April 23, 2019

இலங்கை முஸ்லிம்களுக்கு, அடுத்து நடக்கப்போவது என்ன...?

குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள் போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து விட்டார்கள் இந்த போலி ஜிஹாதிஸ்ட்டுகள். கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும், உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரை கலத்தல் தொடர்பான பிரச்சினையின் போதும் தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எமது சமூகத்தின் “கற்பின் தூய்மை” யைப் பறைசாட்டி பந்திக் கணக்கில் எழுதி, சிங்களவர்களுக்கும் பகிர்ந்து விட்டு இன்று வெட்கத்தோடு அலுவலகத்தில் சிங்கள சக ஊழியர்களை சந்திக்கின்றேன்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் சமூக வலைதளங்களில் இதைத்தான் வலியுறுத்தி வலியுறுத்தி எழுதி வந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைக் கோழைகள் என்று எள்ளி நகையாடினார்கள். இன்று அந்த தைரியசாலிகள் முகநூலில் மன்னிப்புக் கேட்டு கெஞ்சி எழுதும் பதிவுகளைக்  காணும் போது இந்த ஆழ்ந்த துக்கத்திலும் சிரிப்புத்தான் வருகின்றது.

சிங்கள வெகுமக்களுக்கு ஐஸ்ஐஸ், தலிபான் போன்ற அமைப்புக்களின் உருவாக்கத்தின் பின்னணி, அதன் நோக்கம், இது போன்ற பயங்கரவாத இயக்கத்தின் உருவாக்கத்தில் உள்ள பிராந்திய அரசியல் நலன்கள், சியோனிஸ சதித்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்ற சர்வதேச இனமல்ல. இலங்கையில் மாத்திரமே அவர்கள் வாழ்கின்றார்கள். உண்டு, களித்து சந்தோசமாக வாழ விரும்புகின்றார்கள். இப்படியிருக்க, எமது அரபு நாட்டுப் பாணியிலான கலாச்சார மாற்றங்கள்,  எமது இயக்கச் சண்டைகள் போன்றவற்றை மத்திய கிழக்கில் அரங்கேரும் அவலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பீதியடைவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை, இஸ்லாம் கடமையாக்கிய இபாதாக்கள் மூலம் அது எதிர்பார்க்கும் உன்னத சமூக மாற்றத்தை நாம் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்லவில்லை. மாற்றமாக அடையாள இஸ்லாத்திற்கே (Symbolic Islam)  அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அந்நிய சமூகங்கள் மத்தியில் பீதிகளைக் கிளப்பினோம். எமக்கென்று ஒரு அழகான சோனக முஸ்லிம் கலாச்சாரம் இலங்கையில் இருந்தது. திடீர் திடீர் என்று புதிய புதிய மாற்றங்கள். பருவமடையாத பெண்களை எல்லாம் முகம் மூக வைத்தது, உலமாக்கள் மாத்திரம் அணிய வேண்டிய ஜூப்பா என்ற  ஆடையினை கண்ட கண்ட காவாலிகள் எல்லாம் அணியத் தொடங்கியது, தெருவுக்குத் தெரு பள்ளிவாயல்கள்,  எல்லாப் பள்ளிகளிலும் போட்டிக்குப் போட்டி ஒலிபெருக்கிகள், இருக்கின்ற எல்லா ஆங்கிலப் பெயர்களிலும் இஸ்லாமிய ? இயக்கங்கள், புதுப்புது பத்வாக்கள்,  சுவர்க்கத்துக்கான அழைப்புக்கள், வழிகேட்டுப் பட்டங்கள். கூடப் பிறந்த சகோதரனுக்கே ஆயிரம் ரூபா கொடுக்காத பச்ச  உலோபிகளெல்லாம் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பேருக்கும், புகழுக்கும் பெரிய மாடுகளை உள்ஹிய்யா கொடுத்தல், வருடாந்தம் பல உம்றாக்கள். புற்றீசல் போல் மத்ரஸாக்கள், இஸ்லாமிய ? இன்டர்நெசனல் ஸ்கூல்கள். முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம், தரம், பரீட்சைப் பெறுபேரு எந்தவித அக்கறையும் இல்லாவிட்டாலும் மாணவிகள் முகம் மூட வேண்டும், மாணவர்கள் தாடிவைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாரத்தினைத் தூக்கிக் கொண்டு மல்லுக்கு நிற்றல், கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் ஹலால் ஸர்டிபிகட்.  நாம் எப்படியான ஒரு நாட்டில், சூழலில் வாழ்கின்றோம் என்று விளங்கவில்லை. விளங்கிய உலமாக்கள் “பிக்ஹூல் அவ்லவியாத்” என்ற முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களைக் கற்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பட்டம் “கோழைகள், பயந்தாங்கொல்லிகள், நவீன உலமாக்கள்”.

இதனாலேயே நாம் முகநூலில் எம்மால் முடிந்தளவில் எழுதினோம். நாம் ஒன்றும் ஆலிம்கள் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகளும் இல்லை. என்றாலும் பெரும்பான்மை சமூகத்தின் உளவியலை அப்போதே கற்று வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி முடிந்தளவில் எழுதினோம்.

சமூக வலைதளங்கள் ஆட்சி மாற்றத்தினையே ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் எமது சமூகம் அதனை எதற்காகப் பயன்படுத்தியது?. ஆளுக்கால் சேற்றை வாரியிறைத்தோம். இயக்கங்களாகப் பிரிந்து சண்டை பிடித்தோம். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் முர்த்த்த், முஷ்ரிக், காபிர் என்று முடிவுகளை வாரியிறைத்தோம். ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களோடு எம்மவர்கள் கொஞ்சிக் குலாவினார்கள். எச்சரித்தும் கேட்கவில்லை. அந்த  ஐஸ்ஐஸ் தரப்பில் உலமாக்கள்  என்ற போர்வையில் இருந்து கொண்டு பெரிய வீராவசனம் பேசிய “ஆதார நாயகர்” களின் பதிவுகளுக்குச் சென்று ஏதோ அவர்கள் அல்லாமா குல்லிகள் போட்டு ஹார்டிங் போட்டார்கள். தாம் விரும்பாத இயக்கத்தினரின் தனிப்பட்ட பலவீனங்கள், குறைகளை எல்லாம் பகிரங்கப்படுத்தினார்கள்.  அல்ஹம்து சூறாவுக்குப் பொருள் தெரியாத விடலைப் பசங்கள் எல்லாம் பத்வா கொடுத்த்த் துணிந்தார்கள். சகவாழ்வைக் கேவலப்படுத்தி எழுதினார்கள். குட்மோனிங் சொல்வது ஹராம், அந்நியருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது ஹராம், அவர்கள் தரும் பலகாரங்களைச் சாப்பிடுவது ஹராம். இப்படி அந்நிய சமூகங்கள் மீதான வெறுப்பினை இன்னும் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நிர்ப்பந்தமான ஒரு சூழலில் மங்கள விளக்கில் தீப்பந்தம் ஏற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உலமாக்களை நாட்கணக்கில் முகநூலில் கழுவி ஊற்றினார்கள். எல்லாவற்றுக்கும் “மீம்ஸ்” என்றும் பகிடி என்றும், சிரிப்பும், கூத்துமாக இருந்தார்கள். சமூகத்தின் சீரியஸான பகுதியினை நாம் எழுதினால் எம்மை நாட்கணக்கில் சீண்டுவார்கள். இப்படிக் கூத்தும் கும்மாளமுமாக காலம் கழித்தவர்கள் இன்று முகநூலில் அழுதுபுலம்புகின்றார்கள். இனி வௌளம் தலைக்கு மேலால் சென்று விட்டது.

இனியாவது இருக்கின்ற கௌரவத்தினைப் பாதுகாத்து மியன்மார் அளவுக்கு நாம் சென்று விடாமல் புத்தி சாதூர்யமான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். தீவிரவாதம் இல்லாத நல்ல தலைவர்களை  தெரிவு செய்வோம். அடையாள இஸ்லாத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்காமல் விழுமிய இஸ்லாத்திற்கு முக்கியத்துவம்  கொடுப்போம். முஸ்லிம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பி கல்வித் துறையில் முன்னேறுவோம். உம்றாக்கள், ஆடம்பர வீடுகள், ஆடம்பரத் திருமணங்கள் என்று பணத்தினை விரயமாக்காமல் சமூகத்தினை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால் மியன்மார் முஸ்லிங்கள் போன்று கப்பல்களில் நாடுகளைத் தேடித் தேடி தஞ்சம் அடைய நேரிடும். இதனை நான் சும்மா சொல்லவில்லை. நாளாந்தம் சிங்கள முகநூல் பக்கங்கள், வெப்சைட்டுக்களில் உள்ள ஆக்கங்கள், அதற்கு வரும்  சிங்கள இளைஞர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து சொல்கின்றேன். அடித்துச் சொல்வேன் சிங்கள இளம் சமுதாயத்தில் நூற்றிற்கு தொன்னூறு வீதம் எம்மை மிகவுமே வெறுக்கின்றார்கள்.

எமது ஜிஹாதிக் குஞ்சுகளுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது, உங்கள் தியாகத்தினால் நாம் இப்போது மிகவும் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து ? வாழ்கின்றோம். அதற்குக் கூலியாக  நீங்கள் சுவர்கங்களில்  கன்னிகளோடு நன்கு சல்லாபியுங்கள். இங்கு எமது பெண்களுக்கு பாதையில் போக முடியவில்லை. பர்தா கொச்சைப்படுத்தப்படுகின்றது. வாழக்கையிலேயே கேட்காத தூசனங்களால் துவட்டி எடுக்கப்படுகின்றோம். எம்பெருமானார் இனி இல்லை என்ற அளவுக்கு வசைபாடப்படுகின்றார். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கத்தில் நன்கு அனுபவியுங்கள்.

அதே போன்று, காத்தான்குடி போன்ற தனி முஸ்லிம் ஊர் சகோதரர்களுக்கு நாம் மிக அன்போடு வேண்டிக் கொள்வது, உங்களையும், உங்கள் ஊர்களையும் நாம் நேசிக்கின்றோம். நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் ஊர்கள் உங்களைப் போன்று முஸ்லிங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்கள் இல்லை. சுற்றி வர சிங்கள ஊர்கள். எமக்கென்று பாராளுமன்ற உறுப்பினர் எப்படிப் போனாலும், மாகாண சபை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களே இல்லை. எல்லாம் சிங்களவர்கள். கிராம சேவகர் முதல் பிரதேச செயலாளர் காரியலாம், மாவட்ட செயலகம், கல்விக் காரியாலயங்கள், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், வைத்தியசாலை டாக்டர்கள் முதல் நேர்ஸ் மார் எல்லாமே சிங்களவர்கள். ஆக, உங்கள் ஊர்களில் இருந்து சில செத்த மூளைகளால் உருவாக்கப்படும் இயக்கங்களின் குப்பைகளை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் நகர்த்துபவர்கள் தொடர்பில் அவதானமாக இருந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இன்றோ, நாளை என்றோ எனது மனைவி பிள்ளை பெற்றெடுக்க தயாராக இருக்கின்றார். அரச வைத்தியசாலைக்குப் போகவே முடியாது. அங்கு எம்மை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தனியார் வைத்தியசாலைக்குப் போவோம் என்கின்றார். ஒரு சாதாரண அரச ஊழியர் எப்படி தனியார் வைத்தியசாலைக்கு இலட்சங்களைக் கட்டுவது? ஓரளவு படித்த எங்களுக்கே வைத்தியசாலைகளில் இந்தக் கதியென்றால் பெரும்பான்மையாக இருக்கும் பாமர முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்ன ? சற்று சிந்தித்து செயற்படுங்கள்.

கடைசியாக, இந்தக் கொடூரத்  தாக்குதலை எம்மவர்கள் செய்திருக்கலாம். அல்லது வேறு பயங்கரவாத இயக்கங்கள், அல்லது அரசியல் குருகிய நோக்கம் கொண்டவர்கள் செய்திருக்கலாம். அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் பின்னணியாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், நாம் எமது சமூகத்தினை இனி வலுப்படுத்த வேண்டும். அதிக குருதி கொடை கொடுத்த சமூகம், அனர்த்தங்களின் போது எந்தவொரு இனமும் செய்யாத அளவு களப்பணி செய்ய சமூகம் இன்று கூனிக் குருகி நிற்கின்றது. நாம் எமது  பிழையான செயற்பாடுகளால் படைத்த இறைவனுக்கும்,  எம்பெருமானாருக்கும் களங்கத்தினை, கெட்ட பெயரை  வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே சுதாகரித்து மீண்டும் எழும்புவதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதனை புரிந்து கொள்வோம்.

19 கருத்துரைகள்:

Nothing to add, a very comprehensive analysis of our community all over the world, especially in SL. well said brother. Hope there is still some room to salvage our self.

well said brother, everybody should behave the way which you shared here. Good article anyway. Allah bless you.

யதார்த்தம். 'ஆதார குஞ்சுகளுக்கு' உறைத்தால் அபூர்வம்.

பள்ளிகளில் மேடைகளில் சுவர்க்கம் நரகம் மறுமை பற்றி பேசுவதைக் குறைத்து மனிதாபிமானம் மனச்சாட்சி மற்றவரை மதித்தல் ஏனைய மதங்களைக் கண்ணியப்படுத்தல் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பேசக்கூடிய சமய பிரச்சாரர்களை உற்பத்தி செய்வோம். அரபிகளின் உடைகளையும் கலாசாரத்தையும் பின்பற்றாமல் எமது நாட்டுடன், சுவாத்தியத்துடன் ஒத்துப்போகக் கூடிய உடைகளையும் கலாசாரத்தையும் கடைப்பிடிப்போம். இதற்கான கண்டிப்பான சட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவோம். முழு நாட்டு மக்களுக்கும் பொதுவான சட்டம் இருப்பதே ஜனநாயக நாட்டுக்குரிய சிறப்பாக உள்ளது அதனை நடைமுறைப்படுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். அடுத்த தேர்தல் வெற்றி பற்றி சிந்திக்காமல் அடுத்த பரம்பரை நிம்மதியாக வாழ்வது பற்றிச் சிந்திக்க வேண்டும். "நான் பசியோடிருந்தேன் நோயோடிருந்தேன் என்னைப் பார்க்க வரவில்லை" என்றே இறைவன் கூறுகின்றான். நான் பள்ளி கட்டி வைத்திருக்கின்றேன் ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை. மனிதன் மனிதனுக்கு செய்யவேண்டியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கின்றான்.

சகோதரரே உங்கள் கட்டுரை மிகச் சரியானது.ஆனால் காத்தான்குடி மக்களுக்கு மட்டுமல்ல,முழு Sri Lanka Muslim கழும் என கூறுங்கள்.ஏனென்ரால் இந்த சம்பவத்துடன் பல ஊர்களையும் சேர்ந்தவர்கள் தொடர்பு பட்டுள்லார்கல்.மாவனல்லை சிலை உடைப்பு,வன்னாத்திவில்லு வெடி பொருள் மீட்பு விடயங்கலில் சம்பந்தப்பட்டவர்கள்,கிழக்குக்கு வெளியே உள்ள எம்மவர்கல்.இனி எல்லோரும் பிரேதேச வாதத்தை தூக்கி வீசி விட்டு ஒன்ருபடவேண்டும்.இருக்கின்ர அனைத்து தவ்ஹீத் இயக்கங்களையும் மூடுவதக்கும்,இல்லாவிட்டால் அவர்களை நாம் எல்லோரும் சேர்ந்து அரசுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும்.அனைத்து ஊர் Muslim மக்களும்,ஜாமாத்தாரும் இனியும் தாமதிக்காது இந்த கருப்பாடுகலை கழைய வேண்டும்.இவ்வாறான நடவடிக்கைகள் மூலம்தான் மீண்டும் அடுத்தவர்கல் எம்மீது நம்பிக்கை கொள்வார்கள்

கட்டுரையாளரே கொஞ்சம் அதிகமான விசயத்தில் அரைகுறை அறிவுடன் கருத்து சொல்ரீங்க .
தட்கால உலக நடைமுறை அறிவு ரெம்ப குறைவு என் பது என் கருத்து டென்மாக்கில் குர்ஆனில் சிறுநீர் கழித்து காலால் மிதிக்கிறான் அது தண்டனைக்குரிய குற்றமில்லை மாறாக ஒருவருக்கு ஒரு அடி அடித்தால் அது குற்றம் .சோ குண்டு கவைத்து பிறருக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் விசயத்தோடு மட்டும் நில்லுங்கய் 100% அச்சுறுத்தலான புள் கவர் தலைக்கவசத்தை பற்றி சிந்திக்காமல் நிக்காf பற்றி கதைப்பது இதய வருத்தக்காரனின் கையிலிருக்கும் காயத்துக்கு மட்டும் வைத்தியம் செய்வது போலாகும்..
இப்படியான அறிவிளிகளுடன் சேராதீர்கள்

A remarkable article. So-called Muslims must understand the reality.

Every Muslim should read this Article this time. We dont need to follow any group. lets practice Islam as it is.

Can somebody please translate this article?

Absolutely correct. 9% Muslim in SL but 90% difference among us. We need brothers like you to save our society, young brothers, sisters and our kids.

Absolutely correct. 9% Muslim in SL but 90% difference among us. We need brothers like you to save our society, young brothers, sisters and our kids.

You're absolutely right! This article should be spread out across the Muslim society.

You're absolutely right! This article should be spread out across the Muslim society.

இந்த நிலைக்கு Jaffna Muslim பதில் சொல்ல வேண்டும். அடிப்படை பத்திரிகை தர்மம் எதையும் கடைபிடிக்காது இனவாதத்தை தூண்டும் செய்திகளை வெளியிட்டு வந்தீர்கள்.குறிப்பாக இந்தியாவில் எங்கோ மூலையில் நடக்கும் சம்பவங்களை திரிபு படுத்தி, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி குறிப்பாக இந்து மதத்தை இழிவு படுத்தும் செய்திகளை வெளியிட்டு ,அதற்கு இங்குள்ள அடிப்படைவாதிகளின் மத/இன விரோத பதிவுகளை எவ்வித தணிக்கையும் இல்லாமல் வெளியிட்டு இனவாதத்தை வளர்த்தீர்கள் . இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை அங்குள்ள முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை வைத்து இங்கு மதவாதத்தை வளர்த்தத்தையே செய்தீர்கள் .

Excellent! One of the very good article, which I've read recently. Very well expressed and very practical one.

I don't know who has written this great article but hats off!

This is a remarkable article. So-called Muslims must understand the reality. They are living in fantasy.

Post a Comment