Header Ads



நாங்கள் செய்வதறியாது இருக்கின்றோம், உறுப்பினர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர் - தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இணைத்துக்கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அவர்களை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது பாரிய ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கம் நன்றியுடன் இருக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை அமைக்க பாடுபட்ட கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு அரசாங்கம் இன்னும் அதிக சக்தியை வழங்கவேண்டும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். அவர்களை தள்ளிவைக்கவேண்டாம். அதனால் அவர்கள் வேறு திசைக்கு தள்ளப்படுவார்கள்.

இதுதொடர்பாக பல தடவைகள் அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பனர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கையால் அவர்கள் விரக்தியுற்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின்போது இவர்கள்தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். 

இவர்களை ஒதுக்கிவைத்து அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெறும் பெயர்பலகையாக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். 

அத்துடன் கட்சியின் எதிர்காலம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாட பலதடவைகள் கேட்டிருந்தோம். இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பசில் ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடி இருந்தோம். என்றாலும் அதுதொடர்பான எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. 

அந்த பிரச்சினைகள் அப்படியே இன்னும் இருக்கின்றன. குறைந்தபட்சம் கிராமங்களில் மின் தூண்களில் மின் குமிழ் பாெருத்த, வீதி அமைக்க எமது பிரதேசசபை உறுப்பினர்களுக்கு தேவையான சக்தியை வழங்காவிட்டால், நாங்கள் எவ்வாறு அவர்களுக்கு பதிலளிப்பது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நாங்கள் செய்வதறியாது இருக்கின்றோம். 

மேலும் கிராமங்களுக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் எமது பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒருசதமேனும் கிடைக்கவில்லை. அதனால் எமது உறுப்பினர்களை ஒதுக்கிவிட்டு அரசாங்கம் இதனை செய்வதாக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழித்துவிடும் திட்டமே இதனுல் இருக்கவேண்டும் என்றார். (எம்.ஆர்.எம்.வஸீம்)


1 comment:

  1. ஆறு கடக்கும்வரையில் மாத்திரம் அண்ணன் தம்பி என்ற உறவைச் சொல்லி அரசியல் செய்த நயவஞ்சகர்களுக்கு தற்போது தனக்கு வந்தால் தெரியும் என்ற கட்டத்தில் இருக்கும் போது தான் அதன் உருசி புரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.