Header Ads



கரிய ஒக்டோபர் நினைவுகளும், இந்திய படை நடவடிக்கைகளும் (பகுதி 1)


- எம்.எஸ்.எம். ஜான்ஸின் -


1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளால்  இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப் பட்டு வெளியேற்றப் பட்ட  நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு செயற்பாடே கரிய ஒக்டோபர் நினைவு தினமாகும். 


இந்த கரிய ஒக்டோபர் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டின்  போது வடக்கின் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  75 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அனைத்து சொத்துக்களும், பணம், நகை, உணவுப் பொருட்கள், உடைகள்  என்பன கொள்ளையடிக்கப் பட்ட நிலையில் நிர்க்கதியான நிலையில் ஆயுத முனையில் அச்சுறுத்தப் பட்டு வெளியேற்றப் பட்டனர். வெளியேறியோர் அகதிகளாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தஞ்சமடைந்திருந்தனர். 


இந்த நிகழ்வுக்கு மூன்று வருடத்துக்கு முன்பு அதாவது 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம்  அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக இலங்கையில் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய இராணுவ முகாம்களைச் சுற்றிவளைத்து முற்றுகைக்கு உள்ளாக்கியிருந்தனர். அவ்வாறாக இந்திய இராணுவம் முற்றுகையிடப்பட்ட காலப் பகுதியும் அதனைத் தொடர்ந்து பெரும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும் 1987 இன் இதே ஒக்டோபர் மாதம் தான். அப்போதைய அச்சுறுத்தலாக காணப்பட்ட விடயம் இந்திய இராணுவத்தின் தாக்குதலிலும் புலிகளின் தாக்குதல்களிலும் இருந்து தப்பித்துக் கொள்வதாகவே இருந்தது. 


இந்திய இராணுவமும் புலிகளும் தாக்குதல்களை கண்டபடி செய்ததால் முகாம்களின் வழமையான தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால் மக்கள்வாழும் பிரதேசங்களிலும் இரு தரப்பாரின் ஷெல்களும் குண்டுத்தாக்குதல்களும் பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கியிருந்தது. இந்த தாக்குதல்களினால் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் காயங்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான ஒரு பீதியான நிலமையின் கீழ் யாழ் முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்வது அபாயகரமாக காணப்பட்டது. 


இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வேறு மாவட்டங்களுக்குச் செல்வது என்று யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஒரு சில குடும்பங்கள் முடிவெடுத்து எங்கு செல்வதென்ற முடிவில்லாமல்  வெளியேறிக் கொண்டிருந்தனர். 


இந்தக் தொடர் கட்டுரை இந்திய இராணுவத்தில் நடவடிக்கை காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எவ்வாறான பாதிப்புக்குள்ளானார்கள் என்பதை இயன்றவரை ஆவணப்படுத்தும் ஒரு வரலாறாக வெளியிடப்படுகின்றது. இக்கட்டுரையில் மேலதிகமாக சேர்க்க வேண்டிய விடயங்கள் இருப்பின் அவற்றை பின்னூட்டலில் குறிப்பிட்டால் ஆவணப்படுத்தலுக்கு உதவியாக இருக்கும்.


கரிய ஒக்ட்டோபர்  நினைவுகள் தொடரும் .......

1 comment:

  1. 2012 யிருந்து சிங்கள மக்கள் முஸ்லிம்களை ஊர் ஊராக இல்லாத காரணங்களை கூறி துரத்தி துரத்தி துரத்தி... அடிப்பதையும், அரசில் இணைவதை தடுப்பதையும் பற்றி எழுதலாமே?, அதுக்கு பயம்...

    ......தமிழ்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக கதைகள் எழதி, சிங்களவர்களை சந்தோசப்படுத்தலாம் என எண்ணுகின்றீர்கள். மம்ம...good luck....

    ReplyDelete

Powered by Blogger.