Header Ads



ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விடயங்களை, கொட்டாஞ்சேனை பொலிஸார் மறைத்தது நிரூபனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை மறைக்க கொட்டாஞ்சேனை பொலிஸார் பிழையான தகவல்களை பதிவு புத்தகத்தில் பதிவு செய்திருப்பது ஜனாதிபதி ஆணைக்குழு முன் நிரூபனமாகியுள்ளது. 

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றும் (12) இன்றும் (13) ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய இன்றைய தினம் -13- கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் ஆவணங்களுக்கு பொறுப்பான கான்ஸ்டபல் நளீன் பண்டார ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 

அவர் தனது சாட்சியத்தில் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பின்னரே கிடைத்தாக தெரிவித்தார். 

ஆனால் அந்த ஆவணம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் கிடைத்தாக ஆவண புத்தகத்தில் பதிவிடுமாறு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மஹிந்த கருணாரத்ன தனக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். 

அவர் குறித்த கடிதத்தை வழங்கும் போது எவரும் அது குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் ஆகவே அதனை இரகசியமாக கையாளுமாறும் அவர் கேட்டுக்கொண்டதாக நளீன் பண்டார ஆணைக்குழுவில் தெரிவித்தார். 

அதேபோல் தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போது வடகொழும்புக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார மற்றும் அவருடைய தனிப்பட்ட உதவியாளர் உபேந்திர என்பவர் தனது கையடக்க தொலைப்பேசிக்கும், பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைப்பேசிக்கும் அழைத்து குறித்த தகவல்களை ஆவண புத்தகத்தில் பதிவிட்டீர்களா என்பது தொடர்பில் வினவியதாக தெரிவித்தார். 

அதற்கமைய ஏப்ரல் 13 ஆம் திகதி குறித்த கடிதம் கிடைத்தாக தான் பதிவேட்டில் பதிவிட்டதாக கான்ஸ்டபல் நளீன் பண்டார ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 

ஏன் அவ்வாறு பிழையான விடயத்தை செய்தீர்கள் என நீதிபதிகள் வினவியதற்கு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரியின் வற்புறுத்தலுக்கமைய தனக்கு அதை செய்ய வேண்டி ஏற்பட்டதாக கான்ஸ்டபல் நளீன் பண்டார தெரிவித்தார். 

அவரையடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சிறிசேன சாட்சி வழங்கினார். 

தான் புனித லூசிய தேவாலயத்திற்கு கடமைக்காக சென்ற போது அதாவது காலை 6.15 அளவில் கையொப்பம் இட்டு சென்றதாகவும் அதனை அடுத்து குண்டு வெடித்ததன் பின்னர் முற்பகல் 8.45 க்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்தாகவும் அவர் தெரிவித்தார். 

இதனை அடுத்து போலி நேரத்தை பதிவு செய்த பின்னர் தான் வீட்டிற்கு சென்ற போது கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைப்பேசியில் அழைத்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவித்ததற்கு அமைய தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவர் கூறினார். 

அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நேரத்தை 9.45 என பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன்போது சாட்சியம் வழங்கிய பொலிஸ் பரிசோதகர் எம்.சிறிசேன அனைத்து நேரங்களும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மஹிந்த கருணாரத்னவின் வேண்டுகோளுக்கமைய மறுபடியும் மாற்றியதாக கூறினார். 

அதாவது பொலிஸ் பதிவு புத்தகத்தில் பக்கங்கள் பொருந்தும் வகையில் 371 முதல் 374 ஆவது பக்கம் வரையும் புதிய பக்கங்களை இணைத்தாகவும் அவர் ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார். 

தவறான தகவல்களை பதிவிட்டமை குறித்து இதன்போது பொலிஸ் பரிசோதகர் ஏற்றுக்கொண்ட நிலையில் புதிய தகவலில் மேலதிக பொலிஸார் புறப்பட்டு சென்றதாக பதிவு செய்தாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார். 

இதேவேளை இன்றைய தினம் சாட்சியம் அளித்த முன்னாள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த கருணாரத்ன 21 ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு கடிதமும் தனக்கு கிடைக்கவில்லை என கூறினார். 

அதனை தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று முற்பகல் வேளையில் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டாரவின் தனிப்பட்ட உதவியாளர் உபேந்திர என்பவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மூலமாக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி இருந்தாக அவர் குறிப்பிட்டார். 

அதேபோல் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று இரவு 9 மணியளவில் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்து குறித்த கடிதத்தை அனுப்ப முடியாமல் போனதாகவும் அது தனது தனிப்பட்ட உதவியாளரினால் காணாமல் போனதாக தெரிவித்தாக பொலிஸ் பரிசோதகர் எம்.சிறிசேன கூறினார். 

அதேபோல் குறித்த கடிதம் தாக்குதலுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்தது போல் பதிவுச் செய்யுமாறு பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜிவ பண்டார வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாக பதிவுச்செய்யுமாறு தான் ஆவண காப்பாளருக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.