Header Ads



ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது - 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், பிரதான வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சில பொலிஸ் குழுக்களை நியமித்து, அவ்வாறு செயற்பட வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாது ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களின் 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதான வீதிக்கு சேதம் ஏற்படுத்தியமை, பெருமளவான மக்களை ஒன்றுகூட்டியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.