Header Ads



எமது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை


எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். 

இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிவதாகவம் அவர் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த மூன்று தசாப்ததுக்கு மேற்பட்ட காலமாக ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் இருந்தது என்பது மிகவும் அரிதான விடயமாகும். அதனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகமாகவே நாங்கள் இருந்துவந்துள்ளோம். அந்த அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சமூகம் பல வழிகளில் சுரண்டப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் இன்று இரவு பகல் பாராமல் தங்களது வேலைநேரக்கடமைக்கு அப்பால் சென்று விடுமுறைகள் என்று பாராமல் எந்தவித இனவாத, மதவாத நோக்கமில்லாமல் உளச்சுத்தியுடன் கடமையாற்றிவரும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளை அரச பயங்கரவாதம் என்று சொல்கின்ற கீழ்தரமான அரசியலை சிலர் மேற்கொள்கின்றனர். 

அரசியல் அதிகாரம் என்பது இன்று எங்களது கைகளிலும் இருக்கின்றது. அதன்காரணமாகவே இன்று எமது சமூகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்திவருகின்றோம். ஆளுந்தரப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் கொண்டுவந்துள்ளார்கள். 

இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான மூன்று விதமான பிரச்சினைகள் உள்ளன. இந்த மூன்று விதமான பிரச்சினைகக்கும் இராஜதந்திரமான அணுகல்களை மேற்கொண்டு தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதே எங்கள் அரசியல் பயணமாகும். இதில் எந்தவித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லாமல் மிகவும் தெளிவாகயிருக்கின்றோம். 

இன்று பாதுகாப்பு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுகின்றது. உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. 

அரசாங்கத்துடன் நாங்கள் இருந்து ஜனாதிபதியுடன் பிரதமருடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் பேசி ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காத்திரபூர்வமாக முன்னெடுத்து படிப்படியாக மேற்கொண்டுவருகின்றோம். மூன்று தசாப்தமாக விடுவிக்கப்படாத கும்புறுமுலை இராணுவமுகாம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 

எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. தமிழ் எம்பிக்கள் 16 பேர் முட்டுக்கட்டை கொடுத்து பாதுகாத்த நல்லாட்சிக்காலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதியை பொதுமன்னிப்பில் விடுவிக்கமுடியவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒரே தடவையில் 16 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிடுவித்தார்.

No comments

Powered by Blogger.