Header Ads



அரசியல் குழப்பத்தால், இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை - ஜெனீவாவிலும் பேரிடி

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தால் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளதுடன், பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல் கொதிநிலையைத் தணிக்க அமெரிக்காவும், இந்தியாவும் களமிறங்கியுள்ளதுடன், மேலும் சில இராஜதந்திரிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமரை அமெரிக்கத் தூதுவர் மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோர் சந்தித்து பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியிருந்தனர்.

தேசிய அரசில் பிளவு ஏற்பட்டால் இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடிகள் உருவாகும். புதிய அரசியலமைப்பு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளைச் செய்வதில் தடங்கல் ஏற்படும். தனியரசு அமைந்தால் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல்போகும். அவ்வாறு ஏற்பட்டால் 2020ஆம் ஆண்டுவரை அரசியல் ஸ்திரமற்ற தன்மையே காணப்படும்.

எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் மிக்கதாகவும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்ற சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை காரணமாகவே இவ்வாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நேற்றுமுன்தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 60 சதத்தால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

2 comments:

  1. பாராளுமன்ற சட்டங்களின்படி அடுத்த பாராளுமன்றத்  தேர்தல் வரையில் தற்கால பாராளுமன்றத்தை ஏன் நீடிக்க விடக்கூடாது? 

    2015 பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்தது 2020 வரையான ஆட்சிக்கு அல்லவா?

    அதனை உள்ளூராட்சித் தேர்தலோடு ஏன் சம்பந்தப்படுத்திப் பிரச்சினைப் படுத்த வேண்டும்?

    ReplyDelete
  2. யரோ பயன் அடைவதர்க்காக தேசிய அரசாங்கத்தையும் அதன் நீண்ட கால திட்டங்களையும் பலிகடா வாக்கப் போகிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.