Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரியின் இலச்சினையை, வரைந்த ஒஸ்மா கபூர்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகதெருவைச் சேர்ந்த உசைன் சாய்பு முஹம்மது – சுலைஹா தம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி அப்துல் கபூர் மகனாகப் பிறந்தார். 

அப்துல் கபூர் யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியின் பழைய மாணவராவார். வாலிப வயதில் விளையாட்டுப் போட்டிகளில், நாடகங்களில், கலை நிகழ்ச்சிகளில் ஈடுபாடுடையவராக இருந்தார். சாரணர் இயக்கத்தில் அதிக ஈடுபாடுடையவராக இருந்தார். இவர் சிறந்த பாடகரும் கூட. 1959 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேடை நாடகங்களில் சிறப்பாக நடித்து பெரும் வரபேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் காத்த உத்தமன், கற்சிலை, போன்ற நாடகங்களை மனோகரா தியேட்டர் அரங்கத்தில் அரங்கேற்றினார். குறிப்பிட்ட இரண்டு நாடகங்களிலும் பிரதான பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாலிப வயதில் யாழ்.  சிவல பள்ளிச் சந்தியில் நடைபெற்ற மீலாதுன்நபி விழா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று வெள்ளிப் பேழையுடனான திருக்குர்ஆனை பரிசாகப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த ஓவியராவர். யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியின் இலச்சினையை வரைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் யாழ்ப்பாணம் சின்ன பள்ளிவாசலின் (குளத்தடிப் பள்ளிவாசல்) முகப்புத் தோற்றத்தை வரைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம்  சின்ன பள்ளிவாசல் (குளத்தடி பள்ளிவாசல்) சபையில் காரியதரிசியாக சில வருடங்கள் சிறந்த நிர்வாக சேவையாற்றியுள்ளார். மேலும் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அம்பிகைபாகன் அவர்களின் உருவத்தை வரைந்து வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்தார். 

அப்துல் கபூர் 1959 இல் பொலிஸ் சேவையில் இணைந்த போதும் நெடுங்காலம் நீடிக்கவில்லை. சேகுமதார், தனது மகளை திருமணம் செய்பவர் பொலிஸ் சேவையில் இருப்பதை விரும்பவில்லை. ஆதலால் சேகுமதார் ஒஸ்மா கபூரை நோக்கி 'மாப்பிள்ளை! நீங்கள் பொலிஸ் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு  வேறு ஏதாவது அரசாங்க உத்தியோகம் பார்க்கலாமே' என்றார் அதற்கு சேகுமதாரின் அன்பான வேண்டுகோளை ஏற்று ஒஸ்மா கபூர் 'முயற்சி செய்கிறேன்' என்றார். சேகுமதாரின் அன்பான வேண்டுகோளுக்கு மதிப்பளித்து அடுத்தநாளே ஒஸ்மா கபூர் பொலிஸ் பதவியை இராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் நியமனம் பெறுவதற்கு முயற்சி செய்தார். ஒஸ்மா கபூருக்கு உடனடியாகவே ஆசிரியர் நியமனமும் கிடைத்தது. 1961இல் ஆசிரியர் சேவையில் இணைந்தார். வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் பாடசாலையில் உதவி ஆங்கில ஆசிரியராக சேவையை ஆரம்பித்தார்.

ஒஸ்மா கபூர், பிரபல சமூக சேவையாளரும் சமாதான நீதவானும் நகை வர்த்தகருமான எம்.சேகு மதார் அவர்களின் மூத்த மகளான நுமைலா அவர்களை 29.12.1961 இல் திருமணம் செய்தார். ஒஸ்மா கபூர் - நுமைலா தம்பதியினருக்கு முத்தான மூன்று பெண் குழந்தைகளாக ஜன்ஸி கபூர், ஒஸ்லி கபூர், ஜனொhஸ் கபூர் ஆகியோர் பிறந்தனர். ஜன்சி கபூர் யாழ் .கதீஜா கல்லூரியின் அதிபராவார். அகில இலங்கை ரீதியில் ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டு விழா போட்டியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்; 1979 இல் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆறாம் ஆண்டு மாணவியான ஜன்ஸி கபூர் முதலிடம் பெற்று அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் கரங்களால் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மகளான ஒஸ்லி கபூர் பாணந்துறை ஜீலான் நவோதய கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியை ஆவார். மூன்றாவது மகளான ஜனொஸ் கபூர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுகிறார். 

இவரது மூத்த மகளான ஜன்ஸி கபூர் கவிதை புனைவதிலும, சிறுகதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். இவரது இலக்கியப் படைப்புக்களை நூலுருவில் வெளியிட ஒஸ்மா கபூர் ஆசைப்பட்டும் அது இன்னும் நிறைவேறாததை எண்ணி அவர் மகள் கண்ணீர் மல்க நினைவுபடுத்தினார்.; ஜன்ஸி கபூர் இலக்கிய படைப்பின் நூலுருவை வெளியிட உறுதி பூண்டுள்ளார். 

1961இல் ஆசிரியர் சேவையில் இணைந்தார். வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் பாடசாலையில் உதவி ஆங்கில ஆசிரியராக சேவையை ஆரம்பித்தார். 1962, 1963 ஆகிய காலங்களில் அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியருக்கான பயிற்சி பெற்றார். பயிற்சி பெற்றதும் யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் 1964 தொடக்கம் 1970 வரை ஆங்கில ஆசிரியராக தனது சேவையைத் தொடர்ந்தார். 1971 ஆம் ஆண்டு ஒஸ்மா கபூர் வவுனியா சூடுவந்தபுலம் முஸ்லிம் வித்தியாலயத்தில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1972 இல் முல்லைத்தீவு முஸ்லிம் வித்தியாலயத்திலும், 1973 முத்தையன்கட்டு வித்தியாலயத்திலும் தலைமை ஆசிரியராககக் கடமையாற்றினார். மீண்டும் யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஆசிரியராக 1974 தொடக்கம் 1982 வரை சேவையாற்றினார். 1983 இல் வேலனை மண்கும்பான் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1988 வரை தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார். 
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் 1987 இல் ஆரம்பிக்கப்பட்ட, தனியாக இயங்கிய ஐந்தாம் ஆண்டு வரை சிறுவர்களுக்கான அல்ஹம்றா பாடசாலையின் தலைமை ஆசிரியராக இடம்பெயரும் வரை கடமையாற்றினார். இடம்பெயர்ந்த பின் அநுராதபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார். ஒஸ்மா கபூர் அநுராதபுரம், ஸாஹிரா தேசிய பாடசாலையில் சிறிது காலம் கடமையாற்றிய பின் வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவில் இணைக்கப்பட்டு தனக்குரிய கடமைகளை திறமையுடனும் நேர்மையுடனும் கடமையாற்றினார். 

கால் நூற்றாண்டின் பின்னர் 2015 இல் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் மீள்  குடியேறி இரண்டு வருடங்கள் நிறைவடைய முன்னரே 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி தனது 81 ஆவது வயதில் இல் இறையடி சேர்ந்தார்.

மர்ஹூம் ஒஸ்மா கபூர் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்திற்கு நுழைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்


No comments

Powered by Blogger.