Header Ads



பெருநாளுக்கு மருதாணி போட்ட பெண்களுக்கு வந்த அச்சம்..!


இந்தியா - மருதாணி பவுடரில் ரசாயனம் கலந்து, "மெகந்தி' என்ற பெயரில் விற்கப்படும் பவுடரில், விஷம் இருப்பதாகப் பரவிய வதந்தியால், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கைகளில் மெகந்தி இட்டோர் பீதியடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், அரசு மருத்துவமனைகளில் குவிந்து, பெண்கள் முன் பரிசோதனையுடன், நோய் தடுப்பு ஊசியையும் போட்டுக் கொண்டனர்.
இஸ்லாமிய பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கைகளில் மெகந்தி இட்டு, ரம்ஜானைக் கொண்டாட தயாராக இருந்த நிலையில், மெகந்தியில் விஷம் இருப்பதாகவும், அதனால், வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டு, கைகள் கறுப்படைவதாகவும், நேற்று வதந்தி பரவியது. வதந்தி எங்கிருந்து ஆரம்பமானது என, இதுவரை தெரியாத நிலையில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கோவை, நெல்லை என, பல மாவட்டங்களிலும் பீதி பரவியது.

சென்னையில்...: திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், மண்ணடி, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் போன்ற பகுதிகளில், இஸ்லாமியர்கள் பெரும் பீதியடைந்தனர். மெகந்தி இட்டவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், ஸ்டான்லி, ராஜிவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைகளில், நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.

மெகந்தி குறித்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த, ஆயிஷா கூறியதாவது, கிராமத்தை போல், மருதாணி வாங்கி, அதில் சில பொருட்களை போட்டு, அரைத்துப் பயன்படுத்த நேரமில்லை. அதனால், ஆயத்தமாக, சில ரசாயன கலப்புடன் கடைகளில் கிடைக்கும் மெகந்தியை உபயோகிக்கிறோம். இந்த ரம்ஜானுக்கும் வழக்கம்போல், கைகளில் மெகந்தி இட்டோம்; சில மணி நேரத்திற்குப் பின் கழுவினோம். ஆனால், அந்தக் கைகளால் சாப்பிட்ட போது, தலை சுற்றலும், வாந்தியும் வந்தது. என்னைப் போன்று பலருக்கும் அவ்வாறு இருந்ததால், மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

300 பேருக்கு ஊசி: வாந்தி, தலைசுற்றல் போன்ற பாதிப்பு, ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தாலும், மெகந்தி இட்ட பயத்தில் பலர், மருத்துவமனைகளில் குவிந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில், 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதில், ஏழு குழந்தைகள் உட்பட, 42 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 67 பேர் பரிசோதித்து, தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில், மூன்று பேருக்கு, "குளூக்கோஸ்' ஏற்றப்பட்டு, வீடு திரும்பினர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், 200 பேர் பரிசோதிக்கப்பட்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மெகந்தி குறித்து, ஸ்டான்லி மருத்துவர்கள் கூறியதாவது: கடைகளில் கிடைக்கும் ஆயத்த மெகந்தியில், ரசாயனக் கலவை இருக்கும். இது சிலரது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால், அலர்ஜி ஏற்பட்டு, கைகளை நுகரும்போது, தலை சுற்றல் வாந்தி வருவது போன்ற நிலை ஏற்படும். அப்படித் தான் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் யார் உயிருக்கும் பாதிப்பில்லை. பயத்தின் காரணமாகவே மற்றவர்களும் வந்து பரிசோதித்து சென்றுள்ளனர். தலைசுற்றல், வாந்தி பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டு அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர். போலீசார், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்தனர்.

கடைகள் மீது தாக்குதல்: மெகந்தியில் விஷம் இருப்பதாக முதலில் கிளம்பிய வதந்தி, பின், பால், குடிநீரில் விஷம் இருப்பதாக உருமாறியது. வதந்தியால் ஏற்பட்ட கலக்கத்தில், ஆம்பூரில் மூன்று மெகந்தி கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சுற்றி, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், வதந்தி பரவியதால், நள்ளிரவு, 2 மணிக்கு, ஐந்து பெண்கள், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். வதந்தி @வகமாக பரவியதால், அதிகாலை வரை, 137 பேர், முன்னெச்சரிக்கையாக சிகிச்சைக்கு வந்தனர்.

மெகந்தி அலர்ஜி குறித்து, சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியதாவது: காலாவதியான அல்லது ராசாயனம் அதிகம் கலந்துள்ள மருதாணி பவுடரை பயன்படுத்தியதால், சிலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. முடிந்தவரை, கடைகளில் விற்கும் மருதாணி பவுடர்களை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. இயற்கை முறையில், மருதாணி இலையை அரைத்து, அதைக் கொண்டு கைகளை அலங்கரித்துக் கொண்டால், விழாக் காலங்களில் இதுபோன்ற அவஸ்தைகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

திண்டுக்கல்லிலும் பீதி: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் மெஹந்தி வைப்பதால், அரிப்பு, மயக்கம், வாந்தி ஏற்படுவதாக வதந்தி பரவியது.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பேகம்பூர், யூசுப்பியா நகரை சேர்ந்த பெண்கள் கைகளில் மெஹந்தி வைத்துள்ளனர். சேலம் உட்பட சில மாவட்டங்களில் மெஹந்தி வைத்தவர்கள் மயக்கம், வாந்தி, கைகளில் அரிப்பு ஏற்பட்டதாக போன் மூலம் திண்டுக்கல்லில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்றனர். இவர்களில் அலர்ஜி ஏற்படுவதாக கூறவே 44 பேருக்கு ஊசி போடப்பட்டது. அனுமதி: காலாவதியான மெஹந்தியை தள்ளுவண்டி வியாபாரியிடம் வாங்கி பயன்படுத்திய பேகம்பூர் பர்வின்,23, ரசிதா பானு,18, யாஸ்மின், (இரண்டரை வயது) ஆகியோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்

No comments

Powered by Blogger.