Header Ads



வெட்கம் வெட்கம் என சத்தமிட்ட எதிர்க்கட்சி, தலையை அசைத்துவிட்டு வெளியேறிய சுகாதார அமைச்சர்


(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)


கொவிட் தொற்று தொடர்பான சமகால நிகழ்வுகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் விளக்கங்களை கேட்பதற்கு முற்பட்டபோதும் சபாநாயகர் அதற்கு இடமளிக்காமல் பாராளுமன்றத்தை இன்று அடுத்த அமர்வுவரை ஒத்திவைத்தார்.


பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் ஆரம்பமாக  காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது அனுதாப பிரேரணையே இன்றைய தினம் இருந்தது. இருந்தபோதும் நாட்டில் கொராேனா தொற்று பரவும் அபாயம் இருந்து வருவதால் அனுதாப பிரேரணையை வேறு தினத்துக்கு ஒத்திவைத்து, வாய்மூல விடைக்கான கேள்வி நிகழ்ச்சி மாத்திரமே இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


அத்துடன் நாட்டில் மீண்டும் கொராேனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொராேனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு  மக்கள் மத்தியில் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன்  பல்வேறு வதந்திகளும் பரவியிருந்தன. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அதுதொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அன்றைய தினம் சகாதார அமைச்சர் பாராளுமன்றத்துக்கு வருகைதரவில்லை.


அத்துடன் மறுநாள் பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இதுதொடர்பாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார். அப்போது சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்துக்கு வந்திருந்தார். இதன்போது அவர் எழுந்து, தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு வரமுடியாமல் போயிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் நாட்டு நிலைமை தொடர்பாக பூரண தெளிவொன்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை.


அதேபோன்று நேற்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் பாராளுமன்ற ஆரம்பிக்கப்படும்போதே சபைக்கு வருகை தந்திருந்தார். சபையில் அவரது நடவடிக்கை, விசேட உரை ஒன்றை ஆற்றுவதற்கான தயார் நிலையாகவே இருந்தது. என்றாலும் ஜனாதிபதி தலைமையில் அவசர சந்திப்பு இடம்பெற அழைப்பு வந்ததால் அவர் சென்றதாக எதிர்க்கட்சியினர் கேட்டபோது ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபைக்கு அறிவித்தார். இருந்தபோதும் நேற்று முன்தினம் இறுதி நேரத்தில் சுகாதார அமைச்சர் சபைக்கு வந்தபோது சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா ஒருசில கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அதுதொடர்பில் உடனடியாக பதிலளிக்க முடியாது, தேடிப்பார்த்து அறிவிப்பதாக கூறினார். அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவும் கேள்வியொன்றை முன்வைக்கும்போது நேரம் இல்லை என தெரிவித்து அப்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரால் அது நிராகரிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடியபோதும் சுகாதார அமைச்சர் ஆரம்பத்திலே சபைக்கு வருகை தந்திருந்தார். இன்றைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்துவார் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். உரையாற்றுவதற்கு போதுமான நேரமும் இருந்தது. அதன் பிரகாரம் அமைச்சரும் உரைக்காக தயாராகும் சமிஜையும் இருந்தது. இவ்வாறான நிலையில் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனிப்பட தெளிவொன்றை முன்வைத்து அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க எழுந்து, அதற்கு மாத்திரம் பதிலளித்துவிட்டு அமர்ந்தார்.


இதன்போது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆசனத்தில் இருந்து எழுந்து ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி சுகாதார அமைச்சரிடம் விளக்கங்களை கோர முற்பட்டபோதும் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் அதற்கு இடமளிக்காமல், சபையை அடுத்த அமர்வுவரை ஒத்திவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் அரச தரப்பினரைபார்த்து வெட்கம், வெட்கம் என சத்தமிட்டனர். சுகாதார அமைச்சரோ தப்பினேன் பிழைத்தேன் என்றதுபோல் எதிர்க்கட்சியினரை பார்த்து தலையை அசைத்துவிட்டு சபையைவிட்டு வெளியேறினார்.

No comments

Powered by Blogger.