Header Ads



முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்ட, காணிகளை மீளவழங்குங்கள் - ரவூப் ஹக்கீம்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காணி மற்றும் விவசாய அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் திங்கள்கிழமை (14) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

காணிகள் அரச காணிகள், தனியார் காணிகள் என இரு வகைப்படும். தனியார் காணிகள் தனிப்பட்ட நபர்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சொந்தமாக இருந்தன. காணிப்பிரச்சினை இப்பொழுது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதில் நாட்டின் இனப் பிரச்சினையோடு பின்னிப் பிணைந்துள்ளது. 

வடகிழக்கில் தனியார் காணிகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்த காணிகள் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பரம்பரையாக காணி சொந்தக்காரர்கள் செய்கை செய்த காணிகள் சட்ட விரோதமாக வேறு நபர்களால் கபளீகரம் செய்யப்பட்டது.
இனச்சுத்திகரிப்பு காரணமாகவும் முஸ்லிம்கள் தங்களது காணிகளை பறிகொடுத்த நேர்ந்தது. ஏறாவூருக்கு அண்மிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாது, புலிகளால் நியமிக்கப்பட்ட நபர்;கள் முஸ்லிம்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு காணிகளை கொள்வனவு செய்துகொண்டனர். அவ்வாறான காணிகள் தமிழ் கிராமங்களின் உட்புறமாக காணப்பட்டன. யுத்த சூழ்நிலை காரணமாக காணிகளை கைவிட்டு செல்ல நேர்ந்தது மட்டுமல்லாமல், அந்தக் காணிகளுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை.

இவ்வாறான காணிகளுக்கு 1990 ஆம் ஆண்டுக்;கும் 2006 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 400 ஏக்கருக்கு அதிகமான வளமான காணிகள் முறைகேடாக பரிமாறப்பட்டுள்ளன. காணி சொந்தகாரர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு ஆவணங்களில் கையொப்பம் பெறப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர். தங்களை கொலை செய்வதாக அச்சுறுத்தி தங்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டதாகவும் அப்பகுதி முஸ்லிம்கள் கூறுகின்றனர். போலி உறுதிகளிலும் தங்களின் கையொப்பம் பெறப்பட்டதாக அவர்கள் சொல்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தங்;களது காணிகளுக்கு திரும்பிச் சென்ற முஸ்லிம்கள் அங்கு வேறு நபர்கள் இருப்பதை கண்டார்கள். அவர்கள் சட்ட ரீதியாக தங்கள் இழந்த நிலங்களை பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த போதிலும் அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறவில்லை. யுத்தம் முடிந்து, சமாதானம் ஏற்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் காணிப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இன்னும் இன்னும் சிக்கலானதாகவே காணப்படுகின்றது. இது இனங்களுக்கிடையில் விரிசலை அதிகரித்து,  நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பெரும் இடையூராக இருக்கின்றது. சௌஜன்ய சக வாழ்வுக்கும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது.  செங்கலடி - பதுளை வீதியின் இரு மருங்கிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை முறையீனமாக வேறு நபர்களால் கையாளப்பட்டுள்ளன. 

முறைகேடாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை அவற்றின் சொந்;தக்காரர்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக நான் நீதியமைச்சராக இருந்த பொழுது வரையப்பட்ட காணி மீட்பு சட்டத்திருத்தத்தை குறுகிய நோக்கம் கொண்ட சிலரால் அப்போதைய அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டது. தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்பித்ததன் பயனாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. அதன் காரணமாக அடுத்த மாதமளவில் வடக்கிலும், கிழக்கிலும் வசிக்கும் தமது காணிகளை இழந்த மக்கள் நன்மையடைய இருக்கின்றார்கள்.

நீதியமைச்சரிடம் இன்னொரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். அதாவது, இவ்வாறான காணி பிரச்சினையை தீர்ப்பதற்கென்று தனியான மத்தியஸ்த்த சபைகள் நிறுவப்பட வேண்டுமென்ற எனது முன்னெடுப்பை அவர் கவனத்தில் கொண்டு அவற்றை நிறுவ முன்வர வேண்டும்.
அத்துடன் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டில் அறிமுகப்பட்டதிலிருந்து தேசிய காணி ஆணைக்குழு என்பதன் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்துகின்றேன்.  இதனை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவும் முக்கியத்துவமளித்து சுட்டிக்காட்டியிருந்தது.  அம்பாறை மாவட்டத்தில் வட்டமடு விவகாரம் பாரதூரமானது. அதன் பரப்பளவு 1742 ஏக்கர்களாகும். அக்கரைபற்று வரி மதிப்பு பிரிவிலிருந்து தற்பொழுது திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டது. அங்கு 600 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 1970 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்;கள் வழங்கப்பட்டன. 

1976 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளால் அக்கரைபற்று வரிமதிப்பீட்டு பிரிவின் கீழ் வந்த 4000 ஏக்கர் காணி மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்தப்;;பட்டது.  

சுற்றாடல் அமைச்சர் சில நிபந்தனைகளுடன் அந்த காணிகளை விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் இப்பொழுது கூட்டுறவுச் சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் இருபுறத்திலுமுள்ள உறுப்பினர்களும் பேசுத் தீர்த்து 600 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள காணிப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். தனிநபர்கள் எனக் கணித்தால் 2800பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்களின் கல்வியும் இதன் விளைவாக பாதிக்கப்படுகின்றது.
பொத்துவில்லில் பள்ளியடிவட்டை கிரங்கோவா விவகாரமும் பாரதூரமானது. அதற்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும். 250 விவசாயகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியிருக்கின்றது. லகுகலை பிரதேச செயலாளர் பிரிவில் 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கரங்கோவா பகுதியில் வனபரிபாலன திணைக்களம் பிரச்சினையை உண்டு பண்ணியிருந்தது. முஸ்லிம்களின் விவசாயக் காணிக்கு அருகில் நிலங்களை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து இந்தவிவகாரம் சூடுபிடித்தது. இது பல ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குத் திரும்புவதற்கு தடை ஏற்படுத்தியது.

மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. யுத்த காலத்தில் கடற்படை அங்கு முகாமிட்டிருந்தது. இன்னும் நிலைமை நீடிக்கின்றது. இப்பொழுது யுத்தம் தீர்ந்து விட்டது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் வலியுறுத்தியதன் பிரகாரம் தனியார் காணிகளிலிருந்து அரச ஆயுதப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்றார்.

1 comment:

Powered by Blogger.