October 20, 2019

கல்முனை மீனவரின், மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள்

”கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. 
ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. 
அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. 
வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...”. 
1964ஆம் ஆண்டு கவிஞர்வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் ரி.எம்.செளந்தரராஜன் பாடி எம்.ஜி.ஆரின் படகோட்டி திரைப்படத்தில் வந்த “தரைமேல் பிறக்கவைத்தான்“ என்ற பாடலின் சிலவரிகள்.. 
கடற்றொழில் செய்யும் மீனவரின் அன்றாடவாழ்க்கையை தத்ருபபமாக எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல் அது. 
“வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு“ என்று உரிமையுடன் மகிழ்ச்சியோடு கூறும் அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது மறக்கமுடியாத சில 
துன்பியல் சம்பவங்களும் நடந்துவிடுவதுமுண்டு. 
அந்தவகையில் கடந்த ஒருமாத காலத்தில் காணாமல்போய் 21நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்முனைப்பிரதேச மீனவர்களின் சம்பவமும் இப்பாடலுக்கு விதிவிலக்கானதல்ல. 
ஆழ்கடலில் காணாமல்போன கல்முனை மீனவரின் செய்திகள் கடந்தவாரம் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தன.

இருந்தபோதிலும் 21நாட்களின் பின்னர் அவர்களில் இருவர் மீட்டுவரப்பட்டமையும் ஒருவர் நடுக்கடலில் மரணித்திருந்தமையும் அக்கதையை முடிவுக்கு கொண்டுவந்தது. 
“முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை“ என்று கவிஞர்வாலி அப்பாடலை முடிக்கின்றதும் எத்துணை பொருத்தமானது. நடுக்கடலில் உண்ண உணவின்றி உயிரை கையில் பிடித்துக்கொண்டு 21 தினங்களைக் கடத்துவதென்பது சாமானியமானதொரு காரியமல்ல. அவ்வாறு நடுக்கடலில் தத்தளித்தது படகு மட்டுமல்ல, அவர்களின் உயிர்களும்தான்.
ஆம் கடந்த 18ஆம் திகதி மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து ஆழ்கடலுக்கு இயந்திரப்படகில் சென்ற சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் (வயது36) இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது37) காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன் (வயது47) ஆகிய மூவர் காணாமல் போயிருந்தார்கள். 
இங்கு குறிப்பிடப்பட்ட மாளிகைக்காடு என்பது அம்பாறை மாவட்ட கரையோரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட ஒரு குக்கிராமமாகும். முற்றுமுழுதாக முஸ்லிம்களைக்கொண்டகிராமமாகும். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட  எல்லைக்குள் வருகின்ற கிராமமாகும்.இப்பகுதி மீனவர்கள் பொருந்தொகையானோர் ஆழ்கடலுக்குச்சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருவதொன்றும் புதினமல்ல. எனினும் அன்று ஆழ்கடலுக்குச்சென்று வீடுதிரும்பாத மூன்று மீனவரின் செய்தி புதினமாக மாறியது. இந்தச்செய்தி 20ஆம் திகதி தொடக்கம் ஊடகங்களில் பரவலாக அடிபட்டு வந்தன. அவர்கள் கடந்த 18ஆம் திகதி கடலுக்குச்சென்று பல நாட்களாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் படகு உரிமையாளர் நலன் விரும்பிகள் அரசியல்பிரமுகர்களின் முயற்சிகளால் தேடுதல்கள் பலகோணங்களிலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அவர்கள் என்னவானார்கள் என்று  கூடத்தெரியாதளவில் தேடுதல்களால் பலன்கிட்டவில்லை. 
நாள் ஆகஆக குறித்த மீனவர்களின் குடும்பங்களை பயம் பீதி இயல்பாகவே தொற்றிக்கொண்டது. இந்நிலையில் இவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி கவலையுடன் வீதிக்கு வந்ததை மறுக்கமுடியாது. அதிலும் காரைதீவு 11ஆம் பிரிவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன் (வயது47) என்பவரின் குடும்பநிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியிருந்தது. மனைவி மற்றும் வயதுக்குவந்த 3 பெண்பிள்ளைகள் 1ஆண்குழந்தையுடன் பரிதவித்தது அக்குடும்பம்.

அந்த நிலையைக் கருத்திற்கொண்டு காரைதீவுப் பிரதேசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் அதிரடியாகச்செயற்பட்டு விசேட கூட்டத்தில் அக்குடும்பத்திற்கு முதற்கட்டமாக ஒருதொகை நிதியைக்  கையளிப்பது என்று தீர்மானித்து சக உறுப்பினர்கள் சகிதம் குறித்த மீனவரின் வீட்டுக்குச்சென்று ஆறுதல் கூறியதுடன் நிதியையும் கையளித்தது.  எமக்கு எல்லாமே அவர்தான்! அந்தநேரம் அவரது மனைவி சோமசுந்தரம் ஆனந்தமலர் (வயது45) கவலை சோகம் தோய்ந்த முகத்துடன் கூறுகையில்.  எனக்கு 4 பிள்ளைகள். சாதனா (வயது22) உயர்தரம் தோற்றி 2சி1எஸ் பெற்றவர். ஜீவிதா (வயது19) இம்முறை உயர்தரம் தோற்றியவர். காயத்ரீ (வயது17) தற்போது உயர்தரம் கணிதப்பிரிவில் பயின்றுகொண்டிருக்கிறார். கடைக்குட்டி துஷாந்த் (வயது07) இரண்டாம்வகுப்பு கற்கிறார். 
இவர்கள் நால்வருடன் இன்று நான் கண்ணீரில் காலத்தைக் கழிக்கிறேன். எமக்கு எல்லாமே அவர்தான். அவர் கடலுக்குச்சென்று கொண்டுவருவதில்தான் காலத்தைக் கடத்துகிறோம். பிள்ளைகளின் படிப்புச்செலவும் அதற்குள்தான். அவரில்லாவிடின் நாம் இல்லை. சம்பவ தினம் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சாப்பாட்டுப் பார்சலுடன் வீட்டைவிட்டு புறப்பட்டு வழமைபோல சாய்ந்தமருது மீனவர்களுடன் ஆழ்கடலுக்குச்சென்றார்.
ஒருநாள் போனால் மறுநாள் காலை வருவது வழக்கம். ஆனால் அவர் காலையில் வரவில்லை. நான் அவரது முதலாளியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். “இன்னும் போட் வரவில்லை“ என்றார். 
மீண்டும் பகலில் கேட்டேன். அதே பதில் வந்தது. இரவாகியதும் எமக்கு பயம் தொற்றிக்கொண்டது. அழுகை துக்கம் தொண்டையை அடைத்தது. தொலைபேசி எடுத்துக்கேட்டபோது “போட் இன்னும் வரவில்லை. வேறொரு போட்டை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளேன். பார்ப்போம்“ என்றார். மறுநாள் எமது உறவினர்கள் அங்கு சென்றார்கள். அவருடன் மேலும் இரண்டு சகோதர முஸ்லிம் மீனவர்களும் சென்றவர்கள் வரவில்லை என்று தெரியவந்தது. பின்பு அவர்கள் பொலிஸ் தொடக்கம் அரசியல்வாதி கள் வரை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள். நாமும் சம்மாந்துறைப்பொலிசில் சென்று முறையிட்டுள்ளோம் என்றார் அவர். அன்று இவ்வாறு கூறியபோது பின்னர் மரணத்துடன்கூடிய ஒருவிபரீதம் இடம்பெறும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஏனைய மீனவருக்கு கிடைத்த அதிஸ்டம் இந்த மீனவருக்கு கிடைக்கவில்லையென்பது துரதிஸ்டம்தான்.  கண்டுபிடிக்கப்பட்டசெய்தி..கடந்த ஒன்பதாம் திகதி கரையோரப்பிரதேசமெங்கும் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. காணாமல்போன மீனவர்களின் படகு சர்வதேச கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக. குறித்த மீனவர்கள் சென்ற இயந்திரப்படகு சர்வதேசகடற்பரப்பில் 21 நாட்களின் பின்னர் கடந்த செவ்வாயன்று (8) மாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இந்தநிலையில் சர்வதேச கடற்பரப்பில் செயலிழந்து 0222 என்ற இலக்கமுடைய இயந்திரப்படகு ஒன்று மீனவர்களுடன் தத்தளிப்பதாக தென்பகுதி மீனவர்கள் சிலர் மாத்தறை கடற்படை தலைமையகத்திற்கு தகவல்கொடுத்ததனர். அதேவேளை தென்பகுதி மீனவர்களின் படகு குறித்த நிர்க்கதியாகவிருந்த படகினை இழுத்துகொண்டுவந்து கடந்த (9) புதன்மாலை திருமலைக்கடற்கரையில் சேர்த்தனர். மீனவர்களின் குடும்பங்கள் அச்செய்தியை அறிந்ததும் அடைந்த மகிழச்சிக்கு அளவேயில்லை. அதுவரை எவ்வித தகவலுமில்லாமல் இறைவனை மட்டுமே நம்பி பிரார்த்தனையில் அரைகுறை உணவுடன் சோகத்துடன் நெஞ்சில் பதகளிப்புடன் காலத்தைக் கடத்திவந்த அக்குடும்பங்களுக்கு அச்செய்தி நெஞ்சில் பால்வார்த்தது போலிருந்தது.
படகுச்சொந்தக்காரரும் உசாரானார். மறுநாள் (10) மாலையில் அப்படகு கட்டி இழுத்துவரப்பட்டு திருகோணமலைத்துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் 3 மீனவர்களுள் இருவரே அரைகுறை உயிருடன் மீண்டுவந்ததாக செய்தி கிடைத்தது. காரைதீவைச்சேர்ந்த மீனவர் சிறிகிருஸ்ணன் நடுக்கடலில் மரணித்ததாகக் கூறப்பட்டது. குறித்த மீனவர் மரணமாகிய செய்தியை தவிசாளர் ஜெயசிறில் மீனவரின் வீட்டுக்குச்சென்று கூறியதும் வீடு ரணகளமாகியது. படகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு மகிழ்ச்சியுடனிருந்து அப்பாவும் வருவார் என்று எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு இச்செய்தி பேரிடியாக மாறியுள்ளதுடன் தாழாத சோகத்தில் தேம்பிதேம்பி அழுதனர். அந்தக்காட்சியை யாராலும் ஜீரணிக்கமுடிாதிருந்தது. அது அனைவரையும் நெகிழச்செய்தது. இறைவன்வகுத்த நியதி அது. ஆக கடலுக்குச்சென்ற காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணன் கரைக்கு திரும்பவில்லையென்ற செய்தி அக்குடும்பத்திற்கு பேரிடியாக மாறியது என்பதற்கு அப்பால் மனிதாபிமானம்கொண்ட அனைவரது உள்ளங்களையும் நெகிழ்ச்சியடையவைத்தது. ஒரே சோகமயம். ஊரவர்கள் மரணவீட்டிற்கு சென்றுவரலாயினர்.  

உயிர்தப்புவோம் என்று எண்ணவில்லை... அதேவேளை அரைகுறை உயிருடன் மீண்ட சாய்ந்தமருது மீனவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது அவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: நாம் கொண்டுசென்ற   உணவு மூன்று நாட்களில் தீர்ந்துவிட்டது. பிறகு கடலாமையைப் பிடித்து இரத்தத்தை குடித்து இறைச்சியை அவித்துச் சாப்பிட்டோம். உயிர்தப்புவோம் என்று எண்ணவில்லை.என்று சாய்ந்தமருதைச்சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் றியாஸ் (வயது36) தழுதழுத்த குரலில் கூறினார். மீண்ட மற்றுமொரு மீனவர் இஸ்மாலெவ்வை  ஹரீஸ் (வயது37) உடல்உளரீதியில் மிகவும் பலயீனமுற்று பேசமுடியாதவராக இருந்தார். சாய்தமருதைச்சேர்ந்த ஜூனைதீன் கல்முனையில் திருமணம் முடித்து இருபிள்ளைகளின் தந்தையாவார். அவர் மேலும் கூறுகையில் நாம் மூவரும் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் காரைதீவு மாளிகைக்காடு துறையிலிருந்து வலைகளுடன் மீன்பிடிப்பதற்காக இயந்திரப்படகில் ஆழ்கடலுக்குச்சென்றோம். அங்கு வலைகளை இறக்கியபோது மாலை 6.30 மணியிருக்கும் கடும்காற்று வீசியது. சற்றுநேரத்தில் எமது படகு இயந்திரம் இயங்க மறுத்தது. மெனக்கெட்டுப்பார்த்தோம். பலனில்லை.இயந்திரக்கோளாறு காரணமாக படகை நகர்த்தமுடியாதநிலை. அக்கரைப்பற்றுக்கு அப்பால் செல்லும் தூரம். ஓரளவாக காடு தெரிந்தது. காற்று மிகவும் வேகமாக வீசியது. வலையை மீண்டும் ஏற்றினோம். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தோம். அப்போது சில படகுகள் எமது பக்கம் வந்தன. நாம் டோர்ச்லைற் அடித்து சிக்னல் காட்டினோம். என்றாலும் அவர்கள் கிட்ட வராமல் திரும்பிப்போய்விட்டார்கள். அவை நம்மட பகுதி படகுகள்தான்.
என்ன செய்வது எமது ஒற்றுமை அவ்வளவுதான் என நினைத்தோம். நாம்கொண்டுபோன சாப்பாடு 3 நாட்களில் முடிந்துவிட்டது. தண்ணீரும் இல்லை. பசி வயிற்றைக்கிள்ளியது. படகுக்கு அருகே கடலில் வரும் கடல் ஆமையைப் பிடித்து கழுத்தை அறுத்து இரத்தத்தைக் குடித்தோம். அதன் இறைச்சியை அவித்து உண்டோம்.தண்ணீர்த்தாகம் என்பது சொல்லிவேலையில்லை. தொண்டை மோசமாகும்தருணத்தில் கடல்நீரை மிகச்சிறியளவில் பருகினோம். பின்னர் களைப்பு வரும். இப்படி நாட்களை பயத்துடன் கடத்தினோம். வீடு, மனைவி பிள்ளை குட்டிகளையிட்டு மிகவும் கவலையடைந்தோம். 
மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள். ஒருநாள் இரவு எங்கள் படகுக்கு நேராக கப்பலொன்று வந்துகொண்டிருந்தது. அது வந்த வேகத்தில் எங்களை மோதித்தள்ளியிருக்கும். அன்றே போய்ச்சேர்ந்திருப்போம். எனினும் நாம் எமது டோர்ச் லைற்றை தொடர்ந்து அடித்து சிக்னல் காட்டினோம். இறைவன் பெரியவன். இறுதி நேரத்தில் அக்கப்பல் தன்திசையை மாற்றிச்சென்றது. அப்போதுதான் மூச்சு வந்தது. உணவு நீரில்லாமல் அதிகமாக சோர்ந்து இருந்த சந்தர்ப்பங்களில் கடலில் இறங்கி நீரில் சில நிமிடங்கள் மிதப்போம். அப்போது ஓரளவு உற்சாகம் தெம்பு வரும். பத்தாவது நாள் எமக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பத்தாவது நாளில் எம்முடன்வந்த தமிழ்சகோதரர் சிறிகிருஸ்ணன் உழறினார். “எமது வீட்டில் பலகாரம் செய்து வைத்து என்னை பார்த்துக்ெகாண்டிருக்கிறார்கள். நான் வீட்ட போகமாட்டேன். கோயிலில் பொங்கல் சாப்பிடுவேன்.“ என்றார். அதிகாலை எமக்கே தெரியாமல்மரணித்திருக்கிறார். அவரது உடலை 6 நாட்கள் படகில் வைத்திருந்தோம். கடும் நாற்றமெடுத்தது. 8வது நாளில் எமது மிதக்கும்உடையில் உடலைச் சுற்றி கடலில் விட்டோம். மையத்தை (உடலை) கடலில்இறக்கினோம். அதைச் செய்யும்போது உயிர் போவது போல  இருந்தது. 21வது நாளில் சகோதர சிங்கள மீனவரின் படகு அங்கு வந்து எம்மைக்கண்டது. அங்கே எமக்கு உணவு தண்ணீர் தந்து ஆதரித்தார்கள். பின்பு எம்மை அவர்கள் படகில் ஏற்றியதோடு எமது படகையும் கட்டியிழுத்துவந்தார்கள்.
படகு திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துசேர்ந்ததும் துறைமுக பொலிசார் எம்மை அழைத்து ஆஸ்பத்திரிக்குக்கொண்டுசேர்தனர். பின்னர் சிகிச்சயைளிக்கப்பட்டது. அவர்கள் சம்மாந்துறைப்பொலிசாரிடம் ஒப்படைத்து பின்னர் வீடு திரும்பினோம். மரணித்த சகமீனவருக்கு இனமதபேதமற்று உதவுங்கள். மீனவரிடையே ஒற்றுமை வேண்டும். 
நவீன தகவல்தொழினுட்பசாதனங்கள் ஆழ்கடல் மீன்பிடிக்குச்செல்லும் படகுகளுக்கு வழங்கவேண்டும் என்றார். இனி வாழ்க்கையில் கடலுக்கே செல்லமாட்டேன். 3 பெண்பிள்ளைகளின் தந்தையான மீனவர் ஹாரிஸ் (வயது37) கூறுகையில். 36அடி நீளமுடைய எமது இயந்திரப்படகில் 30லீற்றர் டீசல் இருந்தது. 5லீற்றர் குடிதண்ணீர் இருந்தது. ஒருநாளைக்குரிய சாப்பாடு. மற்றும் பணிஸ் வாழைப்பழமிருந்தன. மாளிகைக்காட்டுத்துறையிலிருந்து பிற்பகல் 2.20மணியளவில் கடலுக்குள்சென்று தொழிலில் ஈடுபடமுனைந்தபோது இயந்திரம் பழுதடைந்தது. காற்றடித்த திசையில் படகு சென்றது. எம்மிடமிருந்த கைத்தொலைபேசிகள் சிக்னல் இல்லாமையினால் இயங்கமறுத்தன. இவ்வாறு 21தினங்கள் செய்வதறியாது உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காலத்தை பயபீதியுடன் கடத்தினோம். இனி வாழ்க்கையில் கடலுக்கே செல்லமாட்டேன் என்றார். மறுவாழ்வு புனர்ஜென்மம் எடுத்த அவர்கள் மேலதிகமாக கதைக்கவில்லை. மிகவும் களைப்புற்றவர்களாகவிருந்தனர். கடற்றொழில் நீரியல்வள உத்தியோகத்தர் எ.எல.பதுர்சமன் தெரிவிக்கையில்  முறைப்படி பதிவுசெய்யும் மீனவர்களுக்கு உரியவசதிகளை நாம் செய்து கொடுக்கிறோம். 

ரேடியோ கொம்மினகேசன் எனும் செய்மதி தொடர்பாடல்வசதி வழங்கப்படும். அதேபோன்று படகு கண்காணிப்பு அமைப்பு மூலம் படகுகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
மேலும் கடலில் செல்வோருக்கு படகுசெலுத்தும் பயிற்சியை வழங்குகிறோம். ஏதாவது இடர்வந்தால் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எவ்வாறான உணவுகளை உண்ணவேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம் உதாரணமாக சிவப்பு இரத்தத்தையுடைய மீனை உண்ணக்கூடாது வெள்ளைநிற இரத்த மீனை உண்ணலாம். அவல் கொண்டுசெல்லலாம். 10வகையான கொடிகளுள்ளன. அவற்றைக்கொண்டுசெல்லவேண்டும்.
எனினும் பல மீனவர்கள் இதனை அலட்சியம் செய்வதனால் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதுமுண்டு. என்றார். அதேவேளை மீனவரின் கருத்துப்படி எமது பிரதேச படகுகளுக்கு செய்மதி தொடர்பாடல்வசதிகள் வழங்கப்படுவதில்லை. போதிய தொலைத்தொடர்புவசதிகள் செய்வதில்லை.நவீன சாதனங்கள் தரப்படுவதில்லை. நவீன மீன்பிடி நுட்பங்கள் சொல்லித்தரப்படுவதில்லை சொல்வதில்லை என அவர்களும் குறைகூறினர்.
வி.ரி. சகாதேவராஜா

2 கருத்துரைகள்:

really so sad about them, we have to pray for that family. and time to support them,,,,

Please help them as long as possible

Post a comment