May 21, 2018

பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - இதுவரை 7 பேர் மரணம்

களுகங்கை , மில்லகந்த நீர் அளவிடும் பகுதியில் பாரிய வௌ்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுகொட தெரிவித்தார்.

இதேவேளை , களனி கங்கை , கிங்கங்கை , அத்தனகலு ஓயா பகுதிகளிலும் பாரிய வௌ்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் , நிலவும் அதிக மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மகாவலி கங்கையினை பயன்படுத்தும் தாழ்நில பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை -அகுரெஸ்ஸ பிரதேசத்தின் பல கிளை வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகுரெஸ்ஸ - கியம்பலாகொட , அகுரெஸ்ஸ - தந்துவ , அகுரெஸ்ஸ - கம்புருபிடிய போன்ற வீதிகள் சுமார் 5 அடி அளவில் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுப்பெரும்பட்சத்தில் நாட்டில் நிலவும் காலநிலையில் மேலும் அழுத்தமான மாற்றங்கள் ஏற்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதிலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக, இதுவரையில், 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

புலத்கொஹூபிட்டி – உந்துகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 4 பேர் மரணமடைந்ததுடன், மொராகலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நோர்வுட் நகரை அண்மித்த பகுதியில் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நோர்வுட் அம்மன் கோவில் மற்றும் பள்ளிவாசல் பகுதி குடியிருப்புக்களை சேர்ந்த மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அருகில் உள்ள பாடசாலையொன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், நோர்வுட்- மஸ்கெலியா மற்றும் ஹட்டன் பொகவந்தலாவ வீதிகளில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், கண்டி கம்பளை பிரதான வீதியிலும் மரங்கள், பாறைகள், மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாவலபிட்டி - ஹட்டன் பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்மேடொன்று சரிந்து விழுந்தமையால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அக்கரபத்தனை, நிவ்போட்மோர் அல்டோரி பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இது தவிர, பொகவானை - கொட்டியாகலை பிரதேசங்களின் சில பகுதிகள் ஆங்காங்கே நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கலாஒயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, புத்தளம் -மன்னார் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வீதியின் எழுவன்குளம் பகுதி, 2 அரை அடி உயரத்திற்கு வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவிசாவளை மற்றும் தெரணியகலை பகுதியில் களனி ஆறு, பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக களனி ஆற்று கரையோரங்களிலும் கிளையாறுகள் அருகிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி ஏ. ஒன்பது பிரதான வீதி அலவத்துகொட 8 ஆம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு ஒழுங்கை ஊடாக மாத்திரம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்பிட்டிய – அலுத்கம வீதியின் மிரிஸ்வத்த பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களுத்துறை- பாலிந்தநுவர பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பிலான அதிகாரம் பாடசாலை அதிபருக்கும் மாகாண பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் சில கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி கல்வி வலயங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தென்மாகாணத்தில் உள்ள சிரார்கள் காய்ச்சல் மற்றும் தடிமனுடன் இருந்தால், பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment