Header Ads



எந்தவொரு அடிப்படைவாத, இனவாத சக்திகள் மீண்டும் எழுவதற்கு இடமளிக்கமாட்டோம் - கோத்தபாய

நாட்டிற்காக பாடுபடுகின்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் படையினரை சட்டத்திற்கு முன்பாக பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை தமது அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போகச்செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிக்கி பல்வேறு புலனாய்வு மற்றும் படை அதிகாரிகள் சிறைதள்ளப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை மீண்டும் கடுந்தொனியில் வெளியிட்டுள்ளார்.

இரத்தினபுரி கலவானையில் இன்று -08- இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“மக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கரிசனை கொண்டவர்கள். இந்த நாட்டில் நிலவிய 30 வருடப் போரை மட்டுமன்றி மீண்டும் அப்படியொரு நிலைமை ஏற்படாத வகையிலான திட்டங்களையும் அமுல்படுத்தியிருந்தோம்.

ஆனாலும் இந்த அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிகின்ற மற்றும் போரை நடத்திய படையினரை கவனஞ்செலுத்தாதிருந்தமை மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பு குறித்து எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

அதேபோல இந்த நாட்டிற்கு புலனாய்வுப் பிரிவு அவசியம். ஆபத்துக்கள் குறித்து அரசாங்கத்திற்கு முதல் எச்சரிக்கை விடுப்பவர்கள்தான் அவர்கள்.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த அரசாங்கம் சிறை தள்ளியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டிலிருந்து கே.பி என்கிற குமரன் பத்மநாதன், மீண்டும் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்குவதாக சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

சிறிது காலத்தில் அவரையும் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக கைது செய்து நாடு கடத்திவந்து, அவருக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். புலனாய்வுப் பிரிவு அப்படித்தான் அன்று செயற்பட்டது.

ஆனால் இந்த அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் அனைத்து விபரங்களையும் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள் வழங்கியிருந்த போதிலும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியது.

தூரநோக்கு இல்லாத அரசாங்கமே இது. ஆனாலும் எமது அரசாங்கத்தின் கீழ் தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்.

நாட்டிற்காக சேவை செய்கின்ற அதிகாரிகள், படையினருக்கு சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி மீண்டும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.

மீண்டும் எந்தவொரு அடிப்படைவாத மற்றும் இனவாத சக்திகள் எழுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியளிக்கின்றோம்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.