Header Ads



இலங்கையின் பிரஜைகளான முஸ்லிம்களின் ஜனாசாக்களை, மாலைதீவிற்கு கொண்டுசெல்ல உடன்படப் போவதில்லை


(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பிரஜைகளான முஸ்லிம்களின் ஜனாசாக்களை மாலைதீவிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய எந்த தேவையும் கிடையாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை. உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை தற்போது அரசாங்கம் அநாவவசியமாக சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பிலும் , அடக்கம் செய்வது தொடர்பிலும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ள போதிலும் , உலக நாடுகளில் இலங்கை மாத்திரம் அவற்றை புறக்கணிப்பதற்கான காரணம் ஏதேனுமொரு அரசியல் தேவைக்காகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , 

கொவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்கள் தொடர்பில் காணப்படுகின்ற சிக்கல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் யார் என்று இது வரையில் கூறப்படவில்லை. ஜனாசாக்களை மாலைத்தீவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என யாருடை தேவைக்காக மாலைத்தீவிடம் ஜனாதிபதி கோரிக்கை முன்வைத்துள்ளார் என்பது எமக்குத் விளங்கவில்லை. 

உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை தற்போது அநாவவசியமாக அரசாங்கமே சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது. எதிர்வரும் நாட்களில் இன்னும் பல நாடுகள் இந்த விடயத்தில் தலையிடக் கூடும். நாட்டுக்கு எதிராக சர்வதே சதி திட்டம் பற்றி பேசும் இந்த அரசாங்கமே உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 

இந்நாட்டின் பிரஜையாக எனது இறுதி சடங்கும் இந்த நாட்டிலேயே இடம்பெற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அது எமது உரிமையாகும். மாறாக பிரிதொரு நாட்டில் எம்மை அடக்கம் செய்யுமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரவில்லை. இது முஸ்லிம்களின் உரிமை மாத்திரமல்ல. இந்து , கத்தோலிக்கம் மற்றும் பௌத்தம் என அனைத்து மத மக்களினதும் உரிமையாகும்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கும், அடக்கம் செய்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஆலோசனை வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப 195 இற்கும் அதிகமான நாடுகள் செயற்படுகின்றன. ஆனால் இலங்கையில் மாத்திரம் எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது? ஏதேனுமொரு அரசியல் தேவைக்காகவே இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. 

முஸ்லிம்களின் சடலங்களை மாலைத்தீவிற்கு அனுப்புவதில் எமக்கு உடன்பாடில்லை. நாம் இந்த நாட்டின் பிரஜைகள். நாட்டுக்காக பாடுபட்ட வரலாறு முஸ்லிம்கள் மக்களிடம் காணப்படுகின்றன. எனவே எமது ஜனாசாக்களை மாலைதீவிற்குக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு எந்த தேவையும் கிடையாது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.