Header Ads



கொரோனா உடல்கள் பற்றிய சர்ச்சைக்கு, விஞ்ஞானபூர்வ தீர்வு வழங்கப்பட வேண்டும் - அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளாது


(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாகாணசபைத் தேர்தல்களை  நடத்துவது தொடர்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதியில் இப்போது தேர்தலை நடத்துவதில்லை என்றே தீர்மானிக்கப்பட்டது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் பின்வருமாறு கூறினார்:

இவ்விடயத்தில் அரசியல் ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படாது. இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்பக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பான சர்ச்சைக்கு விஞ்ஞானபூர்வ அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றே கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதும் வலியுறுத்தப்பட்டது.

ஆகவே இப்பிரச்சினையை மதரீதியாகவோ அல்லது இனவாத அடிப்படையிலோ நோக்காமல், தொழில்நுட்பக்குழு சுயாதீனமாக வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் செயற்படுவதே உகந்ததாகும். சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளாது. மாறாக தொழில்நுட்பக்குழுவின் சுயாதீன தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பதிலளித்தார். 

No comments

Powered by Blogger.