Header Ads



கப்ரு வேதனை, பற்றிய சில ''நபிமொழிகள்''

மனிதன் இறந்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு. பிறகு அவனுக்கு அங்கே என்ன நடக்கும்? என்ன ஆகும்? என்பதை நபிமொழிகள் மூலமாக நாம் அறிய முடியும். மண்ணறையில் வேதனை செய்யப்படுபவர்களும் உண்டு, வேதனையிலிருந்து பாதுக்காப்பு பெற்றவர்களும் உண்டு.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை என்று ஒரு நபிமொழி கூறுகிறது. நாமும் ஒவ்வொரு தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் அல்லாஹ்விடம் கோரவேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு (இறுதி நாள்) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி: 1314 )

o எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (அல்குர்ஆன் 20:124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டணை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு ஹிப்பான் 3174)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5503)

o அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்தார்கள் :

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரையாற்றும் போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். (நூல்: புகாரி 1373)

o உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.

''சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?'' என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள் கூறினார்கள். ” மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும்.

இதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ” எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் ” என்று உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஹானிஃ ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல்: திர்மிதி 2230)

o மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும்.

“நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 991)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது;

மதீனா யூதமூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்தபோது) ''மண்ணறைவாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர் '' என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ''அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இருவரும் உண்மையே சொன்னார்கள். [மண்ணறையிலிருக்கும் பாவிகள்] கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்) தனை எல்லா மிருகங்களும் செவியுருகின்றன'' என்று சொன்னார்கள். அதற்குப்பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை. (ஆதாரம்: புகாரீ)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது; ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.

===========


நற்செயல்கள் எதுவும் ஒருபோதும் காப்பாற்ற முடியாது, மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்கள்.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது;

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றபடுவார்)'' என்று கூறினார்கள் . மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களது நற்செயல் காப்பாற்றாது?) என்று வினவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''[ஆம்] என்னையும்தான், அல்லாஹ் (தனது) அருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு ''(ஆகவே) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். [எதிலும்] நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைப்பிடியுங்கள்) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்று சொன்னார்கள். (ஆதாரம் .. புகாரீ)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.

‘அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 924)

o இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார் :

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று கேட்டதும், ‘இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 1361)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும்க ப்ரின் வேதனையில் இருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யாமல் இருததில்லை 
என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிகிறார்கள்.  

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B )க்க மினல் ஜுபு(B )னி வ அவூது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வ அவூது பி(B )க்க மின் பி(F )த்னதித் துன்யா வஅவூது பி(B )க்க மின் அதாபி(B )ல் கப்(B )ரி.

பொருள் :

இறைவா! கோழைத்தனத்தை விட்டும், தள்ளாத வயது வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் அனைத்து சோதனைகளில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ணறையின் வேதனையில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல் : புகாரி 2822 )

1 comment:

  1. What if anyone accidentally burn in into ashes
    Or drawn in sea?
    Not for joke
    Reply pls.

    ReplyDelete

Powered by Blogger.