலில் இருந்தபடி அவர் பிபிசியிடம் கூறினார்.

''எனக்கு மிகவும் சோகமாகிவிட்டது. நான் தேர்வு எழுத முடியாது என்று நினைத்தேன். பிறகு தேசிய பதிவாளர் அலுவலகத்துக்கு நாங்கள் சென்றோம். அவர்களும் மறுத்துவிட்டனர். அப்போது என் குரு பிக்குணியும், சகோதரி பிக்குணியும் அழுதுவிட்டனர்.''

சமந்தபத்ரிகா ஆணாக இருந்திருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆண் பௌத்த துறவிகளுக்கு 16 வயதாகும்போது, அவர்கள் துறவு மேற்கொண்ட பெயரில் தேசிய அடையாள அட்டை அளிக்கப்படும். அவர்களுடைய பிறப்பிடம் தொடங்கி, சிறப்பு பௌத்த பெயர் வரை அதில் இடம் பெற்றிருக்கும்.

''இந்த நாட்டில் நாங்கள் என் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்? அவர்கள் மனதளவில் எவ்வளவு குரூரமானவர்கள்,'' என்று ஹல்பனடெனியே சுபேசலா பிக்குனி கேள்வி எழுப்பினார்.

டெக்கன்டுவேல பிக்குணி பயிற்சி மையத்தில் விரிவுரையாளராக இருக்கும் சுபேசலா, இலங்கையின் கல்வி அமைச்சகத்தில் பெண் துறவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கலுதாரா மாவட்டத்தில் உள்ள அந்த மையத்துக்கு சமீபத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

''இந்த நாட்டில் யாரும் - எந்த சமுதாயத்தினர், மதத்தினர் அல்லது இனக் குழுவினரும் - எங்களைப் போல நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது இல்லை. இந்த நாட்டில் குடிமக்கள் என்ற அடிப்படை உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

பிக்குணிகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கோரி, வேறு பல பெண் துறவிகளுடன் சேர்ந்து அவர் நீண்ட போராட்டம் நடத்தியுள்ளார்.

அடையாள அட்டை பெற்றவர்களுக்கும் கூட, மிக எளிதில் அதை பறித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

தன் அடையாள அட்டையில் ''பிக்குணி'' என்று குறிப்பிட்டிருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டில் அதைப் புதுப்பித்தபோது, அந்த வார்த்தை காணாமல் போனதை ஒரு பிக்குணி கண்டார்.

''தமிழில் 'பிக்குணி' எனும் சொல் இருப்பதை விட்டுவிட்டார்கள். ஆனால் சிங்களத்தில் ஒருபோதும் அது இல்லை'' என்று நீண்டகாலம் போராடிய தலவதுகோடா தம்மதீப்பனி பிக்குணி பிபிசியிடம் கூறினார்.

பெரும்பாலான இலங்கைவாசிகள் இவர்களின் நிலைமை பற்றி அறியாத நிலையில், பெண் துறவிகள் தனித்துவிடப்பட்டதாக சொல்ல முடியாது.

இலங்கையில் பிக்குணி சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அரும்பணி ஆற்றிய டாக்டர் இமானுலுவே ஸ்ரீசிமங்கல தேரோவின் ஆதரவு இவர்களுக்கு உள்ளது. மிக மூத்த தலைமை மதகுருக்களை அவர் விமர்சனம் செய்கிறார்.

பிக்குணிகள் பிரிவை எதிர்ப்பவர்கள், புத்தரின் போதனைகளை சரியாகப் பின்பற்றுவது இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். புத்தரின் காலத்தில் தலைமை மத குரு என்று யாரும் இருந்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புத்தர் ஞானம் பெற்றதும், தனது போதனைகளைப் பின்பற்றுமாறு சீடர்களிடம் கூறினாரே தவிர, தலைமை குருமார்களின் போதனைகளைப் பின்பற்றுமாறு கூறவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்த முயற்சியை தாராள கருத்துகள் உள்ள பல துறவிகள் ஆதரிக்கின்றனர். பெண் துறவிகளுக்கு சம உரிமை அளித்தால், பாரம்பரியமான பக்தர்கள் மத்தியில் தங்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் பறிபோய்விடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில் தங்களுடைய கடுமையான மற்றும் பணிவான சேவைகள் காரணமாக மக்கள் மனதில் பெண் துறவிகள் இடம் பிடித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அவர்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல - அல்லது அதைவிட மோசமாக நடத்தப் படுகின்றனர்.

''நாங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைப் போல இருக்கிறோம்'' என்று சுபேசலா பிபிசியிடம் தெரிவித்தார். 'பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து பிராமணர்கள் கொண்டிருந்த ஆதிக்க மனப்பான்மையைப் போல இது உள்ளது,'' என்றார் அவர்.

சமந்தபத்ரிகா ஒருவழியாக தேர்வு எழுதிவிட்டார். சமந்தபத்ரிகாவின் குரு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு இலங்கை கல்வி அமைச்சரின் சிறப்பு அனுமதி பெற்றார்.

இருந்தாலும் அவருக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே 18 வயதாகும்போது அவரால் வாக்களிக்க முடியாது.

புத்தரின் போதனைகளின் அடிப்படையில்தான் இந்த நிலைப்பாட்டை தாங்கள் எடுத்திருப்பதாகவும், இதில் பாலின பாகுபாடு எதுவும் இல்லை என்றும் தலைமை மதகுருக்களின் செய்தித் தொடர்பாளர் மேடகமா தம்மானந்த தேரோ கூறினார்.

இதில் சமரசம் செய்யும் வகையில் ''சங்கைக்குரிய'' (போற்றுதலுக்குரிய) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ள அரசு தயாராக உள்ளது என்று பௌத்த மத விவகாரங்கள் துறையின் கமிஷனர் ஜெனரலான சுனந்தா கரியபெருமா பிபிசி சிங்களப் பிரிவிடம் தெரிவித்தார்.

தலைமை மத குருக்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற சட்டபூர்வ விதிகள் எதுவும் இல்லை என்றாலும், சில சர்ச்சைகளில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளைத் தொடர்ந்து ''பாரம்பரியங்களே சட்டமாகிவிட்டன'' என்று கரியபெருமா ஒப்புக்கொள்கிறார்.

இப்போது பெண் துறவிகள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர்: தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரி இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் அவர்கள் மனு செய்துள்ளனர்.

சொல்லப்போனால், இலங்கை அரசியல்சாசனத்தை பௌத்த மத விவகாரங்களுக்கான அமைச்சகம் மீறிவிட்டது என்று 2015ஆம் ஆண்டிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை.

No comments

Powered by Blogger.