கணவன் அடித்தால் மனைவி தாங்கிக்கொள்ள வேண்டுமா..?
"குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
"என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, "ஆன்-லைன்' மூலம், பிரசாரம் செய்து வருகின்றன. பெண் வழக்கறிஞர்கள் சிலர், இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை நீதிபதியைச் சந்தித்து, மனு ஒன்றையும் அளித்து உள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாளும் போது, அனைத்து நீதிபதிகளும், சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக, வழிகாட்டிக் குறிப்புகளையும், தலைமை நீதிபதி வெளியிட வேண்டும். பெண்களின் உணர்வுகளை புரிந்த நீதிபதிகளை, குடும்ப நல கோர்ட் மற்றும் வீட்டு வன்முறை தொடர்பான வழக்குகளை, விசாரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment