Header Ads



ஹஜ்: முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர்
(கிழக்குப் பல்கலைக் கழகம்)

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் சஊதி அரேபியாவில் ஒன்று கூடுகிறார்கள். உலகில் பரந்து வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடுகின்ற ஒரு சர்வதேச மாநாடாக ஹஜ் அமைகின்றது. 

ஹிஜ்ரி 9 அல்லது 10 ஆம் ஆண்டில் ஹஜ் கடமையானதாக இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) கூறுகின்றார். உண்மையில் ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒருவர் அது தன் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆழமாக சிந்திப்பாரானால் அது தனது ஆன்மீக லௌகீக அம்சங்களை அபிவிருத்தி செய்வதை கண்டுகொள்வார்.

ஒருவரின் ஹஜ் பிரக்ஞைபூர்வமாக அமையுமாயின் படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவனுக்கும் இடையிலான தொடர்பை உண்டாக்கி விடுவதைக் காணலாம். ஆன்மீக உலகுக்கும் சடவாத உலகுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதை புரியலாம். 

மனிதனிடம் நடத்தைரீதியான பல மாற்றங்களை ஹஜ் கடமை ஏற்படுத்துகின்றது. இக்கடமையில் ஈடுபடுகின்ற அனைவரும் எவ்விதப் பாகுபாடோ வித்தியாசமோ இன்றி அணிந்துகொள்கின்ற இஹ்ராம் ஆடை சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் முக்கிய அடையாளச் சின்னமாக விளங்குகின்றது. 

அக்கடமையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் அவர்களில் ஆண்டான்-அடிமை செல்வந்தன்-ஏழை அறிவாளி-அறிவிலி பெரியவன்-சிறியவன் என மனிதன் தன்னைத்தானே கைதுசெய்து வைத்திருக்கும் பாகுபாடுகள் தகர்க்கப்பட்டு இவர்களுக்கிடையிலான வேறுபாட்டை அல்லாஹ் மட்டும் அறிந்துகொள்ளும் நிலை உருப்பெருகின்றது.

ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஒரே ஆடையை அணிந்து ஒரே தளத்திலேயே பயணிக்கவேண்டியுள்ளது. ஒரே திசையையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அவர்கள் தவாபில் ஈடுபடும் போதும் தொங்கோட்டம் ஓடும் போதும் ஷைத்தானுக்கு கல் எறியும் போதும் குர்பானிப் பிராணிகளை அறுக்கும் போதும் என அவர்களது ஒவ்வொரு அசைவின் போதும் பல மில்லியன் கணக்கான உடல்களெல்லாம் இணைந்து ஒரே உடலாக இயங்கும் நிலையை இக்கடமை தோற்றுவிக்கின்றது. 

இம்மாபெரும் ஒருமைப்பாடு எமக்கு கற்றுத்தரும் பாடங்களும் படிப்பினைகளும் ஏறாளம்! இந்த ஹஜ் கடமை தனிமனிதர்களை ஒரு கூட்டு வாழ்க்கைக்குள் தள்ளிவிடுகின்றது. அவர்களிடம் காணப்படும் தனியடையாளங்களை அகற்றி ஒரு கொள்கை வழிச் சமுதாயத்தின் அடையாளம் எழுச்சிபெருகின்றது. 

ஹஜ் கடமையின் மூலம் ஏற்படும் அடுத்த மாற்றத்திற்குப் பிரதான அடிப்படையாக அமைவது ஹஜ் கடமையை நிறைவேற்றுபவரின் பிரார்த்தனையாகும். 

தல்பியாவுடன் அவனது பிரார்த்தனை ஆரம்பித்து இதர கிரியைகளிலும் தொடர்ந்து செல்கிறது. உண்மையில் ஒரு ஹஜ் யாத்திரிகர் மேற்கொள்ளும் பிரார்த்தனை அவரின் இயலாமையை வெளிப்படுத்துவதற்கப்பால் அவர்களது பலத்தை அது அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றது. வணக்கத்துக்குத் தகுதியான அல்லாஹ்வின் பக்கம் மாத்திரம் ஒதுங்கும் பண்பை அது பிரதிபலிக்கின்றது. தல்பியா என்கின்ற மகுட வாசகம் பல்வேறு தேசங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் உடையவர்கள் முன்வைக்கும் ஒத்த கோஷமாக காணப்படுகின்றது. பௌத்தீகரீதியான வேறுபாடுகளுக்கப்பால் கொள்கைரீதியாக ஒத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்துவிடுகின்றது.

ஹஜ்ஜினால் ஏற்படும் அடுத்த நடத்தைகோல மாற்றம்தான் பிற மனிதர்கள் பற்றிய மனிதாபிமான சகோதரத்துவ பார்வையாகும். உலகில் எட்டுத்திசைகளிலும் பரந்து வாழும் மனிதர்களை புனிதமிக்க கஃபாவின் நிழலில் ஒரே குடையின் கீழ் ஒன்று கூட்டுகின்ற சந்தர்ப்பத்தை இந்த ஹஜ் ஏற்படுத்துகின்றது.

கிழக்கை சேர்ந்தவனும் மேற்கை சேர்ந்தவனும் ஒன்றினைந்து உறவாடும் நிலையை அது தோற்றுவிக்கின்றது. அவர்கள் பரஸ்பரம் அலாவிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெருகின்றது. இதனால் அவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சை துளிர்விட ஆரம்பிக்கின்றது. 

ஹஜ்ஜினால் ஏற்படும் இன்னொறு நடத்தைகோல மாற்றம்தான் உளப்பரிசுத்த நிலையாகும். உண்மையில் ஹஜ்ஜூக்குச் சென்று கல் எறிதல் என்ற கடமையை நிறைவேற்றும் போது அது அவர் உள்ளத்தில் பல பாதிப்புக்களை உண்டாக்கிவிடுவதை நாம் பார்க்கலாம். ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற எத்தணிப்பதற்கு முன்னர் தீமைகளிலும் பாவங்களிலும் மூழ்கியவராக இருந்திருக்கலாம். இப்படியான ஒருவர் கல் எறிதல் என்ற கடமையை நிறைவேற்றும் போது கல்லெறியும் இடத்தில் அங்கு உண்மையில் இப்லீஸ் இருப்பதில்லை. இவர்கள் வீசுகின்ற கற்கள் ஷைத்தானை பலி தீர்ப்பதுமில்லை. 

ஆனால் இக்கடமையை நிறைவேற்றிய பின் ஒரு முஃமினின் உள்ளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதாவது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் ஷைத்தானின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் மனோ நிலையை இந்த அமல் ஏற்படுத்துகின்றது. எனவேதான் பாவங்களிலிருந்து மனிதனை காத்து இறைவனின் விசாலமான பாவமன்னிப்பை நோக்கி பயணிக்கச் செய்கின்றது. இவ்வாறு ஹஜ் கடமை ஒரு முஃமினின் வாழ்வில் பல மாற்றங்களை தழுவி காணப்படுவதைக் காணலாம்.

No comments

Powered by Blogger.