Header Ads



ஹொஸ்னி முபாரக் சிறையிலடைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமினின் ஜனாதிபதி வேட்பாளர்

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தனது முந்தைய தீர்மானத்தை மாற்றியே அந்த அமைப்பு தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

இதன்படி எதிர்வரும் மே 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு சார்பில் அதன் துணைத் தலைவர் கைரத் அல் ஷாதிர் போட்டியிடவுள்ளார். எகிப்து மக்கள் எழுச்சியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி தலைவர் மஹ்மூத் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுத் தாக்கல் திகதி முடிவுறும் தறுவாயிலேயே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது சொந்த வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எகிப்து ஜனாதிபதி தேர்தல் மேலும் தீர்க்கமாகியுள்ளது.

ஏற்கனவே முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நடந்து முடிந்த எகிப்தில் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை வென்றதோடு, அந்நாட்டின் புதிய அரசியல் யாப்பை அமைக்கும் குழுவிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் கைரத் அல் ஷாதிர் ஏனைய வேட்பாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முன்னணி வேட்பாளராக ஹொஸ்னி முபாரக் அரசின் வெளியுறவு அமைச்சராகவும், அரபு லீக் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகமாகவும் இருந்த ஆமர் மூஸா செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவிர எகிப்தின் கடும் போக்கு இஸ்லாமிய கட்சியான அந்நூர் உட்பட மேலும் பல இஸ்லாமிய வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் ஹொஸ்னி முபாரக் அரசில் துணை ஜனாதிபதியாக செயற்பட்ட ஒமர் சுலைமான் ஆளும் இராணுவ கவுன்ஸிலின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் குதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எகிப்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியில் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கும் ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நீடித்து வருகிறது.

எனினும் எகிப்து ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்தே சிவில் அரசிடம் ஆட்சியை கையளிப்பதாக இராணுவ கவுன்ஸில் அறிவித்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான 61 வயது கைரத் அல் ஷாதிர் 1974 ஆம் ஆண்டு அந்த அமைப்புடன் இணைந்துகொண்டார். பொறியியலாளரான இவர் தொழிலதிபருமாவார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் நிதியாதாரங் களில் இவரது பங்கு முக்கியமான தாகும்.

முன்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இவர் 12 ஆண் டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். எனினும் கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து இவர் விடுதலை பெற்றார்

No comments

Powered by Blogger.