Header Ads



அபாயாக்களும், அவ்வை ஷண்முகாக்களும்


ஹிந்துத்துவாவின் மீது கட்டி எழுப்பப்பட்ட இனத்துவேசத்தின் கோர முகத்தின் இன்னோர் குறுக்கு வெட்டு முகத்தினை வக்கிரமத்தோடு காட்டியது மாதிரி இருந்தது காலை (2018-04-25) திருகோணமலை ஷண்முகா மகளிர் கல்லூரியில் கற்பிக்கின்ற முஸ்லிம் அசிரியைகளுக்கெதிராக நடந்து முடிந்திருக்கின்ற அந்தப்பாடசாலையின் பழைய சகோதர தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஷண்முகா மாணவிகளின் பெற்றோர்களது பதாதைகள் ஏந்திய ருத்ர தாண்டவ ஆர்ப்பாட்டம். 

ஷண்முகாவில் கற்பிக்கின்ற முஸ்லிம் அசிரியைகள் ஹபாயா அணிந்து வரக் கூடாது சாரிதான் கட்டி வர வேண்டுமென்றும்;. அந்த முஸ்லிம் ஆசிரியைகளின் பேச்சு வழக்கினை கிண்டலடித்தும் செய்யப்பட்ட இந்த கூறு கெட்டதும், சம கால இலங்கையின் இன முறுகல் அரசியல் வெள்ளோட்டத்துக்கு சற்றும் பொருந்தாததும், எரிகிற நெருப்பில் சுப்பர் பெற்றோல் ஊற்றுகின்றதுமான ஆர்ப்பாட்டம் அறுவறுப்பையும் அதிர்ச்சியையும் தந்திருக்கின்றது.இந்த அதிர்ச்சி முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல நடு நிலையாக நின்று தமிழ் முஸ்லிம் உறவு பற்றி நேர்மையோடு பேசுகின்ற தமிழ்ச் சகோதரர்களுக்குமானதுதான். 
இது வரை காலமும் ஆங்காங்கே ஓரிரு சிங்களப் பாடசாலைகளில் மட்டுமே இடம் பெற்ற முஸ்லிம் மாணவிகளின் இஸ்லாமிய விழுமிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கெல்லாம் நான்தான் தலைமை தாங்கி தளபதியாக இருப்பேன் என்ற ஹை டெக் ஹைபிரிட் லெவலில் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான ஒரு முன்னுதாரணத்துக்கு விலை போயிருக்கின்றது திருகோணமலை ஷண்முகா வித்தியாலயம். 

நானறிந்த வகையில் இலங்கையில் இது வரை எந்த தமிழ்ப்பாடசாலைகளிலும் இந்த மாதிரியான விஷ்வ ஹிந்து பரிசத் விபரீதங்கள் நிகழந்திருக்கவில்லை. ஆனால் ரொம்ப ரொம்ப உயர்வாகவும் மரியாதையோடும் திருகோணமலையில் தனக்கென்று ஒரு தனிப்பெயரைப் பெற்றிருந்த ஷண்முகா இந்து மகளிர்க் கல்லூரி இந்த மாதிரியான இனவாதத்தை அடி நாதமாகக் கொண்டு தெருவுக்கு இறங்கியது அதிர்ச்சியின் உச்ச்க்கட்டம். 

தவிரவும் முஸ்லிம் பெண் ஆசிரியைகளது ஹபாயா ப்ளஸ் ஹிஜாபுக்கு எதிரான இந்த இனப்போர் ஹபாயாவுக்கும் ஹிஜாபுக்கெதிரானது மட்டும்தானா அல்லது அதற்குப் பின்னே இதனை விடவும் ஏதாவது மெகா சைஸில் சம் திங் சம் திங் இருக்கின்றதா என்ற அச்சத்தினை இன்றைய திடீர் ஆனால் திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.
இதற்கு அடிப்படைக் காரணம் தற்போது திருகோணமலை நகரில் உள்ள பல இந்துக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவ மாணவிகள் கற்றுக் கொண்டிருக்கின்ற அதே வேளை அவர்களது அடைவு மட்டங்களும் ஏறு வரிசை லெவல். முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கெதிரான பிரச்சாரங்கள் ஒரு காலத்தில் திருமலை நகரில் ஓஹோவென்று இருந்து ஓரளவுக்கு அடங்கிப் போயிருந்த நிலையில் தற்போது ஷண்முகாவின் இந்த முஸ்லிம் விரோத பொங்கு தமிழ் எழுச்சி மீண்டும் முஸ்லிம்களின் கல்வி விரோதத்தை பாரியளவில் அறுவடை செய்வதற்கான கொங்க்ரீட் அடித்தளமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு படித்த சமூகம், புகழ் பெற்ற ஒரு கல்லூரியின் சமூகம். நெடுங்காலமாக பண்பாடுகளையும் விழுமியங்களையும் ஸ்ட்ரிக்டாக பேணி வருகின்ற ஒரு பாடசாலை சமூகமா இந்த கேவலம் கெட்ட வெலையைச் செய்தது என்பது இன்னும் நம்ப முடியாமல்தான் இருக்கின்றது. இந்த ஷண்முகா பொங்கு தமிழ் எழுச்சி என்பது இன்ஸ்டன்ட் மோடில் உருவாக்கப்பட்டதல்ல என்பது மட்டும் நூறு வீத சத்தியம். இது வரை காலமும் மனசில் போட்டு வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இனக்குரோதம் இப்போது ப்ரெஷ்ஷர் தாங்காமல் வெடித்து சிதறியிருக்கின்றது. 

இந்த ஆர்ப்பாட்ட்ககாரர்களின் பேரிரைச்சலை கூர்ந்து நோக்குகின்ற போது இது முஸ்லிம் பெண்களின் ஹபாயவுக்கு எதிரான கோஷம் மட்டுமல்ல என்பதனை நுணுக்க அரசியல் சொல்லித் தருகின்றது. எது எப்படியிருந்த போதும் இது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஆரோக்கியமானதல்ல. மறு பக்கத்தில் எங்கே என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற ஞானசார சூன்யங்களுக்கு குளிர் காய ரொமப் வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விடுமென்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமேயில்லை.

இந்துயிசத்தை பாதுகாப்போம் தூய தமிழுக்கு ஹோர்லிக்ஸ் கொடுத்து அதன் செழுமையை சேவிப்போம் என்ற கோஷங்களோடு தமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று எல்லாளன் படையெடுக்கின்ற ஷண்முகாக்கள் முஸ்லிம் ஆசிரியைகளின் ஹபாயாகக்ளுக்கெதிராக தொடுக்கின்ற இந்த தெரு வழிப் போராட்டம் மிகப் பெரும் கலாசார அத்து மீறலும், அடுத்த சமூகத்தின் கலாசாரத்தின் மீது ஏவி விடப்படுகின்ற அதி பயங்கர வன்முறையுமாகும். ஒரு அரச கட்டுப்பாடடிலுள்ள பாடசாலையில் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு மற்றும் கலாசரத்தின் மீதான இந்த வன்முறையும் போரும் நடந்த முடிந்த மூன்று தசாப்த கால போரியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் பாசிஸத்தை விடக் கொடியது. எந்த வகையிலும் இதனை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நியாயம் கற்பிக்கவோ முடியாது.

முஸ்லிம்களின் பேச்சு வழக்கை நக்கல் பண்ணுகின்ற அளவுக்கு இந்த ஆரப்பாட்டக்கார கம்பவாரிதிகளது தமிழொன்றும் அந்தளவுக்கு அட்மைரபிளல்ல. உண்மையைச் சொல்லப் போனால் திருகோணமலை டவுன் தமிழை விட இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களது தமிழ் ரொம்ப உசத்தியானது. திருகோணமலையில் தமிழுக்கு இன்று தொண்டாற்றுகின்ற படையில் முக்கால்வாசிப் பேர் இன்று முஸ்லிம்கள்தான் என்பதனை இங்கு நான் கூறியே ஆக வேண்டும். தமிழ்ச் சகோதரர்களை விட இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள்தான் கவிஞர்களாகவும். எழுத்தாளர்களாகவும் தமிழை கௌரவித்துக் இன்றைக்கும் கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற உண்மை அனைவரலாறும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று.. 

சில தீய இனவாத சக்திகளின் கடும்போக்கு மட்டுமே இது. முழு சகோதர தமிழ் சமூகத்துக்கானதுமல்ல என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். திருகோணமலை தமிழ் சமூகத்திலுள்ள பெரும்பாலானோர் இந்த ஷண்முகா ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரானவர்கள் என்பதோடு, அவர்கள் இதனை கடுமையாக இப்போது வரை கண்டித்துக் கொண்தூனிருக்கின்றனர் என்கின்ற விடயம் நமக்க மிகப் பெறும் ஆறுதல்..

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் உடைந்து போன சில குறிப்பிட்ட தீய இனவாத சக்திகளின் இந்த மாதிரியான கேணைத்தனமானதும், மொக்கையானதுமான முஸ்லிம் விரோதப் போக்கின் முடிவு அதே சக்திகளுக்கும் அவர்கள் வாழ்நது கொண்டிருக்கின்ற சமூகத்துக்கும் பூமராங் போல அவர்களுக்கெதிராகவே திரும்பும் என்பதனை புத்தி ஜீவிகள் எனச் சொல்லப்படுவோர் உணர்த்த வேண்டிய கடமை நிறையவே இருக்கின்றது

வரலாற்றை ஷண்முகாக்கள் மறு வாசிப்பு செய்ய வேண்டும்.

-கிண்ணியா சபருள்ளாஹ்-

1 comment:

  1. சபருள்ளாஹ் சபாஷ் எந்த கதைக்கும் இடம் இல்லாத நெருங்க முடியாத தன்மையான உங்கள் சாட்டை அடி சபாஷ் (ஹபாயா கடமை+ எமது உரிமை அதட்கான போராட்டம் இலங்கை +உலகம் எல்லாம் முன்னெடுத்துச் செல்வோம் ) !

    ReplyDelete

Powered by Blogger.