Header Ads



இம்ரான் கான் வந்தாலும், அதனால் யாருக்கு என்ன பலன்..??


- Naushad Mohideen -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகை பற்றி தற்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. இந்நிலையில் அது தொடர்பான என்னுடைய தனிப்பட்ட சில அவதானங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இதை முறையாகப் புரிந்து கொள்வதற்கு இன்றைய பூகோள அரசியல் பின்னணி பற்றிய ஒரு சிறு குறிப்பும் அவசியமாகின்றது.

உலக வல்லரசான அமெரிக்கா டிரம்ப் ஆட்சியில் ஒரு இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு இப்போது ஜோ பைடனின் புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் உலகில் அது தான் இழந்த செல்வாக்கை மீட்டு எடுப்போம் என்ற உறுதியுடன் செயற்படத் தொடங்கி உள்ளது. இந்த செயற்பாடுகளின் ஒரு அங்கமாக அமெரிக்கா மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தற்போது இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த மீள் இணைவு அவதானிக்கத்தக்க ஒன்றாகும். அமெரிக்கா பற்றி அண்மையில் இலங்கையின் முக்கியமான ஒரு அதிகாரி தெரிவித்த கருத்து, இலங்கை நிலைபற்றி கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கடைசியாக வெளியிட்ட டுவிட்டர் செய்தி என்பன அமெரிக்க புதிய நிர்வாகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் மனித உரிமைகள் விடயம் சம்பந்தமாக ஒரு கருத்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அண்மைக் காலங்களில் இலங்கை சீனாவுடன் பல்வேறு மட்டத்தில் நெருங்கிய ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டமையும் அமெரிக்கா இலங்கை மீது அவதானம் செலுத்த பிரதான காரணங்களில் ஒன்றாகும். அமெரிக்க – சீன உறவுகளும் அண்மைக் காலங்களில் மோசமடைந்துள்ள நிலையில் சீன இலங்கை உறவுகளின் நெருக்கம் அமெரிக்காவின் பெரும் அவதானத்துக்கு உற்படுவது இயல்பானதே. அதுபோலவே இந்தியாவின் நிலைப்பாடும். சீனாவும் இந்தியாவும் பாரம்பரியமாகவே எதிரி நாடுகள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. இந்த இரு நாடுகளுக்குமே தமது பிராந்திய செல்வாக்கை நிலை நிறுத்துவதில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவ நிலை பிரதானமானதாகும். அது மட்டும் அன்றி இலங்கையின் வளங்களைச் சூறையாடுவதிலும் இரு நாடுகளும் ஒரு வகை நவ காலணித்துவ போக்கை கடைபிடித்து வருகின்றன. இதிலும் இரு நாடுகளுக்கும் இடையில் போட்டித்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அமெரிக்கா சீனா மற்றும் இந்தியா ஆகிய மும்முனை செல்வாக்கில் சிக்கி அவற்றை சமாளிக்கும் அபிரிமிதாமான முயற்சிகளையும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இலங்கை உள்ளது. ஆனால் இலங்கை மிகவும் மதி நுட்பமான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையில் இலங்கையின் ராஜதந்திர நகர்வுகளும் தேசியவாதத்தை மையப்படுத்தியதாக விவேகமற்ற ஒரு திக்கில் சென்று கொண்டிருப்பது துரதிஷ்டமானதாகும். இதனால் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச அரங்கில் இலங்கையின் நிலை தர்மசங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் இலங்கை இன்னும் ஓரிரு வாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரைச் சந்திக்க உள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை பற்றி இதுவரையிலும் இல்லாத மோசமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில், இதுவரை இல்லாத கடினமான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது. இதில் இலங்கைக்கு எதிரான முகாம்கள் ஓரணியின் கீழ் ஒன்று திரண்டு வருகின்றன. இந்த முறை எப்படியாவது இலங்கைக்கு எதிரான ஒரு கடும் தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கையை சர்வதேச ரீதியாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சியில் அவை முனைப்போடு செயற்பட்டு வருகின்றன. வழமையாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தரப்பில் செயற்படும் குழுக்களோடு இணைந்து, வெளிநாடுகளில் செயற்படும் முஸ்லிம் அமைப்புக்கள் சில இந்த முறை இலங்கையில் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களையும் குறிப்பாக கொவிட்-19 மரணங்களின் பலவந்த தகனம் போன்ற விடயங்களையும் கையில் எடுத்துள்ளன. உள்ளுர் மட்டத்தில் மிகவும் இணக்கப்பாட்டுடன் சாதாரணமாக சமாளிக்க வேண்டிய விடயங்களை அரசாங்கம் தனது பிடிவாத போக்கு காரணமாக ஜெனீவா வரை செல்ல வழியமைத்தமை மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்நிலையில் தனது நெருங்கிய சகாவான இலங்கையை சர்வதேச அரங்கில் காப்பாற்ற வேண்டிய முக்கியமான தேவை சீனாவுக்கு உள்ளது. இந்தியா வழமைபோல் இரட்டை வேடம் போடும். மறுபுறத்தில் அமெரிக்க மற்றும் ஐரொப்பிய தரப்பு இலங்கைக்கு ஒரு பாடம் படிப்பிக்க முனையும். அல்லது இலங்கையை தங்களது நிலைப்பாடுகளோடு இணங்கிப் போகச் செய்யும் வகையில் அடி பணிய வைக்க முயற்சிக்கும். இதில் நிச்சயமாக இலங்கை அடிபணிந்து செல்ல எண்ணாது. அந்தளவுக்கு தற்போதைய அரசு உள்ளுரில் வீராப்பு பேசி உள்ளது. எனவே எப்படியாவது தப்பித்துக் கொள்ளத் தான் முயற்சிக்கும். இந்த தப்பிக்கும் முயற்சியில் இலங்கைக்கு உண்மையாக உதவக் கூடிய ஒரே நாடு இன்றைய நிலையில் சீனாதான். காரணம் சீனாவுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையில் தூரம் அதிகம் மற்றது தமிழ் மக்களின் விடயம் மட்டும் அன்றி இன்று முஸ்லிம்கள் விடயம் தொடர்பாக இலங்கை சிக்கலில் மாட்டிக் கொள்வதை சீனா ஒரு போதும் விரும்பாது. சீனாவில் உள்ள முஸ்லிம்கள் அனுபவிக்கும் துனபங்ளோடு ஒப்பிடுகையில் இலங்கை முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ மேலானதாகும்.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் நாடுகளின் நிலைமையை எடுத்துப் பார்க்கும் போது 14 நாடுகளைக் கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று அங்கு உள்ளது. பொதுவாக மனித உரிமை ஆணைக்குழுவில் நாடுகளும் அவற்றின் வாக்களிப்பும் குழுக்களாகத் தான் நோக்கப்படும். அமெரிக்க ஐரோப்பிய குழு, தென் அமெரிக்க பிராந்திய குழு ஆசிய பிராந்திய குழு, மத்தியகிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் உற்பட ஏனைய பிராந்தியங்கள் சிலவற்றை உள்ளடக்கிய முஸ்லிம் நாடுகள் குழு என்று தான் இது அமைந்துள்ளது. இதில் இலங்கை, தான் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால் முஸ்லிம் நாடுகளைக் கொண்ட குழுவின் வாக்குகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாகும். உள்நாட்டில் முஸ்லிம்களை நடத்துகின்ற விதம் காரணமாக சர்வதேச அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளிடம் நேரடி ஆதரவை கோர முடியாத நிலையில் இலங்கை உள்ளது. எனவே அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கை பயன்படுத்திய ஆயுதம் தான் சீனா. முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குதல் போக்கை கைவிடவும் தயாரில்லை ஆனால் முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் தேவை என்பது தான் இலங்கையின் நிலைப்பாடு. இலங்கைக்கு இந்த உதவியைப் பெற்றுக் கொடுக்க சீனா பிரயோகிக்கும் ஆயுதம் தான் பாகிஸ்தான். பாகிஸ்தானும் சீனாவும் நெருங்கிய ஒத்துழைப்பு கொண்ட நாடுகள். சீனாவின் எதிரி நாடுகளான அல்லது சீனா தற்போது முரண்பாடான போக்கை கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா என்பனவற்றோடு பாகிஸ்தானுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்தால் இலங்கையை இலகுவாகக் காப்பற்றலாம் என்பது தான் வகுக்கப்பட்ட வியூகம். இங்கு சீனா பாகிஸ்தானை தெரிவு செய்யப் பிரதான காரணம் மனித உரிமை ஆணைக்குழுவில் 14 முஸ்லிம் நாடுகளினதும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நாடாக பாகிஸ்தானே செயற்படுகின்றது. இந்த 14 நாடுகளையும் நாம் ஏதோ முஸ்லிம் நாடுகள் என்று குறிப்பிட்டாலும் அதிலும் பல நாடுகளில் மனித உரிமை நிலைப்பாடுகள் கேள்விக்குரியவை தான். இருந்தாலும் ஒரு அமைப்பில் அங்கத்துவம் வகிப்பதால் வாக்களிப்பு என்று வருகின்ற போது அவை முக்கிய இடம் பெறுகின்றன. மனித உரிமை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத இந்த நாடுகள் தமது செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளராக பாகிஸ்தானை நியமித்துள்ளதால் பாகிஸ்தான் வசம் மனித உரிமை ஆணைக்குழுவில் 14 வாக்குகள் உள்ளன என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதம மந்திரி சர்வதேச அரங்கில் அதுவும் முஸ்லிம் நாடுகள் மத்தியில் செல்வாக்கு உள்ள ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் அவரால் இந்த நாடுகளின் வாக்குகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது யதார்த்தமாகும். இதனால் தான் சீ:னா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் நாடுகள் மத்தியில் இலங்கைக்கு ஆதரவு திரட்ட தெரிவு செய்தது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் இம்ரான் கான் ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவராக இலங்கைக்கு வருவதாக இருந்தால் இலங்கையில் முஸ்லிம்களின் நிலை பற்றியும் அவர் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் முஸ்லிம்களை இன்று பெரும் விசனத்துக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ள பிரதான விடயம் விஞ்ஞான ரீதியான உண்மைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் சகல சர்வதேச விதிமுறைகளையும் மீறி கொவிட்-19ஆல் மரணம் அடையும் முஸ்லிம்களை பலவந்தமாகத் தகனம் செய்வதாகும். இதை இம்ரான் கானும் நன்கு அறிவார். இந்த விடயத்தில் நல்லதோர் முடிவைப் பெற்றுக் கொடுக்காமல் தன்னால் முஸ்லிம் நாடுகள் மத்தியில் இலங்கைக்கு ஆதரவாக எந்தப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள முடியாது என்பதை அவர் அதை விட நன்கு அறிவார்

இம்ரான் கானை அவர் போக்கில் விட்டிருந்தால் அவர் இந்த விடயத்தை மிகவும் மதி நுட்பமாகக் கையாண்டிருப்பார் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். அவரது சர்வதேச உரைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் அவரின் தலைமைத்துவ ஆற்றலையும் மதிநுட்பத்தையும் பறைசாற்றி நிற்கின்றன. ஆனால் அவர் அந்த சந்தர்ப்பததை சரியாகப் பயன்படுத்த முன் நமது உள்ளுர் அரசியல் முண்டங்கள் பல பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகம் சென்று அங்குள்ள உயர் மட்ட அதிகாரியை சந்தித்தப் பேசி அவரிடம் இம்ரான் கானை சந்திக்கும் வாய்ப்பைக் கேட்டு நின்றனர். இது அவர்களின் மடத்தனமான அரசியல் நகர்வாகும். அத்தோடு மட்டும் அன்றி இம்ரானுடன் அதுபற்றி பேசுவோம், இதுபற்றி பேசுவோம், அவருக்கு அந்த நெருக்குதலை கொடுப்போம் இந்த நெருக்குதலை கொடுப்போம் என வழமையான வாய்ச்சவடால்களை விட்டு தமது பக்காளி சமூக வலைதள ஊடகவியலாளர்கள் மூலம் அதை பொது அரங்கில் வலம் வரச் செய்தனர். இதனால் நிச்சயம் இலங்கை அரசு ஆத்திரமடைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் விளைவுதான் இப்போது இம்ரானின் பாராளுமன்ற உரைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டுத் தலைவர் உள்ளுருக்கு விஜயம் செய்யும் போது அது பற்றிய முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் மாற்றியமைக்கவும் உள்நாட்டுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையின் கீழ் தான் இம்ரானுக்கான பாராளுமன்ற உரை மறுக்கப்பட்டுள்ளது. இன்னொரு நாட்டின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய அரசியல் கௌரவமாகும். இப்போது இம்ரானுக்கு அது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது ஒரு கௌரவப் பிரச்சினையாகும். இந்த கௌரவப் பிரச்சினையை காரணமாக அவரது விஜயமே ரத்துச் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே நினைக்கின்றேன்.

இன்னொரு வகையில் இம்ரான் கான் வராமல் விட்டால் அதுவே மிகச் சிறந்தது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இம்ரான் வந்தால் அந்த விஜயம் நிச்சயமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான ஒரு விடியலாக அமையப் பேவதில்லை. முஸ்லிம்களின் ஜனாஸா விடயம் என்னவாகும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். முஸ்லிம்களுக்கு எற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக இன்று இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தமிழ் முஸ்லிம் ஒத்துழைப்புக்கள் வலுவடைந்துள்ளதை அண்மைக்காலத்தில் நாம் அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் பிரதிநிதிகள் கோழைத்தனமாக மௌனித்து போன நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களே குரல் எழுப்பினார்கள். பதிலுக்கு தமிழ் தரப்பினர் மேற்கொண்ட கடை அடைப்பு மற்றும் மாபெரும் பேரணி என்பனவற்றுக்கு முஸ்லிம்கள்  மனப்பூர்வமாக முன்வந்து மாபெரும் ஆதரவை வழங்கினார்கள். இங்கும் கூட சில அரசியல் வாதிகள் ஆதரவு வழங்குவது போல் வழங்கி தங்களது பக்காளி எழுத்தாளர்கள் மூலம் வழமையான இனவாத பிரதேசவாத எதிர் கருத்துக்களையும் பரப்பினர். ஆனால் இவற்றை எல்லாம் மீறி மக்கள் ஒன்று பட்டனர் என்ற உண்மையை இங்கு சற்று உரத்துக் கூற வேண்டி உள்ளது. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையைக் காப்பாற்ற அல்லது இலங்கைக்கு ஆதரவளிக்க ஒரு முஸ்லிம் தலைவர் தனது அணியைத் திரட்டி முன்வருவது என்பது தற்போது ஏற்பட்டுள்ள மிக நீண்டகால எதிர்ப்பார்ப்பாக இருந்த தமிழ் முஸ்லிம் நல்லுறவை மீண்டும் குழிதோண்டிப் புதைக்கும் ஒன்றாகவே அமையும். காரணம் மினத உரிமை ஆணைக்குழுவில் தமிழ் தரப்பினர் தமக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி கேட்டு நீண்ட காலமாகப் பேராடி வருகின்றனர்.

இம்ரான் மூலமாக இலங்கை காப்பாற்றப்பட்டாலும், இங்குள்ள பேரினவாத அடிப்படைவாத சக்திகளை அது திருப்தி படுத்தப் போவதில்லை. அவர்களது கரங்கள் மேலோங்கியுள்ள நிலையில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் அதை திசை திருப்பலாம். இம்ரானுக்காகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்காகவும் முஸ்லிம் கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதித்தாலும் அதுவும் பெரும்பாலும் தற்காலிகமானதாகவே அமையலாம். பேரினவாத அடிப்படைவாத சக்திகளின் சூழ்நிலைக் கைதியாக சிக்கியுள்ள இந்த அரசுக்கு அதிலிருந்து மீள எந்த வழியும் தற்போதைக்கு இல்லை. எனவே இம்ரானின் விஜயம் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எவ்வித மீட்சியையும் தரப்போவதில்லை.

2 comments:

  1. Thanks to the incredibly foolishness of whoever is responsible for the decision to Cremate Muslim Covid-19 victims, what should have been a simple matter for Imran Khan has become quite complicated.

    For Imran Khan, what was easily a matter of two birds with one stone i.e. making both China and Sri Lanka happy, looks more like one of displeasing both. Imran may not be concerned about Sri Lanka but displeasing China is not exactly an option.

    Whatever Imran's thoughts may have been on the Cremation issue, our PM's statement in Parliament last week immediately welcomed and appreciated by Imran Khan and the negative comments that followed from Govt. Law Makers must certainly have shocked him. He must be considering his options now.

    Will he continue with the visit or call it off? If it is the former, will he insist on a quid pro quo that SL must allow Burial if he were to canvass the support of Muslim countries?

    If he cancels his trip, obviously the message to SL is quite clear.

    Since China is Very Important to Pakistan, he might possibly discuss the complications with China and it won't be a surprise if the Chinese exert Pressure on SL on the Cremation issue and SL will have little or no choice in the matter because SL needs China more than the Chinese needing SL.

    So, let us hope for the best.

    ReplyDelete
  2. மிக சிறப்பான ஆய்வு. நன்றி நவ்சாட் முகைதீன். இலங்கை அரசு பாரம்பரிய முஸ்லிம்கள் அரபிய அரச செல்வாக்குள்ள புதிய முஸ்லிம்கள் என வகைப்படுத்தியே கையாள்வும் பிரசாரம் செய்யவும் செய்கிறார்கள். 1985 அம்பாறை மாவட்டக் கலவர காலத்தில் இருந்தே இத்தகைய ஒரு பார்வை கிழக்கு தமிழர் மத்தியில் உருவாகி இருந்தது. ஈஸ்ட்டர் தாக்குதலின்பின் கிழக்கு மாகான தமிழர் மத்தியிலும் இத்தகைய கருத்து வலுபெற்று வருகிறது. ஆச்சரியம் என்னவெனில் இன்றுவரை முஸ்லிம்கள் இத்தகைய குற்றச்சாட்டுகள் பற்றிய உரிய ஆய்வுகளையோ புத்தக பதிப்புகளையோ மாநாடுகளையோ நடத்தி ஒரு பொதுமுடிவுக்கு வரவில்லையென்பதே ஆகும். உண்மையில் 1980 பதுகளின்பின்னர் தோழர் அஸ்ரப் உட்பட எந்தவொரு ஆற்றல்மிக்க தலைவர்களாலும் சிறப்பாக இயங்கமுடியவில்லை. இனி பாரம்பரிய , புதிய போக்குகள் பற்றிய குற்றச்சாட்ட்டுகளை ஆராயமலும் இரு தரப்புகளுக்குமிடையில் ஜனநாயரீதியான சமரசத்தை ஏற்படுத்தாமலும் எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல் ஆளுமைகளால் சிறப்பாக செயற்பட முடியாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.