Header Ads



ஜனாதிபதிக்கு பாராட்டு, ரணிலுக்கு பெரும் நெருக்கடி - நாடு அதிர்கிறது

-ஜீப் பின் கபூர்-

இந்தப் பினைமுறி விவகாரம் ஆரம்பித்த நாள் முதல் இதில் தவறு நடந்திருக்கின்றது என்பதனை அழுத்தமாக நாம் எமது வாசகர்களுக்குச் சொல்லி வந்திருக்கின்றோம். அத்துடன் இந்தத் தவறின் பின்னணியில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயகவே முழுக்க முழுக்க இருக்கின்றார் என்பது எமது வாதம். 


அவர் தனது நலன்களுக்காக பிரதமரை தவறாரக வழிநடத்தி வந்திருக்கின்றார் என்றும் அடித்துச் சொல்லி இருந்தோம். அரசியல் பின்னணிகள், தனது தலைமைத்துவப் பாதுகாப்பு போன்ற காரணங்களினால் பிரதமர் ரணிலும் ரவி சொன்னவற்றை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செய்திருக்கின்றார் என்பது பற்றியும் நாம் கடந்த காலங்களில் விரிவாகச் சொல்லி வந்திருந்தோம்.

தன்னை பினைமுறி விவகாரம் தொடர்பாக ஆராய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழு சுற்றவாளி என நிரூபிக்க இருக்கின்றது என்று கடந்த வாரம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக, ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார். ஆனால் அவர் சொல்கின்ற படி அப்படி எந்தக் குறிப்பும் இதில் இடம்பெற வாய்ப்பிலை என்று கடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையில் சொல்லி இருந்தோம். இப்போது அது உறுதியாகி இருக்கின்றது.

தற்போது முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதித் தலைவருமான ரவி கருனாநாயக இந்த விவகாரத்தில் கடுமையான பொய்களைச் சொல்லி இருக்கின்றார் என்பதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த பினைமுறி விவகாரத்தில் பிரதமருடைய நடவடிக்கைகளை ஆணைக்குழு விமர்சித்திருக்கின்றது. அதாவது அடுத்தவரை பொறுப்பில்லாமல் நம்பியதால் பிரதமர் நடவடிக்கையில் குறைகள் ஏற்பட்டுள்ளது என்று அது தனது அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கை பிரதமருக்கு எதிரான குறிப்புக்களை மென்மைப்படுத்தி சொல்லி இருக்கின்றதா என்ற ஒரு சந்தேகமும் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பினைமுறி விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் விரிசல் நிலை ஏற்பட்டு வருகின்றது என்று எமக்குத் தகவல்கள் தருகின்ற வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் இந்த பினைமுறி விவகாரத்தில் கனிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார நலன்கள் கருதி சிக்கி இருக்கின்றார்கள். அவர்கள் சப்பவும் முடியாது மெல்லவும் முடியாது என்ற நிலையில் கட்சியிலும் வெளியிலும் இருந்து வருகின்றார்கள்.  இவர்களில் அனேகமானவர்கள் தற்போது ஊடகங்கள் முன் வருவதைக் கூட தவிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

பினைமுறியில் எந்தத் தப்பும் நடக்கவில்லை என்று புத்தகம் எழுதிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேறு ஒரு விவகாரம் தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு ஒரு தொலைக் காட்சி நிலையத்தால் அழைக்கப்பட்ட போது அங்கு ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன்ஹெத்தி வருகின்றார் என்று தெரிந்து கொண்டதால் அதில் பங்கு கொள்ளாமல் தனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி எஸ்கெப்பாகி இருக்கின்றார்.

இந்தப் பினைமுறி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட கோப் குழுவில் மனோ கணேசன் தரப்பில் ஜனரஞ்சக கணக்கியல் ஆசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுஜீவ சேனசிங்ஹவை அந்த இடத்திற்கு நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரை அந்த இடத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் நேரடியாகக் கேட்டுக் கொண்டதால்தான் வேலுகுமார் வெளியே போடப்பட்டிருக்கின்றார் என்று எமக்கு தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

வேலுவின் இடத்திற்கு ரணிலால் நியமனம் செய்யப்பட்டவர்தான் பின்னர் பினைமுறி விவகாரத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று புத்தகம் எழுதி இன்று வெளியே தலைகாட்ட முடியாமல் மூக்குடைபட்டுக்கிடக்கின்றார்.

இதற்கிடையில் இந்த பினைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணிலும் தவறு செய்திருக்கின்றார் என்பது தெளிவாகி இருக்கின்றது அவரை உடனடியாக பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர். இதற்காக மக்கள் வீதியில் இறங்கிப் போராட முன்வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாராளுமன்றத்தில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட வேண்டும் என்று சபாநாயகரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பிந்திய தகவல்படி வருகின்ற 8ம் திகதி விஷேட பாராளுமன்ற அமர்வு இதற்காக கூட்டப்பட இருக்கின்றது என்று தெரிகின்றது. இதற்குப் சபாநாயகர் தனது ஒப்புதலை வழங்க இருக்கின்றார் என்றும் அறிய முடிகின்றது.

அப்படி 8ம் திகதி பாராளுமன்றம் கூடுமாக இருந்தால் பிரதமருக்கு பெரும் நெருக்கடி நிலை அங்கு ஏற்பட இடமிருக்கின்றது. இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடன் இருக்குமாறு பிரதமர் ரணில் தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில்  கேட்டுக் கொண்டாலும், எத்தனை பேர் தன்னைப் பாதுகாக்க முன்வருவர்கள் என்ற விடயத்தில் அவருக்கு நிறையவே அச்சம் இருக்கின்றது. குற்றவாளிகளை ஆதரித்து தமது அரசியல் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள எந்த அரசியல் வாதிதான் ஒத்துக் கொள்வான்?

அர்ஜூன் மஹேந்திரன் விவகாரத்தில் ரணில் விட்ட மிகப் பெரிய பல தவறுகள் இருக்கின்றன. அவற்றை நாம் பின்வருமாறு பட்டியல் படுத்த முடியும். 

1.இந்த நாட்டுப் பிரசை அல்லாத ஒருவருக்கு நாட்டில் முக்கிய பதவியை வழங்கியமை.

2.பினைமுறி குற்றச்சாட்டு வெளியே வந்தபோது அது பற்றி தனக்கு விசுவாசமானவர்களை (கட்சி ஆதரவாளர்களைக் கொண்ட குழு) நியமனம் செய்து அதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தக் குழுவிடம் அறிக்கை பெற்று அதனை நம்பும்படி மக்களை ஏமாற்றியமை.

3.உள்நோக்கோடு குமாரை வெளியே தள்ளி சுஜீவ சேனசிங்ஹவை அந்த இடத்துக்காக உள்வாங்கி அர்ஜூன் மஹேந்திரனைப் பாதுகாத்து புத்தகம் எழுதுவதற்கான பின்னணியை உருவாக்கிமை.

4.ஜனாதிபதி அர்ஜூன் மஹேந்திரனை வெளியேற்ற முனைந்த போது முடியுமான வரை அவரைப் பாதுகாத்து அந்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டமை.

5.இதில் அப்படி எந்தத் தவறும் நடக்கவில்லை என்று 2015.03.17ம் திகதி பாராளுமன்றத்தில் அர்ஜூன் மஹேந்திரனுக்கு ஆதரவாக பேசி அவருக்கு பாதுகாப்புக் கொடுத்தமை.

6.கோப் அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து பின்குறிப்பு (புட் நோர்ட்) போடவைத்தமை.

7.நம்பி அர்ஜூன் மஹேந்திரனை நியமித்ததாகக் கூறுகின்ற பிரதமர் ரணில் அவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக இப்போது முன்னுக்குப் பின் முரணாக கருத்துக் கூறுவது.

8.ரவி கருனாநாயகாவின் சட்டத்தரணிகள் தற்போது ரவியை மட்டும் இதற்காக குற்றச்சாட்டுவது தப்பானது என்று கருத்துக் கூறி வருவதுடன். அந்த நாட்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கின்றது என்று கூறுகின்றனர். எனவேதான் இந்த விவகாரத்திலிருந்து இலகுவாக பிரதமருக்குத் தற்போது தப்பிக் கொள்ள முடியாத நிலை தோன்றி இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தற்போது பிரதமருக்கு தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாத ஒருநிலை ஏற்படும் என்றால் தற்போதய சபாநாயகர் கரு ஜெயசூரியவை அந்த இடத்தில் அமர்த்துவதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுக்கின்றது என்பதனை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம். கூட்டு எதிரணியிரும், ஜேவிபியும் தற்போது பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த அறிக்கை தன்னிடம் கிடைத்த பின்னர் இது விடயத்தில்தான் அறிக்கையைக் கடந்த காலங்களில் செய்தது போல் கிடப்பில் போட்டுவிட்டு சும்மா இருக்க மாட்டேன் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி மைத்திரி முன்பே உறுதிபடக் கூறி இருந்தார்.

கூறியபடியே இப்போது அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஊழல் மோசடிகளை ஒழிக்கும் வாக்குறுதி கொடுத்து  பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரி இது விடயத்தில் நடவடிக்கை எடுப்பதை எவரும் கேள்ளி எழுப்ப முடியாது. என்றாலும் ஒரு தேர்தல் முன்னோக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி இந்தளவுக்கு கடும் போக்கை கடைப் பிடித்து வருவது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருக்கும் அவரது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மீது ஒரு கோபத்தை உண்டு பண்ணி இருக்கின்றது.

மறுபுறத்தில் தனது கையில் கிடைத்த இந்த அறிக்கையை தலையணைக்குக் கீழ் வைத்துக் கொண்டு காலத்தை கடத்தினால் அது தன்மீதுள்ள மக்களின் நல்லெண்ணத்தை பாதித்துவிடும் என்பது ஜனாதிபதி மைத்திரிக்குத் தெரிகின்றது. எனவேதான் இந்த விவகாரத்தில் அவர் உறுதியுடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இந்தப் பினைமுறி விவகாரம் நாம் முன்பு சொன்னது போன்று வருகின்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பின்னடைவைக் கொடுக்கும். 

ஜனாதிபதி இந்த அறிக்கை தொடர்பில் ஊடகங்கள் முன்னே தோன்றுவதற்கு சில மணி நேரங்கள் இருக்க பிரதமர் ரணிலைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றார். இது ஜனாதிபதியின் நல்ல இராஜதந்திர நடவடிக்கை என நாம் குறிப்பிட முடியும். பிரதமர் என்னதான் இந்த விவகாரத்தில் தெரிந்தோ தெரியாமலோ குற்றமிழைத்திருந்தாலும் தான் இது பற்றி ஊடகங்களுக்கு சொல்லப்போகின்ற செய்திகளை மேலோட்டமாக அவருக்கு ஜனாதிபதி மைத்திரி முன்கூட்டி  எத்தி வைத்திருக்கின்றார்.

இந்த அறிக்கை விவகாரத்தில் ஜனாதிபதியின் இந்த உறுதியான நிலைப்பாடும் அணுகுமுறையும் பலதரப்பினராலும் தற்போது பாராட்டப்படுகின்றது. உள் நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் மைத்திரியைத் தற்போது  புகழ்ந்து வருகின்றது.

1257 பக்கங்களைக் கொண்ட இந்த பினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று புத்தகங்களில் தற்போது சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு இருக்கின்றது. 

இந்த விவகாரத்திலுள்ள புரிந்துணர்வு என்னவெனின், அறிக்கையும் ஜனாதிபதியின் செயல்பாடுகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருந்தாலும் பிரதமரோ ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களோ ஜனாதிபதி செயல்பாட்டை விமர்சிக்காது மௌனமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இது விடயத்தில் ஜனாதிபதியுடன் மோதலை உண்டு பண்ண முனைந்தால் அது நாட்டின் அரசியில் போக்கில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடும்.

கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 17 மாபெரும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான அறிக்iயொன்றும் சம காலத்தில் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கை தொடர்பாக ஊடகங்கள் தனது கவனத்தைச் செலுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஊடகங்கள் மீது தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு ஊழலைத் தடுக்க வந்தவர்களே வந்த வேகத்தில் மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டு கையும் களவுமாக சிக்கிக் கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது. 

இந்த பினைமுறி விவகாரத்தில் ஜனாதிபதி நடந்து கொள்கின்ற முறைக்கு தனது சகாக்கள் கொடுக்கின்ற ஒத்துழைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இதனைப் பாவித்துக் கொண்டாலும். தனக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பொது மக்கள் அதனை நியாயப்படுத்துக்கின்ற உரிமை இதனால் ஜனாதிபதி மைத்திரியின் கரத்துக்குச் செல்வதை மஹிந்தவால் ஜீரணித்துக் கொள்வது கஷ்டமாக இருக்கும்.

தற்போது ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி காட்டுகின்ற தீவிரம் சிறப்பாக இருந்தாலும் இது அவருக்கு ஆபத்தாகக்கூட அமைந்து விட இடமிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே எச்சரித்திருக்கின்றார். 

1 comment:

  1. So, My3 nallavangalo???????
    My3 is the best friend of BBS..mind it my dears

    ReplyDelete

Powered by Blogger.