Header Ads



கபட நாடகத்தை முறியடிக்க, சஜித்தை ஜனாதிபதியாக்குவோம் - ஹக்கீம்

சாய்ந்தமருது மக்களின் ஆணை அங்கீகரிக்கப்பட வேண்டும். சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளோடு  விளையாடி வாக்குகளை சூறையாடிவிடலாம் என்று கபட நாடகங்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டிய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு நமது வாக்குகளை தவறாது வழங்கி அவரை வெற்றி பெறச் செய்து  முஸ்லிம் சமூகத்திற்கும் விடியலை பெற்றுக் கொடுப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை  ஆதரித்து வெள்ளிக்கிழமை (01) சாய்ந்தமருதில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர்  கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த சவால்கள், இருந்த  அரசியல் செல்வாக்கில் ஏற்பட்ட பின்னடைவு என்பது வெறும் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் பேசப்பட்ட விடயம் அல்ல. நாடு தழுவிய ரீதியில் நிரந்தரமானதொரு பேசு பொருளாக மாறிவிட்ட நிலவரம் அம்பாறை மாவட்டத்;தின் கட்சி போராளிகளுக்கு மாத்திரமல்ல,  நாடு முழுவதிலுமுள்ள கட்சி போராளிகள் விசனமடையும் விடயமாக இருந்தது. 

 சாய்ந்தமருது மக்களின் ஆணை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்குகின்றது என்பதை மிகத் தெளிவாக தெரியப்படுத்தும் நோக்கில், பெரும்பான்மையை திரட்டுவதற்காக  மக்களை ஓன்று திரட்டும் பணியை ஒருபுறம் வைத்துவிட்டு நேரடியாகவே கல்முனை மாநகர சபையின் தலைமை பதவியை சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு தருகின்றோம் என்று நாங்கள் அறிவித்தோம்.
அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நிபந்தனைகள் இன்றி கல்முனை மேயர் பதவியில் இருப்பதற்கு எங்களுடைய ஆதரவை நிரந்தரமாக தருவதற்கு தயாராக இருக்கின்றோம். உங்களுக்கென்று தனியான ஒரு சபையை பெற்று தரும் வரை மேயர் பதவியை வைத்துக்கொள்ளலாம் என்பதை பகிரங்கமாக எதுவித கபடத்தனமுமின்றி, இதய சுத்தியுடன் அறிவித்தோம். 

சாய்ந்தமருது சாதாரண மண் அல்ல. கல்முனையில் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி முஸ்லிம் காங்கிரசுக்கு  
நூறு வீதம் வாக்களித்த மண்ணாகும்.  அந்தப்  பின்னணியில் தான் நாங்கள் இந்த மண்ணிலிருந்து போட்டியிட்ட நிஜாம்தீனுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை கொடுத்தோம். இது என்னை தலைமையாக்கிய மண். ஆகவே, இந்த மண்ணிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த மண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவது எனது தார்மீக பொறுப்பாகவுள்ளது. சபையை பெற்றுக்கொடுப்பதற்கான  முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 

எவ்வாறாவது கல்முனை தமிழ் பிரதேச செயலக கோரிக்கை சம்பந்தமான எல்லை பிரச்சினையில் கல்முனை முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லாமல் தீர்த்து கொள்ள வேண்டும். அத்தோடு சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையையும் பெற்று கொடுக்க வேண்டும். இது தொடர்பில் பள்ளி நிர்வாக குழுவினர் சந்தித்த போது எமது சார்பில்  நடத்திய பேச்சுவார்த்தையில் மிக தெளிவாக கூறினேன். கல்முனை பிரதேச முஸ்லிம்கள் தமிழ் பிரதேச செயலகம் குறித்த  பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் தான் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு சற்று மாற்றமாக சாய்ந்தமருது நகர சபையை கொடுக்கின்ற போது எஞ்சிய பிரதேசங்கள் யாவும் கல்முனை மாநகர சபையாக இருப்பதற்கான மாற்று ஏற்பாடு செய்ய முற்படுகின்ற போது கல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் மேலாதிக்க சபையாக இல்லாமல் போகும் என்ற அச்ச அபாய நிலை ஏற்படாது என்பதை புள்ளி விபரத்துடன் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். 

இதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் மூலம் மிகவும் அவசரமாக அதாவது இந்த ஜனாதிபதி தேர்தல் திகதி அறியத்தரும் முன்பு சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை சந்தித்தார்கள். 
அவ்வாறானதொரு கட்டத்தில் இடை நடுவில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டு அதன் விளைவாக  ஏற்பட்ட தடங்களினால் தாமதம் ஏற்பட்டது. 

நான் இவ்விடயம் தொடர்பில் சாதகமான கருத்தை தெரியப்படுத்திவிட்டேன். பள்ளிவாசல் நிர்வாகம் என்னை சந்திப்பதற்காக கொழும்புக்கு வந்து போகின்ற நிலைமை நீடித்து கொண்டு போனது. இவ்வாறிருக்க கல்முனை சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேசி அவர்களுடன் ஓர் இணக்கப்பாட்டை அடைந்துகொள்ள முயன்றோம். 
அது சம்பந்தமாக சரியான முடிவை எட்டவில்லை. இந்நிலையில் தான் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பிற்கும் நட்டம் ஏற்படாதவாறு தீர்க்க வேண்டும் என்பதில் நான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். மிக விரைவில் நான் இதனை சாதகமாக்கி தருவேன். 

முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்திருக்கின்ற ஜனாதிபதி வேட்பாளரை தேற்கடிப்பதன் மூலம் கடந்த முறை தங்களுக்கு கிடைத்த 12000 வாக்குகளை வைத்து நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடித்து விடலாம் என எண்ணுவது  அபத்தமான விடயமாகும். அதிலும் நீங்கள் செய்ய நினைப்பது முஸ்லிம் காங்கிரஸை தோற்கடிப்பது தான்.  இருந்தபோதிலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிவிடுவார்.

 இது ஒரு ஆறாத  புண்ணாக ஆகிவிட்டது. கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்குமிடையில் பிரச்சினையாக மாறிவிடாமல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸை தவிர வேறு யாருக்கும்  நாட்டம் இருக்க முடியாது. இது முஸ்லிம் காங்கிரசை உருவாகிய மண். இரண்டு ஊர்களிடையேயுள்ள சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் கட்சியின்  தலைமை நேர்மை தவறாது நடந்துகொள்ளும்.

அமைச்சரவை பத்திரமொன்ற சமர்ப்பித்து முதற் கட்டமாக கல்முனை பிரதேச சபைக்குள் முஸ்லிம் கிராமசேவகர்  பிரிவுகள்  28 இருக்கத்தக்கதாக தமிழர்களுக்கும் உரிய கிராமசேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட்டு இதை எப்படியாவது பிரித்து எடுக்க வேண்டுமென்ற முயற்சியில் 8 பிரிவுகளை சர்ச்சைக்குரிய பிரிவுகள் என அடையாளப்படுத்தி எவ்வாறு எல்லை வகுப்பது என்ற விவகாரத்தில் தான் இந்த இழுபறி நிலை  நீண்டுகொண்டு போனது. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். 

கிராம சேவகர் பிரிவுகளின்  எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.  அதை தொடர்ந்து மிக விரைவில் உரிய  நடவடிக்கைகள் முன்னெடுபக்கப்படும். 6 மாத கால அவகாசத்திற்குள் அவ்விடயம் தீர்க்கப்படும் என அமைச்சரவை பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஜனாதிபதி தேர்தலில் சாய்ந்தமருது மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வெற்றுவாக்குறுதிகளை வழங்க முடியாது. எதிர்வரும் பல தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த விவகாரம் சவாலாக இருக்கின்றது. கட்சியின்  இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள விவகாரத்தில் சில சில்லறை சக்திகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது. என்ன நோக்கங்களுக்காக அவை செயற்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுள்ளோம். 

எல்லோருக்கும் அரசியல் ஆசை வந்து அந்தஸ்த்தை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால்
எங்களுடைய ஒற்றுமையை முழுமையாக காட்டியாக வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம். அதற்காக ராஜபக்ஷ குடும்பத்தை பகைத்து கொள்ள நேரிடும் என்பது பொருள் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் என்பது யாருடைய சொத்துமல்ல. அது பிரேமதாஸவின் சொத்துமல்ல, ராஜபக்ஷவின் சொத்துமல்ல, இது மக்களது சொத்து. மக்களது இயக்கமே முஸ்லிம் காங்கிரஸ் என்றால் மிகையாகாது. 

முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்ற அரசியல் அந்தஸ்த்து சில சமயங்களில் அது மேற்கொள்ளும் முடிவுகளுக்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் ஆதரவாக நிற்கின்றார்கள். இது இந்த சமூகத்தின் அபிலாஷைகள் எவ்வாறானவை  என்பதை  சரியாக எடைபோட்டு காட்டிவிடும். முழு நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலவரம் கடந்த ஏப்ரல் தாக்குதலிற்கு பிற்பாடு சாய்ந்தமருதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமானது எங்கிருந்தோ கூலிக்கு அமர்த்தப்பட்ட கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட விஷம செயலினால்  காத்தான்குடியை போல் சாய்ந்தமருது பிரதேசமும்  வித்தியாசமான கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றது.
  
இருப்பினும் கூட சாய்ந்தமருது மக்களே அக்கும்பலை காட்டிக்கொடுத்தனர். அதை முழுமையாக உளவுத் துறையும் அரசாங்கமும் உணர்ந்து கொண்டது. இன்று இனவாத ராஜபக்ஷ கும்பலோடு இருக்கும் அனைவரும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கும் விஷமப் பிரச்சாரங்களை நோக்கும் போது, இவர்களை ஆட்சியில் அமர்த்தினால் முஸ்லிம் சமூகம் விடிவை தொட்டுவிடும்  என்று நினைப்பது உசிதமானதல்ல. 

சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளோடு  விளையாடி வாக்குகளை சூறையாடிவிடலாம் என்று கபட நாடகங்களில் ஈடுபடுவோருக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டிய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு தமது வாக்குகளை தவறாது வழங்கி அவரை வெற்றி பெறச் செய்து முழு முஸ்லிம் சமூகத்திற்கும் விடியலை பெற்றுக் கொடுப்போம் என்றார் .

No comments

Powered by Blogger.