Header Ads



புகைப்படம் எடுத்த 3 பேர் பயங்கரவாதத்துடன், தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது

வெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு இரத்தினபுரி பதில் மஜிஸ்ட்ரேட் மல்காந்தி வெகுணகொட உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் வசிக்கும் மொகமட் நப்ரான், மொஹமட் அவ்சான் மற்றும் கே. அனுஸ்க தில்சான் களுபஹன எனும் மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசியில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பவற்றிலுள்ள தொலைபேசி நிபுணர்களின் அறிக்கையைக் கோருமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த இளைஞர்கள் மூவரும் கடந்த (19) ஆம் திகதி இரத்தினபுரி அங்கம்மன பல்லேகந்த வனப் பகுதியிலும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் அதிநவீன 2 கெமராக்கள், மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிள் இலக்க தகடுகள் இரண்டு, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களின் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை பொது மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதனால், இராணுவ தலைக்கவசம், இலக்கத் தகடுகள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்களை கைது செய்யுமாறு சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான விசான் மைத்திரிபால, ஜனக சுமேதா ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனது தரப்பு சந்தேகநபர் வெசாக் தினத்தில் புகைப்படம் எடுத்ததற்கு நகரின் அழகைப் பதிவு செய்வதற்கே ஆகும் என மூன்றாவது சந்தேகநபர் அனுஸ்கா தில்சான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்ததாகவும் இன்றைய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது. dc

No comments

Powered by Blogger.