January 10, 2019

ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவிக்கு சவால் விடுபவர்கள் யார்..? அதன் பின்னணி என்ன...??

தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கும் வகையில் ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இவ்வாறு தமிழ் மக்களை தூண்டுபவர்கள் யார் ? தமிழ் மக்களால் அங்கீகரிக்கப் பட்டவர்களா ? அல்லது நிராகரிக்க பட்டவர்களா ?

விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளும் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமே தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்.

இவ்வாறான தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஹிஸ்புல்லாஹ் அவர்களை பதவி விலக்குமாறு கோரினால் அது தமிழ் மக்களின் கருத்து என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது எதிர்கால அரசியலுக்காக விளம்பரம் தேடுபவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால் அதன் பின்னணி என்ன என்று சிந்திக்க வேண்டும்.

2௦12 இல் கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்ததுடன், தாங்கள் நிபந்தனையின்றி ஆதரவு வழங்குகிறோம், நீங்களே முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நேசக்கரம் நீட்டியது. அதனை மு.கா மறுத்திருந்தது.

சில தமிழ் உறுப்பினர்களின் ஆதரவில் நஜீப் ஏ மஜீத் அவர்களும் பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் நசீர் அஹமட்டும் முதலமைச்சர்களாக பதவி வகித்தார்கள்.

அப்போது எந்தவொரு தமிழ் தரப்பினர்களும் இவர்களை இனவாதக் கன்னோட்டத்துடன் பார்க்கவில்லை. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமாகும்.  

அப்படியிருக்கும்போது இன்று ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கியதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இது ஹிஸ்புல்லாஹ் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவா ? அல்லது அவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காகவா ?

அல்லது முஸ்லிம் மக்களின் அதிகமான அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் இது வழிநடத்தப்படுகிறதா ?

அல்லது ஹிஸ்புல்லாவுக்கு தெரியாமல் தங்களது கட்சியை கிழக்கில் வளர்ப்பதற்கு சுதந்திர கட்சியினர் செயல்படுகின்றார்களா ?

அல்லது மஹிந்த தரப்பாரின் குழப்புகின்ற நடவடிக்கையா ? என்று பல்வேறு கோணத்தில் ஆராயப்பட்டது.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விடுதலை புலிகளை பகைத்துக்கொள்ளவில்லை. மாறாக பலவித உதவிகளை புலிகளுக்கு செய்திருந்தார்.

அப்போது ஒரு தொகை இருசக்கர மோட்டார் வண்டிகளை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது அன்றைய பத்திரிகையிலும் வெளிவந்த செய்தியாகும்.

தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக கிழக்கில் அரசியல் செய்கின்ற சிலர்தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கிழக்கில் இன முரண்பாடுகளை தோற்றுவித்து, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வன்முறைகளை தூண்டுவதன் மூலம், தங்களது எதிர்கால அரசியலை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கைதான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான கோசம் என்பது புலனாகின்றது.

எனவே இந்த விடயத்தில் இரு சமூகங்களின் அரசியல் தலைவர்களும், சிவில் சமூகத்தினர்களும் மிகவும் விழிப்பாக செயல்படுவதுதான் ஆரோக்கியமான விடயமாகும்.

முகம்மத் இக்பால் 

1 கருத்துரைகள்:

ஐயா இக்பால் நீங்கள் சொல்வது தகுந்த ஆராய்ச்சியின் பின்னர் தமிழ்ப் புத்திஜீவிகளாலேயே வெளிக் கொணர்ந்த விடயம். தமிழ்ப் பொது மக்கள் எவரும் இதன் பின்னால் ஒருபோதும் இருந்தது இல்லை. தமிழ் முஸ்லிம் மக்கள் என்றும்போல் இன்றும் இலங்கையின் சகல பாகங்களிலும் ஒற்றுமையாக சிறப்புடனதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் புலிகள் ஆடிய கோரதாண்டவங்களை முஸ்லிம் மக்கள் என்றோ மன்னித்துவிட்டார்கள். இன்று தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம்களும் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழர்களும் சடுகுடு விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அவரகளுடைய இன்பத்தில் துன்பத்தை போட்டுக் குழப்பி விடவேண்டாம் என்று மீதமுள்ள சறுகு புலிகளிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். அதனை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் மக்களே உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவர். சாக்கிரதை.

Post a comment