Header Ads



"முக்கிய இடங்களை முடக்க முடியவில்லை - மதுபோதையில் 81 பேர் அனுமதி"

கொழும்பு நோக்கி மக்கள் சக்தி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று பாரிய பேரணியை நடத்தினர்.

பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி கொழும்பு நகரின் மையப்படுத்தியை, கூட்டு எதிரணியினர் முடங்கச் செய்தனர்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாகவும், ஆட்சியை மாற்றப் போவதாகவும் பெரும் பரப்புரைகளுடன் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதில் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேருந்துகளில் வெளியிடங்களில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மகிந்த ஆதரவாளர்கள், நேற்று பிற்பகல் கொழும்பு நகரின் மையப் பகுதியை நோக்கி மூன்று முனைகளில் பேரணியாக நகர்ந்தனர்.

முன்கூட்டியே பேரணி, கூட்டம் நடைபெறும் இடங்களை கூட்டு எதிரணி அறிவிக்காததால், கடைசி வரை குழப்பமான நிலை காணப்பட்டது.

இறுதியாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூட்டு எதிரணியினர் நேற்று மாலை ஒன்று கூடினர்.

முன்னதாக, அலரி மாளிகை, நாடாளுமன்றம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை போன்றவற்றை முற்றுகையிட கூட்டு எதிரணியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால்,  கலகத் தடுப்பு காவல்துறையினர் நீர் பீரங்கி, கண்ணீர் புகைக்குண்டுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

பல நூற்றுக்கணக்காக அதிரடிப்படையினர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பல வீதிகள் தடை செய்யப்பட்டிருந்ததால், கூட்டு எதிரணியினர் எதிர்பார்த்தது போல, முக்கிய இடங்களை முடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதேவேளை, இந்தப் பேரணி ஆரம்பமாகவதற்கு முன்னரே, நேற்று நண்பகலுடன் கொழும்பு நகரின் மையப்பகுதியில் உள்ள அரச, தனியார் பணியகங்கள், வெறிச்சோடின. பணியாளர்கள் முன்கூட்டியே வீடுகளுக்குத் திரும்பினர்.

வணிக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் முடங்கியிருந்தது. பாடசாலைகளில் இருந்து பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றிணைந்த கூட்டு எதிரணியினர் அங்கேயே அமர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மாலையானதும், பேரணியில் இருந்தவர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். இதனால் மகிந்த ராஜபக்சவுடன் சத்தியாக்கிரம் இருந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரமாக குறைந்தது.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தை ஏந்தி போராட்டத்தை நடத்திய கூட்டு எதிரணியினர் நள்ளிரவுக்கு முன்னதாக அங்கிருந்து எழுந்து சென்றனர்.

பேரணியில் பங்கேற்ற பலர் மது போதையில் காணப்பட்டனர். இவ்வாறு மதுபோதையில் விழுந்து கிடந்த 81 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும், இந்தப் பேரணியில் 30 ஆயிரம் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.