May 26, 2019

இஸ்லாத்தில் ஒற்றுமைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும், உயர் விழுமியங்கள் உள்ளன - குருமுதல்வர் AS ரூபன்

நடந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தொடர்ந்தும் மெருகூட்டி பேசிப் பேசி நோயாளிகளாக மாற வேண்டிய தேவைப்பாடு இல்லை என தென்னிந்திய திருச்சபையின் கிழக்கு பிராந்திய குரு முதல்வர் அடிகளார் ஏ.எஸ்.ரூபன் தெரிவித்துள்ளார்.

தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் ஒருங்கிணைந்த சர்வமத சமாதான நிகழ்வு மட்டக்களப்பிலுள்ள விடுதியொன்றில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நடந்து முடிந்த கொடூரமான சம்பவங்களை நினைவூட்டி மெருகூட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அது மேலும் மேலும் வன்மங்களைத் தூண்டத்தான் வழி கோலும். சமாதான உடன்படிக்கையான பொறுப்பை நாம் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாம்,‪ பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், சீக்கியம் போன்ற மதங்களை நான் கற்பிக்கும் ஒருவர் என்ற வகையில் இஸ்லாத்தைப் பற்றியும் அல்குர் ஆனைப் பற்றியும் எனக்குச் சிறந்த புரிதல் இருக்கின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் மனிதருள் ஷைத்தான்களாக வாழ்வோரை எக்காரணம் கொண்டும் அடக்க முடியாது. அதேவேளை இஸ்லாத்திலே ஒற்றுமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்ற உயரிய விழுமிங்கள் இருக்கின்றன. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.

கடந்த 30 வருட காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளும் அரசாங்கத்திற்கும், மற்றைய எல்லோருக்கும் நன்கு தெரியும்.

போராட்டத்திற்காக உருவான பல இயக்கங்கள் இருந்தாலும் ஒரேயொரு இயக்கம் மாத்திரம் தான் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய சமூகத்திற்கு உள்ளேயே கொல்லப்பட்ட வரலாறுகள் நமக்குத் தெரியும்.

மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகையில் மாற்றுக் கருத்துக் கொண்ட வேறு அமைப்புக்களும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று சொந்த இனத்தையே அழித்த சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. அதேவேளை பள்ளிவாசலில் புகுந்தும் படுகொலைகள் நடத்தப்பட்டன.

சமீபத்திய அசம்பாவிதங்களை எடுத்துக் கொண்டால் தீவிரவாத சம்பவங்கள் இடம்பெற போகின்றதென்று இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுத் துறைக்கு நன்றாகத் தெரியும். அதனை அரசியல் சாயம் பூசுவதற்குப் பயன்படுத்தவே அரசியல் உயர்மட்டத்தில் உள்ளோர் எண்ணினார்கள்.

அரசியல் மயப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு இப்படியொன்று நடைபெற வேண்டும் என்பது தேவையாக இருந்தது. அதனால் தான் அவர்கள் இதனைப் பாரதூரமாக எடுக்கவில்லை.

தீவரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பை வழங்குகின்றோம் என்று கூறி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி விட்டு கடந்த ஒரு மாதகாலமாக என்ன நடந்தது என்பதை நாடே அறியும்.

எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் பகுத்தாராய்ந்து பார்த்து அடி மட்டத்தில் சமூக ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இனங்கள், மதங்கள் என்ற அடிப்படையில் பிளவுபட்டு விடாது அரசியல் சூழ்ச்சிகளுக்கும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் இடமளிக்காது அமைதிக்காகப் பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2 கருத்துரைகள்:

மிகச் சரியாக சொன்னார்.தங்களுக்குள் தாங்களே ஒரு இயக்கம் மட்டுமே இருக்கனும் என்பதக்காக புலிகள் நடத்திய சர்வதிகார,பாசிச கொலைகள்,Muslim மக்கள் மீது நடத்திய வெறித்தனமான,கோழைத் தனமாக கொலை வெறி இப்படியான காலத்தால் அழியாத உண்மைகள்.இப்படியான கேவலமான மிருகந்தான் பிரபாகரன்.சஹ்ரான்,பிரபாகரன் இருவரும் பினந்தின்னி கழுகுகல்

படித்தவன் படித்தவன் தான் ஐயா

Post a comment