Header Ads



பாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து இன்றைய -22- தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள்  பிரதி அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட சுகாதாரம், போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன,

பொறுப்பேற்றலும், மன்னிப்புக்கோரலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 

அந்தவகையில் நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது. 

இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றௌம். 

பாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம். 

நாட்டில் பாரிய தொடர் குண்டுத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் முன்னரே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

அத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் நாட்டில் இத்தகைய பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியிருக்கினறது.

அதனைத்தொடரந்து கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நீதியரசர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வூபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.

இந்நிலையில் தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும். 

அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது? அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன்? பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

இந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. he is the top most terrorist created by US & Israel

    ReplyDelete

Powered by Blogger.