Header Ads



149 ஆசனங்களை சுவீகரித்த மயில்

-ஊடகப்பிரிவு-  

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது.
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் 01 ஆசனத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆசனங்களையும், கொழும்பு மாவட்டத்தில் 02 ஆசனங்களையும், புத்தளம் மாவட்டத்தில் 08 ஆசனங்களையும், அனுராதபுரம் மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையையும், மாந்தை மேற்கு பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன், மன்னார் பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகின்றது. நானாட்டான் பிரதேச சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காலாகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த மாந்தை மேற்கு பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ், கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் கைப்பற்றி வடமாகாண அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.  

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச சபை, செட்டிக்குளம் பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறக்கூடிய தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று  பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சூழல் அல்லது மக்கள் காங்கிரஸின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபையிலும், எதிரணிக்குச் சமனான ஆசனங்களைக் கொண்டுள்ளதால், அந்த ஆட்சியையும் வேறு சில கட்சிகளுடன் இணைந்து நிறுவக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து மயில் சின்னத்தில் கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிட்டது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு சுமார் 40,407 வாக்குகள் கிடைத்துள்ளன. சம்மாந்துறைப் பிரதேச சபையில் 12, 911 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களை தம்வசப்படுத்தி பலமான நிலையில் இருக்கும் மக்கள் காங்கிரஸின் ஆதரவிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்கக் கூடிய வலுவான நிலை உள்ளது.

அதேவேளை, நிந்தவூர் பிரதேச சபையில் 7260 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களுடன், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைத் தனதாக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. கல்முனை மாநகர சபையில் 7573 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களுடனும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 4384  வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், பொத்துவில் பிரதேச சபையில் 4288 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், இறக்காமம் பிரதேச சபையில் 2313 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளதால், சில சபைகளில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் 1010 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றமை சிறப்பம்சமாகக் கருதப்படுவதுடன், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் ஒரேயொரு உறுப்பினரை மாத்திரம் பெற்று, அம்பாறை மாவட்ட அரசியலில் கால்பதித்த மக்கள் காங்கிரஸ், கடந்த பொதுத் தேர்தலில் தனித்து மயில் சின்னத்தில் களமிறங்கி சுமார் 33,000 வாக்குகளைப் பெற்றமையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபையிலும் ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை காத்தான்குடியில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் சில சபைகளில் இணைந்து போட்டியிட்டு 04 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக பல்வேறு சபைகளில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 10,500 வாக்குகளுடன் 08 ஆசனங்களைப் பெற்று மலையக முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு நகர சபையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும், குருநாகல் மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், களுத்துறை மாவட்டத்தின் களுத்துரை நகரசபை, பேருவளை பிரதேச சபை ஆகியவற்றில் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

5 comments:

  1. Mashallah very happy news.insallah you will be the great leader of our society in the future .

    ReplyDelete
  2. Known people know who is this bugger. He is spending too much money for taking votes. Is n't a bribe. Ask people of Manner about his wealth now & before 5 years. Now go & check what is happening in Uppukulam Mannar

    ReplyDelete

Powered by Blogger.