Header Ads



வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை

முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து நிலைமையை தணிக்க முயற்சிக்காவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா நாட்டில் இரத்தம் சிந்தப்படுவதையோ, மக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதையோ தடுக்க முடியாது என்றும் மல்வத்துப்பீடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. முல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறிச் செயற்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள், தலைமை விகாரையின் பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டதோடு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் நீதிமன்ற தடையுத்தரவை மீறிச் செயற்படும் பிக்குமார்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கத் தவறினர். பிக்குமார்களின் இந்த செயற்பாட்டைக் கண்டித்து முல்லைத்தீவு மற்றும் ஏனைய தாயகப் பகுதிகளில் வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வவுனியா மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் நேற்றைய தினம் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்றைய தினம் மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது. இப்படிப்பட்டவர்கள் தடிகளில், பொல்லுகளிலும், கத்திகளிலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர். இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்களாகிய இவர்களில் யாராவது ஒருவர் மரணமடைந்தால் அவரது புகழுடல் தகனம் செய்யப்படும்.

யாழ்ப்பாணம் குருநகர் விகாரையில் இது இடம்பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியை சிலர் கபளீகரம் செய்து கோவில்களை அமைத்து புராதன இடமாக அந்த தலத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அப்படி செய்து தான் சட்டத்தை எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அப்படியொரு சட்டம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. வடக்கில் சட்டத்தரணிகள் வீதியில் போராட்டம், சட்டத்தை மீறிய பிக்குகளை கைது செய்ய வலியுறுத்து, தமிழரின் நிலத்தில் சிங்களக் குடியிருப்பு, விகாரைகளுக்கு அனுமதியில்லை, விகாரையானது கோவில் சம்பிரதாயங்களுக்கு பாதிப்பு என்று வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நாடு, ஸ்ரீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. அப்படியிருந்தால் தான் நாடு சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும். இந்த சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர். திருகோணமலையில் பிக்கு சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன். இப்படி சம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்துவருகின்றனர்.

இதனை எமக்கு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள். இதுதான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள்.

ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்.

கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இரத்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்? ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்துவிடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 comments:

  1. அடுத்தவன்ட காணிக்குள்ள அத்துமீறி நுழைந்து விட்டு பேசுற பேச்ச பாரு.. அஹிம்சை யாம் பொறுமையாம்...

    ReplyDelete
  2. Ha ha ha what a statement

    ReplyDelete
  3. பிக்கு சார்மார்களே, மரியாதை என்பது கொடுத்துவாங்க வேண்டும், பயமுறுத்தியல்ல.
    நல்ல அடிபோட்டுவிட்டு பின்னர் பணம்-பதவிகளை கொடுத்தால் கும்பிடுபோடுவதற்கு இலங்கையில் இன்னொரு இனம் இருக்கிறார்கள்

    ReplyDelete
  4. waitting for Mr. Ajan's comments

    ReplyDelete
  5. அஜன் அப்படியெல்லாம் பேசாதேயும் பிக்குசார்களுக்கு. அவங்க வடக்குல உங்களுடனே இருக்கபோவதாக கேள்வி இனி உங்களுக்கு நல்லது நடக்கும்

    ReplyDelete
  6. @truth-won, உங்கள் வரவேற்புக்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.