Header Ads



மர்ஹூம் பாக்கீர் மாக்கார் - முஸ்லிம் இளைஞர்கள் சமூகத்துக்காகப் பணியாற்ற முன்வரவேண்டும்


இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும்,  அமைச்சரும், இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆளுனருமான அல்ஹாஜ் எம். ஏ. பாக்கீர் மாக்கார் காலமாகி வரும் செப்டம்பர் 10 ம் திகதிக்கு சுமார் 24 வருடங்கள் ஆகின்றன. அதனையொட்டி இந்த சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.    கட்டிப் போட்டுவிட முடியாத கால வேகத்தின் கைகளால் காயமாகிவிடாத ஒரு வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியான வரலாறாகக் கண்டு பிடிக்கப்படுகிறான்.

        மனிதன் வாழ்க்கையைப் பதிப்பித்தாலும், வாழ்க்கை மனிதனைப் பதிப்பித்தாலும் அவனால் வாழ் நாளில் முன் வைக்கப்படுகின்ற சாதனைகளே சரித்திரச் சான்றுகளாகச் சாட்சி சொல்ல வருகின்றன.    பாக்கீர் மாக்காரினது வாழ்க்கையை அலசும் போதும், ஆங்காங்கே கிடைக்கின்ற தகவல்கள் யாவும் சரித்திரப் பதிவுகளாக அங்கீகரிக்கக் கூடியவைகள்தான்.

         ஆளுமைகளுடன் மனிதன் பிறப்பதில்லை. அவனுடைய பெற்றோரும் சமூகமும் பக்கபலமாக இருக்கும் போது அல்லாவின் விருப்புக்குறியவன் ஆளுமையின் உச்சிக்கே செல்கின்றான். அவ்வாறான தலைவர்கள் பலர் எமது சமூகத்தில் தோன்றி மறைந்திருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு முஸ்லிம் சமூத் தலைவர் மர்ஹூம் பாக்கீர் மாக்கார்.    இன்றைக்கு 104 வருடங்களுக்கு முன்பு பேருவளை மருதானையில் பிறந்த பாக்கீர் மாக்கார் அவர்கள், இவ்வுலகை விட்டு பிரிந்து, வரும் செப்டம்பர் 10 ம் திகதிக்கு சுமார் 24 வருடங்கள் ஆகின்றன.

        அல் ஹாஜ் .எம் ஏ பாக்கீர் மாக்கார் ஒரு சிறந்த சமூகத் தலைவறாக , நல்ல தந்தையாக, ஒரு ஆசிரியராக, திறமையான சட்டத்தரணியாக, பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவராக, அமைச்சராக , பாராளுமன்ற சபாநாயகராக, தென் மாகாண ஆளுனராக, இரு வாரங்கள் பதில் ஜனாதிபதியாக, உயர் பதவிகளை அழங்கரித்த முதல் முஸ்லிம் தலைவராவார்.       முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன ஸ்த்தாபகராக , மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற பேச்சாளராக, ஏன் ஒரு நல்ல இராஜதந்திரியாக வாழ்ந்து விட்டுச் சென்றார்கள்.

        பாக்கீர் மாக்காரின் வீடு எனது வீட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கின்றது. அதனால் அதிகம் அவருடன் நெருங்கி பழக கிடைத்தது. அவர் ஓய்வாக இருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து அரசியல் சமூக விடயங்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளக் கிடைத்தது. எப்போதும் கையில் தஸ்பி ஒன்றை வைத்து திக்ரு செய்து கொண்டிருக்கும் அவரிடம் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதால் அவருடைய உரைகளை கூட்டங்களிலும்  வானொலியில் நான் மாணவனாக இருந்த போது விரும்பிக் கேட்பதுண்டு.

             மர்ஹூம் பாக்கீர் மாக்கார் 1917 ம் ஆண்டு  மே மாதம் 12 ம் திகதி பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா ஆரம்ப பாடசாலையிலும்,பின்பு 1924ம் ஆண்டு கொழும்பு 12 ல் உள்ள, சென் செபஸ்த்தியன் கல்லூரியிலும் ,  பின்னர் மருதானை ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்றார்கள். பின்னர் அதே ஸாஹிறாவில் சிறிது காலம் ஆசிரியராகவும் இருந்தார்கள். இவர் ஆசிரியராக இருக்கும் போது மர்ஹும் டி பி ஜாயா அவர்கள் ஸாஹிறாவின் அதிபராக இருந்தார்கள். பின்னர் சட்டக் கல்லூரி சென்று சிறந்த ஒரு சட்டத்தரணியாக வெளியேறினார். அப்போதெல்லாம் சட்டம் படித்த ஆளுமை உள்ளவர்கள் தான் அரசியலில் சாதித்துக் காட்டினார்கள்.

   பாக்கீர் மாக்கார் அவர்கள் 1950 ம் ஆண்டு தொடக்கம் 1970 ம் ஆண்டுவரை, பேருவளை நகர சபையின் தலைவராகப் பதவி வகித்தார். 

1977 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பேருவளை தேர்தல் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அன்று முதல் மாகாண சபைகள் அமைக்கப்படும் வரை பேருவளைத்  தொகுதியின் தோல்வி அடையாத உறுப்பினராக இருந்தார். 

 அவர் பாராளுமன்றில் உப சபாநாயகராக முதலில் தெரிவு செய்யப்பட்டார்கள், காலப்போக்கில் சபாநாயகராக பதவி உயர்வு பெற்றார்.

       ஆரம்பத்தில் பேருவளை மக்கள் பிரதிநிதியாக இருந்த கௌரவ பாக்கீர் மாக்கார், சபாநாயகராக மிளிர்ந்த பிறகு இலங்கை முஸ்லிங்களுக்கு தலைவரானார்கள். தன்னுடை உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி மும்தாஸ் மகால் முஸ்லிங்களின் நலன் பேணும் அலுவலகம் போன்று மாறியது . தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வந்து தங்கள் பிரச்சினைகள் பற்றி அவருடன் கலந்துரையாடினார்கள். அவ்வப்போது அவற்றுக்கு தீர்வும் பெற்றுக் கொடுத்தார்கள். வார இறுதியில் பேருவளை வருவார். மஸ்ஜிதுல் அப்ராரின் நிர்வாக சபைத் தலைவர். மற்றும் சாதுலிய்யாத் தரீக்காவின் நடாவடிக்கைகளில் மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார்கள். மஸ்ஜிதுல் அப்ராரில் இடநெறுக்கடி காரணமாக  பள்ளிவாசல் விரிவாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டது. ஆளுனர் சபைத் தலைவர் என்ற அடிப்படையில் ஊர் ஜமாத்தாரோடு இணைந்து பள்ளிவாசளை நவீன இடவசதி கொண்ட பள்ளிவாசளாக மாற்ற அரும் பாடுபட்டார்.      தனது தொகுதி மக்களுக்கு இன மொழி பாராமல் அரச தொழில் வழங்கி, வீட்டுத்திட்டங்கள் அமைத்து, வீதிகளை புணரமைப்பு செய்து, பாடசாலைகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்தார். 

பின்னர் களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற பிரதிநிதி என்பதால் தனது சேவைகளை மாவட்டம் முழுதும் விரிவுபடுத்தினார். அனேகமாக களுத்துறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் அவர் பெயரில் ஒரு கட்டடமாவது இருக்கும். இளைஞர்களுக்காக பல விளையாட்டு மைதானங்களை அமைத்தார். பேருவளை தொகுதி பெரும்பான்மையினர் அதிகம் வாழுமிடம். அங்கு முஸ்லிங்கள் அரசியலில் செல்வாக்குள்ளவர்களாக இன்றுவரை இருக்க அடித்தளமே மர்ஹூம் பாக்கீர் மாக்கார் தான் காரணம் என்றால் அது மிகையாகாது. இன்று கூட நான் பல இடங்களில் சந்திக்கும் பெரும் பான்மையினர் அவரது புகழ் பேசுவதும் அவர்கள் குடும்பத்தை பற்றி விசாரிப்பதும் உண்டு.

         சமூக நலனுக்காக மிகவும் தூர நோக்கோடு செயற்பட்ட மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் இந்நாட்டில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் என்ற ஆல விருட்சத்தை நட்டு அதன் நிழலில் சமுதாயம் என்றென்றும் பயன்பெறக் கூடிய நிலையை உருவாக்கினார். இளைஞர்களுக்கு தலைமைத்துவம் கொடுத்து அவர்களை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்கக் கூடிய ஒரு ஸ்தாபனம் இல்லையே எனக் கவலையுற்றார் அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் அவர்கள். அப்போதைய அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் உப தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்னார் முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்கள். இப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1967ல் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவு தோற்றம் பெற்றது. பின்னர் அது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி என்ற பெயரில் இயங்கியது. அல்ஹாஜ்  மர்ஹூம் எம். ஏ. பாக்கீர் மாக்கர் அவர்கள் சபாநாயகராக இருக்கும்போது பெரும் முயற்சி எடுத்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் என்ற பெயரில் அதனை புது மெருகூட்டி ஸ்தாபித்தார். அதற்கான யாப்பு ஒன்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்றாற்போல  அமைக்கப்பட்டது. 1980 ஏப்ரல் மாதம் 5ந் திகதி  நாடளாவிய ரீதியில் பங்குபற்றிய பிரதிநிதிகளைக் கொண்டு கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தின்போது அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் அவர்கள் புதிய அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய தலைவராகவும் அல்ஹாஜ் ஏ.எம். நசீர் பொதுச் செயலாளராகவும், அல்ஹாஜ் நவாஸ் ஏ. கபூர் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டர்கள். இந்த இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் சூராவளிப் பயணம் மேற்கொண்டு அதன் வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் அயராது உழைத்தார்கள். அன்னாரின் அரிய முயற்சியின் காரணமாக  நாடெங்கிலும் 600க்கு மேற்பட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்ணணிகள் தோற்றுவிக்கப்பட்டன. அகில இலங்கையிலும் சகல முஸ்லிம் கிராமங்களுக்கும் விஜயம் செய்த ஒரே முஸ்லிம் தலைவர் அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் என்பதைத் துணிந்து கூறலாம். தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட காலடி எடுத்து வைக்காத முஸ்லிம் கிராமங்களுக்கு கூட அன்னார் விஜயம் செய்து அவர்களின் குறைகளைத் தீர்த்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த இயக்கத்தின் மூலம் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் இளைஞர்களின் சமூக உணர்சசிகளையும் நாட்டுப் பற்றையும் ஏற்படுத்தி அவர்களைத் தட்டியெழுப்பியதன் மூலம் அவர்களிடையே புத்தொளியையும் புதுத்தெம்பையும் ஊட்டி இளைய தலைமுறையை  உருவாக்குவதில் வெற்றி கண்டார்.

       ஸ்தாபகத் தலைவரான மர்ஹூம் அல்ஹாஜ் பாக்கிர் மார்க்காருடன் தோளோடு தோள் நின்று அதன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்த ஆரம்ப ஸ்தாபகர்கள் பலரையும் நாம் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்.     கிராமப் புற முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி தேசிய தலைவர்காளக வரும் வாய்பை அளித்த ஒரே முஸ்லிம் இயக்கம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் மாத்திரமே.  அதற்கு வழி காட்டியவர் , ஸ்தாபகத் தலைவராகிய மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் ஆவார்.

முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளணத்தின் மூலம் அன்னார் சமுதாய மேம்பட்டுக்காக விசேஷமாக இளைஞர்களின் மறுமலர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபாட்டர். இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் சம்மேளத்தின் இளைளுர் பட்டாளம் புடைசூழ அன்னார் முதல் நபராக அங்கு சென்று தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். 1978ஆம் ஆண்டு கட்டுநாயக்காவில் இந்தோனேஷியா ஹஜ் விமானம் விபத்துக்குள்ளாகிய போது உடன் அங்கு சென்று ஆற்றிய பணி மகத்தானது. இதன் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்துக்காக இந்தோனேஷிய அரசாங்கம் 75000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கி உதவியது. 

நாட்டின் ஆங்காங்கே இனக் கலவரங்கள் தலைதூக்கியபோதெல்லாம் அவற்றைக் கட்டுப்படுத்தி சகவாழ்வு நிலைத்திருக்க வழி செய்யப்பட்டது.

1978ல் கிழக்கு மகாகாணத்தில் கடும்புயல் தாக்கியபோது அங்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோடு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக ஈராக் அரசிடமிருந்து சதாம் ஹுசைன் மாதிரிக் கிராமம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் 150 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ன. 1986ல் கந்தளாய் குளம் உடைந்து அனர்த்தம் ஏற்பட்டபோது உடன் அங்கு சென்று தேவையான நிவாரணம் பணிகளை மேற்கொண்டமை மறக்க முடியாத சம்பவமாகும். நாட்டின் பல பகுதிகளில் பல தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

முஸ்லிம்களுக்கான தனியான ஊடக நிறுவனம் தேவை என்பதை வலியுறுத்திய அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளணத்தின் மூலமாக மாதம் இருமுறை உதயம் என்ற தமிழ் பத்திரிகையையும், டோன் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிடச் செய்தார். இப்பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவர நிதிப் பற்றாக்குறை ஏற்பட்ட போது மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் தனது சொந்த நிதியை வழங்கி உதவி செய்தார். சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றிய மாபெரும் பணிகளில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஒரு சிறு துளி மாத்திரமே. இது மர்ஹூ பாக்கீர் மாக்கார் ஏற்படுத்திய சமூகப் புரட்சி என்றே கூறலாம். சமூக விடயங்களில் அக்கறையற்றிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மர்ஹூம்  பாக்கீர் மாக்காரின் துணிகரமான செயல்களை தலைமேற்கொண்டு சமூகத்துக்காகப் பணியாற்ற முன்வரவேண்டும். அதன் மூலம் அன்னாரது கனவை நனவாக்குவதில் பங்களிப்புச் செய்ய வேண்டும். இது இந்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும்.

        இவ்வையகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் என்ற புனித குர்ஆன் வசனத்திற் கேற்ப,  இற்றைக்கு 24 வருடங்களுக்கு முன்பு 1997 ம் ஆண்டு செப்டம்பம் மாதம் 10 ம் திகதி பாக்கீர் மாக்கார் இறையடி எய்தினார்.        மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களுக்கு ஜன்னதுல பிர்தௌஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என்று இத்தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். ஆமீன்.

அகமட் ஸுல்பிகார். நிர்வாகச் செயலாளர்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்

No comments

Powered by Blogger.