Header Ads



கொழும்பில் நாளை, முதலாவது பூசணித் திருவிழா


இலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிறீன்பாத்) நடைபெறவுள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25பூசணி விவசாயிகள் இந்த பூசணி (வட்டக்காய்) திருவிழாவில் பங்கேற்கவுள்ளனர். வட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த பூசணித் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். ஐம்பது ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் கிலோ பூசணிக்காய்கள்வரை கொழும்புக்கு இதன் பொருட்டு கொண்டுவரப்படவுள்ளன. 

இம்முறை மேற்படி மூன்று மாவட்டங்களிலும் பூசணிக்காய் அபரிதமாக விளைந்ததால்,  அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி, விலை வீழ்ச்சியும் ஏற்பட்டது. தமது விளைச்சலை விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் வீதிப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, வாடிக்கையாளர்களிடம் இலவசமாக பூசணிக்காய்களை கொடுக்கவும் முன்வந்தனர். 

விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டதையடுத்தே, மக்கள் மத்தியில் பூசணிக்காய் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பூசணிக்காயின் பல்வேறு பயன்கள் பற்றி எடுத்துச் சொல்லவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருமானம் பெற்றுத்தரவுமே இந்த பூசணித் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளரான சன்ன டி. சில்வா தெரிவித்துள்ளார். கோ எக் ஸிஸ்ட் பவுண்டேஷனின் அதிபரும் சர்வோதய டெவலப்மண்ட் வைபனான்ஸ் நிறுவனத்தின் தலைவருமான இவர், வாடிக்கையாளர்களான பாவனையாளருக்கும் விவசாயிகளுக்கும் இடையே இத்திருவிழா ஒரு இணைப்பையும் புரிந்துணர்வையும்  ஏற்படுத்துமெனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையின் இரு மருங்கிலும் நடைபெறவுள்ள இப்பூசணி கண்காட்சியில் நாடறிந்த சமையல் கலை நிபுணர் பப்லிஸ், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் விவசாய நிபுணர்கள் கலந்துகொண்டு பூசணிக்காயின் மகத்துவம் பற்றியும், எவ்வாறெல்லாம் அதை உணவாகத் தயாரித்து உண்ணலாம் என்பது பற்றியும் மக்களுக்கு விளக்கமளிப்பர். இக்கண்காட்சி விற்பனை நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது. பிரதான விருந்தினராக தம்பான வேடர்களின் தலைவர் வன்னிலாகே ஹெத்தோ கலந்துகொள்வார்.

No comments

Powered by Blogger.