Header Ads



பயங்கரவாதி சஹ்ரான் பயன்படுத்திய App, உடைத்தெறியும் முயற்சி தோல்வி கண்டது - முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர்


2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாகக் கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை என கூறுவது நம்பும்படியாக இல்லை எனவும் சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறினார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம்

2 ஆம் நாளாக சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42 ஆம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

‘ நிலந்த ஜயவர்தன எப்போதும் ஆர்ப்பாட்டங்கள், ஏனைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை ஜனாதிபதிக்கு அறிவித்துக் கொண்டிருப்பவர். அப்படி இருக்கையில், இந்தத் தகவலை மட்டும் கூறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி அரச உளவுச் சேவையின் பணிப்பாளர் ஊடாகவே தகவல்களை அறிந்து கொள்வார். இதுவே இதுவரை காலமும் நடந்து வந்தது என ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதன்போது ஆணைக்குழுவுக்கு அப்போது தலைமை தாங்கிய மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, அப்படியானால் நிலந்த ஜயவர்தன தான் அறிவிக்கவில்லை என கூறுவது பொய்யா?, அதற்கான ஏதும் சான்றுகள் உங்களிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதன்போது கடந்த 2019 ஜூன் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது பயணங்கள் குறித்து பதிவிடும் புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவையும் ஆதாரமாக கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பதிலளித்தார்.

‘ ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டு அங்கு சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன. அதற்கு உளவுச் சேவை அதிகாரிகளும் சாட்சிக்காக அழைக்கப்பட்ட நிலையில், அச்செயற்பாட்டுக்கு உளவுச் சேவை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில், ஒரு கலந்துரையாடல் அது குறித்து நடந்தது. அதில் நிலந்த ஜயவர்தன தெரிவுக்குழு முன்னிலையில் உளவுச் சேவை அதிகாரிகள் அழைக்கபப்டுவது அவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கை எனவும், அச்செயற்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வண்ணாத்துவில்லு பகுதியில், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது. அங்கு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்தபோது 2019 மே மாதம் இலங்கையில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமை தெரிய வந்தது. ஹிக்கடுவை, நுவரெலியா, கண்டி போன்ற இடங்களில் அதர்கான உளவு பார்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தன. அப்படியிருக்கையில் அந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டமை மிக வெற்றிகரமான விசாரணை. ஒரு வேளை ஸஹ்ரான், சிஐடி அவரை நெருங்குவதை அறிந்து கூட ஏப்ரல் மாதத்தில் இவ்வாறான திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியிருக்கலாம் என ஷானி அபேசேகர சுட்டிக்காட்டினார்.

அப்படியானால், மாவனெல்லை, வண்ணாத்துவில்லு சம்பவங்களின் பின்னால் ஸஹ்ரான் குழு இருப்பதை தெரிந்தும் ஏன் அவரைக் கைது செய்ய முடியாமல் போனது என ஆணைக் குழு கேள்வி எழுப்பியது..

அதற்கு பதிலளித்த சிஐடி. முன்னாள் பனிப்பாளர் ஷானி அபேசேகர, ஸஹ்ரானை கைது செய்ய பல இடங்களில் நாம் தேடுதல் நடத்தினோம். கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய கெக்குணுகொல்ல, காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அவர் அப்பகுதிகளுக்கு நாம் செல்லும்போதும் அங்கு இருக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. என்றார்.

இதன்போது, சி.ஐ.டி. பல குற்றவாளிகளை சூட்சுமமாக மிக திட்டமிட்டு கைது செய்யும்போதும், ஏன் ஸஹ்ரானை மட்டும் கைது செய்ய முடியாமல் போனது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஷானி அபேசேகர, ‘ பொதுவாக சிஐடியினர் ஒரு சந்தேக நபரின் இருப்பிடத்தை கண்டறிய தொலைபேசி கோபுரத் தகவல்கள், உளவுத் தகவல்கள், அவரின் நடமாட்டம் குறித்த அவதானிப்புக்களை பயன்படுத்துவர். எனினும் இங்கு ஸஹ்ரான், அவரது சகாக்களுடன் உரையாட ‘ திரிமா’ எனும் தொலைபேசி செயலியை பயன்படுத்தியுள்ளார். அதனால் அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை. அச்செயலியை அவர் அவர் இருக்குமிடத்தை காண்பிக்காமல் இருக்க சூட்சுமமாக பயன்படுத்தியமையால் கைது செய்ய முடியாமல் போனது.’ என்றார்.

இதன்போது ஸஹ்ரான் குறித்த செயலியை பயன்படுத்துவது 21/4 தாக்குதல்களை முன்னரே சிஐடி அறிந்திருந்ததா, அவ்வாறு எனில் ஏன் தொழில் நுட்ப உதவிகளைப் பெறவில்லை எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த ஷானி அபேசேகர,’ ஆம்.. சி.ஐ.டி. 21/4 தாக்குதல்களுக்கு முன்னரே ஸஹ்ரான் திரிமா செயலியிப் பயன்படுத்துவதை அறிந்திருந்தது. அது குறித்து நாம் தொழில் நுட்ப உதவிகளைப்பெற போதுமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அதற்கான கோரிக்கைகள் எழுத்துமூலம் வழங்கப்பட்டிருந்தன. எனினும் அந்த செயலியை உடைத்து ஸஹ்ரான் இருக்குமிடத்தை கண்டறிய, உரிய உதவிகள் கிடைக்கவில்லை. அந்த தொழில் நுட்ப நிறுவனங்கள் அதில் தோல்வி கண்டன என தெரிவித்தார்.

நன்றி நெட்றோ நியுஸ்

No comments

Powered by Blogger.