February 02, 2021

முஸ்லிம் வாலிபர் சங்கம் (YMMA) யாழ்ப்பாணம் - கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 2021


முஸ்லிம் வாலிபர் சங்கம் (YMMA) சங்கத்தினரால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக வருடாவருடம் வழங்கப்படும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இவ்வாண்டும் ( 2021) 10வது ஆண்டு நிகழ்வாக அமைந்தது. இவ்வாண்டு ஏறத்தாழ 2000 மாணவர்களுக்கு வழங்குவதற்காக  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. எம்மால் வழங்கப்படும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்பாக பெற்றோர்கள்,அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  எனப் பலரும் பாராட்டுதல் தெரிவித்தார்கள்

கடந்த காலங்களில் எமது சங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேறிய  முஸ்லிம் மாணவர்களை மையப்படுத்தியே இடம்பெற்றது. 2020ல் முஸ்லிம் அல்லாத ஏனைய பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இம்முறை Covid 19 நிலைமைகளால்  சுகாதார நடைமுறைகளைக் கருத்தில்  கொண்டு மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் ஒரு மீற்றர் இடைவெளியும் பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதிபர், ஆசிரியர்களும் சிறந்த  ஒத்துழைப்பு  நல்கினர். இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் யா/ஒஸ்மானியா கல்லூரி, யா/கதிஜா மகளிர் கல்லூரி, யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யா/நாவாந்துறை றோ. கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு  வழங்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/நாச்சிக்குடா முஸ்லிம் கலவன் வித்தியாலயம், கிளி/செம்மங்குண்டு தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கிளிநொச்சியில் பிற பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இது தவற யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பாடசாலையல்லாத பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களும்   கற்றல்  உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

 நாம் கடந்த காலங்களில்  நிதி வளப் பற்றாக்குறை காரணமாக முஸ்லிம் மாணவர்களுடன் எமது சேவைகளை மட்டுப்படுத்திக் கொண்டோம். கடந்த வருடத்திலிருந்து சமுகங்களிடையே நல்லுறவை பேணவும் சகவாழ்வு கோட்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் எமது எதிர்காலத் திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

இவ்வருடம் கீழ்க்காணூம் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் தேவைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கினோம். யா/மண்கும்பான் முஸ்லிம் மாணவர்கள், யா/நெய்னாதீவு முஸ்லிம் மாணவர்கள்  யா/நாவலர் பாடசாலை முஸ்லிம் மாணவர்கள், யா/இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் மாணவிகள், யா/மத்திய கல்லூரி முஸ்லிம் மாணவர்கள், யா/St. ஜேம்ஸ் வித்தியாலயம் முஸ்லிம் மாணவர்கள், யா/கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம், யா/ஆனைப்பந்தி மெதடிஸ்ற் வித்தியாலயம், யா/இந்து ஆரம்ப பாடசாலை  போன்ற பல்வேறு பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1972ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஸதாபிக்கப்பட்ட அரசியல் அற்ற, தர்ம ஸ்தாபனம்  ஆகும். இதன் ஸ்தாபக உறுப்பினர்களாக அல்ஹாஜ் எம்.எம். இஸ்ஸதீன்  ஜே.பி, அல்ஹாஜ் மௌலவி இப்ராகீம் ஜே.பி., அல்ஹாஜ் எம். எஸ். றஹீம் ஜே.பி, அல்ஹாஜ்  எம்.எம்.சலீம், அபூசாலிஹ் சக்காப் போன்றவர்களினால ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்தின்  போஷகர்களாக நீதியரசர் அல்ஹாஜ் எம்.எம். அப்துல்காதர் அவர்களும் எஸ்.பீ.ஸீ. ஹலால்தீன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இச்சங்கத்தின் உறுப்பினர்களாக பிர்தௌஸ், கபீர், உபைத்துல்லாஹ், றாசிக், மஹ்ரூப், சபூர், ஆகியவர்களும் செயற்பட்டனர். ஆரம்பத்தில் சங்கத்தின்  காரியாலயம் முஸ்லிம் கல்லூரி வீதியில் மூர் மார்கெட்  கட்டிடத்தில் அமைக்கப்பட்டது. இக்காலத்தில் சிறுவர்களுக்கான வாராந்த மருத்துவ சிகிச்சைகளும், மகளிருக்கான தையல் பயிற்சி வகுப்புக்களும் நடைபெற்றன. தொடர்ந்து இயங்கி வந்த எமது சங்கம் பல்வேறு சமூகப் பணிகளிலும் முன்னின்று  உழைத்து வந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் மேலும்  பல உறுப்பினர்கள் இணைந்து செயல் பட்டனர். அல்ஹாஜ்.இஸ்ஸத்  லாபிர், அல்ஹாஜ் மிஸ்னூன், எம்.எஸ்.ஏ.காதர்,அல்ஹாஜ் எம் .எம்.ஜலால் ஆகியோர் குறிப்பிடக் கூடியவர்கள். 1990 முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் அகதிகளாக நாட்டின் பல பகுதிகளிலும் தஞ்சமடைந்த எமது மக்களின் துயர் துடைக்க பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். புத்தளத்தில் அரச ஊழியர்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் குறைந்த விலையில் காணிகள் வழங்கப்பட்டது. மேலும் 230 வீட்டுத் திட்டங்களும் புத்தளத்திலும் பாலாவியிலும் வழங்கப்பட்டன. மீள்குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் பல்வேறுபட்ட  சமூகத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் முன்னின்று உழைத்து  வருகின்றோம்.

எமது செயற்றிட்டங்களின் வெற்றிக்கு  தங்களின் மேலான ஒத்துழைப்புகளை அன்புடன் வரவேற்கிறோம்.
1 கருத்துரைகள்:

Post a comment