Header Ads



சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்பு துறைமுக நகரை தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்க தீர்மானம் - 7 சட்டங்கள் பொருந்தாது



சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446 தசம் ஆறு ஹெக்டயரிலுள்ள கொழும்பத்ு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.

ஐவருக்கு மேற்பட்ட, எழுவருக்குக் குறைந்த ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் இந்த ஆணைக்குழுவின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிதியத்திற்குச் செல்லும்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்கள், இந்த விசேட பொருளாதார வலயத்திற்குப் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய துறைமுக சபையின் 1978, 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த சட்டம், நகர மற்றும் கிராமிய கட்டளைச் சட்டம், மூலோபாய அபிவிருத்தித் திட்டச் சட்டம், பொது ஒப்பந்த உடன்படிக்கைச் சட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு சபைச் சட்டம் ஆகியன இதில் அடங்குகின்றன.

உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம், 2002 மற்றும் 2005இல் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம், கலால் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், சுங்க கட்டளைச் சட்டம், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம் ஆகியன மூலம், கொழும்பு துறைமுக நகரை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி வரிச் சட்டம், பந்தயம் மற்றும் கலால் சட்டம், தொழிலாளர்களின் வேலையை நிறுத்துவது தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம், களியாட்ட வரிச் சட்டம், அந்நியச் செலாவணி மற்றும் கெசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம் ஆகியவற்றிலிருந்தும் இந்த வலயத்தை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் மூலோபாய முக்கியத்துமுள்ள வர்த்தக நடவடிக்கைளுக்கு, நாற்பது வருடங்களுக்கு வரியிலிருந்து விடுவித்தல், ஊக்குவித்தலுக்கும் பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, ஜனாதிபதி அல்லது துறைமுகத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு முன்வைக்கும் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர், மூலோபாய முக்கியத்தும் மிக்க வர்த்தக நடவடிக்கைகள் அடையாளம் காணப்படும்.

இவ்வாறான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகங்களை, துறைமுக நகருக்குள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேவையேற்படின், ஐந்து வருட காலத்திற்குள் நாட்டில் ஸ்தாபித்து நடைமுறைப்படுத்த முடியும்.

அந்தக் காலப்பகுதிக்குள் குறித்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் மூலமாக வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளும் கிடைக்கும்.

இந்தச் சட்டமூலம், அமைச்சரவை அனுமதியின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அது தொடர்பிலான விவாதம் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.