Header Ads



துருக்கித்தொப்பி அப்துல் காதரின் பேரன், முதலாவது கல்விச் செயலாளர் மர்ஹூம் MM. மன்சூர்

- பரீட் இக்பால் - 

துருக்கித்தொப்பி அப்துல் காதர் அவர்களினதும், பிரபல பரியாரி அப்துல் அஸீஸ் அவர்களினதும் பேரன் தான் எம்.எம்.மன்சூர் ஆவார். யாழ்ப்பாண முஸ்லிம்களில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான இமாம் அவர்கள் இவரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் கீர்த்தி மிக்க குடும்பத்தைச்  சேர்ந்த முஹம்மது முஹியித்தீன் - சகீனா தம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி மூன்று பிள்ளைகளுள் இரண்டாவதாக மன்சூர் பிறந்தார். இவரது தந்தை கொழும்பு துறைமுகத்தில் களஞ்சிய பொறுப்பாளராக பணியாற்றியவர். இவருக்கு மூத்த சகோதரியாக தூபாவும் இளைய சகோதரராக மர்சூக்கும் ஆவார்கள். 

இவர் தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். இவர் கிரிக்கெட்டிலும் , கூடைப்பந்தாட்டத்திலும் திறமையை வெளிகாட்டியிருந்தார். மேலும் சாரணீயத்திலும் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்று 1959 இல் கலை பட்டதாரியானார். கலை பட்டதாரியான மன்சூர் அக்குரனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியை ஆரம்பித்தார். 1963 இல் மன்னார் - எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். 1965 இல் மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையில் ஒரு வருடம் அதிபராக கடமையாற்றினார்.

இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து மன்னார் மாவட்டத்தில் வட்டார கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பின்பு யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு மாற்றலாகி பணியாற்றினார். இவர் 1968 இல் பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பயிற்சி பெற்றார்.

இவர் யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியரும் காதியாருமான அப்துல் காதர் - சப்ரா உம்மா தம்பதியினரின் மகள் றைஹானா என்பவரை 17.10.1968 இல் திருமணம் செய்தார். மன்சூர் - றைஹானா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளாகும். (இரு பெண்களும் , ஒரு ஆணும்). முதல் பிள்ளை ஷகியா - முன்னாள் பட்டதாரி ஆசிரியை ஆவார். இரண்டாவது பிள்ளை முராத் - எஞ்ஜினீயரும் வணிக நிர்வாகத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவருமாவார். மூன்றாவது பிள்ளை பர்ஸானா – பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியை ஆவார்.

1973 இல் இவர் ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றும் போது கல்முனையில் பிரதம கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதனை தொடர்ந்து திருகோணமலையிலும் பிரதம கல்வி அதிகாரியாக பணியாற்றினார்.அதன் பின்பு மாற்றலாகி யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றினார்.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி பட்டம் பெற்றதையடுத்து புலமைப்பரிசில் பெற்று தாய்லாந்து நாட்டில் கல்வி, திட்டமிடல் முதுகலைமாணி பயிற்சி பட்டம் பெற்றார். இவர் 1983 இல் கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு பெற்று, கிளிநொச்சி – முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்;களின்  பணிப்பாளராக பணியாற்றினார். இலங்கை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு பணிப்பாளராக பணியாற்றிய முதலாவது பணிப்பாளர் இவரென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கிளிநொச்சி – முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்;களின்  பணிப்பாளராக பணியாற்றிய போது  தேசிய ரீதியில் சாரணர் அமைப்பில் முக்கிய பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.1986 இல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்ட பிராந்தியத்தின் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.

இவர் யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக இருந்த போது , 1987 இல்  இலங்கை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கெதிராக 'ஒபரேஷன் லிபரேஷன்' யத்தத்தின் தாக்கத்தில் யாழப்;பாண மாவட்டத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்தனர். இதனால் 1987 டிசம்பரில் நடந்த க.பொ.த (சாஃத) பரீட்சையில் யாழ்ப்பாண தமிழர் முஸ்லிம் மாணவர்கள் தோற்றவில்லை. இந்த பரீட்சையை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிற்படுத்துமாறு அந்த நேரத்தில் கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்ஹ அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் பிரதம கல்வி அதிகாரியாக பணியாற்றிய மன்சூர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் கூறினார்கள் . பிற்படுத்தத் தேவையில்லை அந்த மாணவர்கள் 1988 டிசெம்பரில் பரீட்சைக்கு தோற்றும் படி அறிவுறுத்தினார். இதற்கு பிரதம கல்வி அதிகாரி மன்சூர் அவர்கள் கடுமையாக விவாதித்தார்கள். அதாவது மாணவர்களின் ஒருவருடகாலம் விணாகிறது என்று விவாதித்தார் ஆனால் அதற்கு ரணில் விக்ரமசிங்ஹ இணங்கவில்லை. இதனால் கவலையடைந்த மன்சூர் அவர்கள் யாழ்ப்பாண  மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன்  ஜனாதிபதியை சந்தித்து ரணில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது . இதனால் யாழ்ப்பாண தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு நடந்தது. இதனால் மாணவர்களின் ஒரு வருடகாலம் பாதுகாக்கப்பட்டது. இந்த காரியத்தால் மன்சூர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர் முஸ்லிம்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார். 

1988 இல் வடக்கு , கிழக்கு மாகாண சபையின் முதலாவது கல்விச் செயலாளராவார். மேலும் கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்கும் மாகாண செயலாளராக பணியாற்றினார். 1990 இல் யாழ்பாணம் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து இவர் 1991 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 

1988 இல் இவர் வடமாகாண கல்வி கலாசார செயலாளராக கடமையாற்றும் போது ஏற்கனவே ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மிஞ்சி இருப்பதை கவனத்தில் எடுத்து யாழ்ப்பாண முஸ்லிம்களில் 27 பேருக்கு ஆசிரிய நியமனம் வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் கல்வி அமைச்சின் மேற்பார்வை பிரிவில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி யாழ்ப்பாண முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பின் 1991 – 1992 காலப்பகுதியில் வெள்ளவத்தை டெல்மன் தனியார் வைத்தியசாலையில் நிர்வாக பணிப்பாளராக கடமையாற்றினார்.

இவர் 1992 இறுதிப் பகுதியிலிருந்து 1994 வரை வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியில் (வவுனியா) நிர்வாக பணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஒரு வருட காலம் கொழும்பு சோனக இஸ்ஸாமிய கலாசார நிலையத்தில் நிர்வாக பணிப்பாளராகவும் கடiமாற்றினார்.

ஜனாதிபதியினால் 1997 டிசம்பரில் பொது சேவை ஆணைக்குழுவில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் ஜனாதிபதியினால் கல்விச் சேவை ஆணைக்குழுவிலும் தலைவராக நியமிக்கப்பட்டார். 2003 இல் வடக்கு கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமனம் பெற்று, சுகயீனம் காரணமாக 2008 இல்  தாமாகவே விலகி ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் புதிய சோனகத் தெரு மக்களுக்காக ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த போது கட்டிடம் அமைக்க காலதாமதம் ஏற்பட்டதால்; ஒஸ்மானியா கல்லூரியில் ஒரு பகுதியில் ' அல்ஹம்றா' ஆரம்ப பாடசாலை எனும் பெயரில் ஆரம்பித்து வைத்தார். இவர் வடமாகாண கல்வி, கலாசார செயலாளராக இருக்கும் போது யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் இஸ்லாமிய கலாசார மண்டபம் ஒன்றை நிறுவ முயற்சி செய்த போதிலும் மாகாண சபை கலைக்கப்பட்டதால் கை கூடவில்லை. இவரின் முயற்சி  பாராட்டத்தக்க விடயமாகும்.

 பொது சேவை ஆணைக்குழுவிலும், கல்விச்சேவை ஆணைக்குழுவிலும் சேவை ஆற்றிய போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் உட்பட அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களிற்கும் அளப்பரிய சேவை ஆற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் தனது 78 வயதில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இறையடி எய்தினார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்துள்ள சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

No comments

Powered by Blogger.