Header Ads



டிரம்ப் இப்போதும் அமெரிக்க அதிபராக இருக்க வேண்டுமென நம்பும் ஆதரவாளர்கள், டெலிகிராமில் கொண்டாடப்படும் தாக்குதல்தாரிகள் - தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை


நவம்பர் 2020-ல் நடந்து முடிந்த தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதில் அதிருப்தி அடைந்திருக்கும் சிலர், அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் அதீத எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட தாக்குதலை நடத்திய சில டிரம்ப் ஆதரவாளர்களால், தீவிரமாக தங்கள் கருத்தை நம்பக் கூடியவர்கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் வெறுப்படைந்திருக்கும் சில தனி நபர்கள், மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என எச்சரித்திருக்கிறது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை.

ஆனால் எங்கு தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது, எப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது போன்ற தகவல்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் பணியிலிருந்த போது அக்கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானது.

அதற்கு முன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியில், தன் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் விரும்பத்தகாத வகையில் உரையாற்றினார். அவ்வுரையில் அமெரிக்க அதிபர் தேர்தல் திருடப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

"நீங்கள் கடுமையாகப் போராடவில்லை எனில், இதற்கு மேல் உங்களுக்கு ஒரு நாடே இருக்காது," என அவ்வுரையில் கூறினார்.

அதன் பிறகு தான் டிரம்பின் ஆதரவாளர்கள், கேப்பிட்டல் கட்டடத்தை நோக்கிச் சென்று, பாதுகாப்பு வீரர்களைக் கடந்து, நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்தார்கள். ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் அச்சம்பவத்தால் உயிரிழந்தார்கள்.

கேப்பிட்டல் கட்டட தாக்குதல் தொடர்பாக, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் டிரம்ப் மீது விசாரணை தொடங்கவிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?

அமெரிக்க கேப்பிட்டல் வன்முறை: 207 வருட பழைய வரலாறு தெரியுமா?

கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன் வெற்றிகரமாகப் பதவியை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என, நேற்று (ஜனவரி 27, புதன்கிழமை) கொடுத்த ஆலோசனைக் குறிப்பில் எச்சரித்திருக்கிறது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை.


"அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும், அதிபர் பதவி கைமாறியதற்கு எதிராகவும், வேறு சில தவறான நோக்கங்களின் காரணமாகவும், சித்தாந்த ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் தாக்குதலில் ஈடுபடலாம் என அந்த விவரங்கள் கூறுகிறது," என அமெரிக்க பாதுகாப்புத் துறை கொடுத்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"தங்கள் வாதத்தில் தீவிரமாக இருக்கும் சில ஆபத்தான தனிநபர்கள், சமீபத்தில் நடந்த அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத் தாக்குதலால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலகங்களை அவர்கள் குறிவைக்க ஊக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம்," எனவும் அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, இப்படி வெளிப்படையாக எச்சரிக்கை கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த கேப்பிட்டல் தாக்குதலில் தொடர்புடைய 400 பேரை அடையாளம் கண்டிருப்பதாகவும், 135 பேரைக் கைது செய்திருப்பதாகவும் வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.

`டெலிகிராமில் கொண்டாடுகிறார்கள்`

தாக்குதல் நடத்தியவர்களை டெலிகிராமில் கொண்டாடுகிறார்கள் என்கிறார் பிபிசியின் லாஸ் ஏஞ்சலஸ் செய்தியாளர் ரீகன் மாரிஸ்.

அவர் மேலும் தெரிவிப்பது பின்வருமாறு:

தங்கள் சித்தாந்தத்தையும் கருத்தையும் கடுமையாக நம்பக் கூடியவர்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அரசு எச்சரித்திருக்கிறது. அவர்கள் கேப்பிட்டல் கட்டட தாக்குதலால் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் கிராமப் புறங்களில், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்தவர்களைத் தேச பக்தர்கள் எனவும், அவர்கள் கொண்டாடப்பட வேண்டும் எனவும் நினைக்கிறார்கள்.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு வலதுசாரியினர்கள் தடை செய்யப்பட்ட பின், அவர்கள் தற்போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். கேப்பிட்டல் கட்டடத்தில் நுழைந்தவர்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்றும், அவர்கள் பெரிய நாயகர்கள் எனவும் டெலிகிராமில் போற்றப்படுகிறார்கள்.

டெலிகிராமில் இருக்கும் அந்த குழுக்களின் பேச்சுக்கள், யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள், டிரம்புக்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் பல சதிக் கோட்பாடுகளால் நிறைந்திருக்கிறது.

இதில் யார் உண்மையானவர்கள், யார் கேலி செய்கிறார்கள் என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சில பதிவுகள் மிகவும் வெறுப்புணர்வை உமிழ்வதாக இருக்கின்றன. சில பதிவுகள் மிக மோசமாக தாக்கக் கூடியவையாக இருக்கின்றன. அக்குழுக்களில் இருக்கும் பலரும் வரலாற்றை மறுக்கிறார்கள் அல்லது தற்போதைய நிகழ்காலச் சம்பவங்களை மறுக்கிறார்கள். வன்முறையைத் தூண்டுகிறார்கள்.

இக்குழுக்களில் பதிவிடப்பட்டிருக்கும் பல பதிவுகளும் டிரம்பின் ஆதரவாளர்களிடருந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட டிரம்பின் ஆதரவாளர்கள், டிரம்ப் இப்போதும் அமெரிக்க அதிபராக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். BBC

No comments

Powered by Blogger.