Header Ads



பாடசாலைகள் சமூகத்தின் கண்கள்


எம்.எஸ். முஹம்மத்

பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து அவனுடன் கதைக்க விரும்பினாலோ அல்லது பழக விரும்பினாலோ அவன் அந்த மனிதனின் கண்ணையே முதலில் நோக்குகின்றான. தன்னை அவன் பார்க்கும் போது தனது விடயத்தை  அந்த மனிதனிடம் சொல்லிவிடுகின்றான். அது பேச்சாக இருக்கலாம். சைகையாக இருக்கலாம் அல்லது கண் சாடையாக இருக்கலாம். அல்லது அது அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்தப் படலாம். 


கண்கள் ஆக்கத்துக்கும் பயன்படுத்தப் படுகின்றன. அழிவுக்கும் அதே கண்கள் காரணமாக இருக்கின்றன. இன்று ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் மனிதனை அடையாளம் கண்டுபிடிக்க கண் ரேகைகள் பயன்படுத்தப் படுகின்றன. 


ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்க்கவும் தன் இருப்பிடத்தைத் தேடி திரும்பி வரவும், விபத்துக்கள் இன்றி நடமாடவும், தொழில் செய்யவும் , மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் என்று மனித வாழ்க்கையில் கண்களின் முக்கியத்துவம் இன்றியமையாததாக உள்ளது. 


அல்லாஹ்த ஆலா மனிதனைப் படைக்கும் போது உறுப்புக்களில் முதலில் கண்களையே படைப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. எனவே எந்த வகையில் பார்த்தாலும் மனித வாழ்வுக்கு கண்கள் அத்தியாவசியமானவையாகக் காணப் படுகின்றன. 


இந்தக் கண்களைக் கொண்டே பிறந்த ஒரு குழந்தை தன் தாயையும் தந்தையையும் இதர மனிதர்களையும் காண்கின்றது. அந்தப் பார்வை தான் இறுதி மூச்சு வரை மக்களை அடையாளம் காண உதவும்  ஒரு உறுப்பாக உள்ளது. 


எனவே கண் என்பது மனித வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இந்தக் கண்ணுக்கு ஒப்பாகத் தான் ஒரு சமுதாயத்தின் பாடசாலை விளங்குகின்றது. இந்தக் கண் மூலமே ஏனைய மனிதர்களையும் சமூகங்களையும் ஒரு பாடசாலை பார்க்கின்றது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கண்ணை முதலில் நோக்குவது போன்று பிற மனிதர்களும் சமூகங்களும் இன்னொரு சமூகத்தை  விளிக்க அந்த  சமூகம் சார்ந்த பாடசாலைகளையே பார்த்து அந்த சமூகத்தை மதிப்பிடுகின்றது. 


ஒரு சமூகம் சார்ந்த பாடசாலை எத்தனை கல்விமான்கள், விளையாட்டுச் சாதனையாளர்கள், பிரபலங்களை உருவாக்கியுள்ளது என்பதைக் கனித்தே அந்த சமூகத்தை மற்ற சமூகங்கள் மதிப்பிடுகின்றது. அதிகாரிகள் கூட பாடசாலை எவ்வாறானது என்று பார்த்துத் தான் அதற்கேற்றால் போல் மதிப்பளிப்பது இன்று சாதாரணமாக காணப்படும் ஒரு விடயமாகும். 


இன்று ஒரு பெற்றோர் தன் பிள்ளையை எந்தப் பாடசாலையில் கற்பிக்க வேண்டும் என்பதைக் கூட பல்வேறு விடயங்களை அலசி ஆராய்ந்தே முடிவெடுக்கின்றனர். மேற்கூறிய பந்தியிலுள்ள விடயங்களை அவர்கள் பார்க்கின்றனர். மேலும் பாடசாலையின் அதிபர் யார், ஆசிரியர்கள் யார், அதன் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் யார்? அவர்களின் கல்வித் தகைமைகள் என்ன? பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் எத்தகையவர்கள் என்பதையெல்லாம் பார்த்துத் தான் ஒரு பாடசாலை தரப்படுத்தப் படுகின்றது. 


இன்று இலங்கையின் பிரபள்யமான பாடசாலைகளாக காணப்படும் பெரும் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றில் பிரபலங்களும் சமூகத்தில் ஒழுக்கசீலர்களாக கருதப் பட்டவர்களுமே காணப்படுகின்றனர். அதனூடாக அந்தப் பாடசாலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பிரபள்யமாக விளங்குகின்றது. 


இன்று சிலர் தாம் சார்ந்த பாடசாலைகளுக்கு எதிராக முகப் புத்தகம் மற்றும் வட்ஸ் அப் மூலமாகவும் நோட்டீஸ்களை அடித்தும் பிரச்சினைகளைக் கிளப்புகின்றனர்.  ஒரு பாடசாலையின் முன்னேற்றத்தில் முக்கிய பாத்திரம் அதிபர் தான். இரண்டாவது ஆசிரியர்கள். பாடசாலையின் கல்வி முன்னேற்றம், விளையாட்டுத்துறை வளர்ச்சி வெற்றிகள் என்பவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் அதிபர் தான். தான் சார்ந்த பாடசாலையின் நற்பெயரைக் காப்பாற்றி அதன் நற்பெயர் பல தசாப்தங்களுக்கு பிரகாசம் வீசும்படி செய்ய வேண்டியது ஒரு அதிபரின் கடமையாகும்.   


 பாடசாலையை எல்லாத் துறைகளிலும் முன்னேற்ற அந்த அதிபருக்கு தேவையான வளங்களை வழங்கி  அந்த அதிபருக்கு இருக்கும் கடமையழுத்தங்களில் இருந்தும் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பாதுகாப்பு வழங்கவேண்டிய பொறுப்பு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோரைச் சாரும். 


தேவையற்ற இடங்களில் பாடசாலையை தவறாக விமர்சிப்பது தன் தாயை இழிவு படுத்துவதற்குச் சமம்.  முரண்பாடுகள் குறிப்பிட்ட சங்கங்களால் மூடிய அறைக்குள் பேசித் தீர்க்கப் பட வேண்டும். அதனைச் சந்திக்கு கொண்டு செல்லக் கூடாது. ஏனென்றால் பாடசாலையின் ஒரு அங்கத்தவரைப் பற்றிய குற்றச் சாட்டு பலரையும் பலவிதத்தில் சென்றடையும்.  இதனால் பாடசாலைத் தாயின் பேரும் புகழும் மங்கி அவப்பெயருக்கு உள்ளாகி அதன் எதிர்காலச் செயற்பாடுகள்  முடக்கப் படும். அவ்வாறான செயற்பாடுகள் ஒரு பாடசாலையையே அழித்துவிடும். 


ஒரு பாடசாலை, சிறந்த  நல்ல பாடசாலை, அது  திறமையான அதிபரையும் ஆசிரியரையும் கொண்டுள்ளது, அந்தப் பாடசாலையில் கல்வி கற்றால் நல்ல பெறுபேறுகளைப் பெற்று மாணவர்கள் நாளைய சமூகத் தலைவர்களாக மிளிர்வார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள் என்ற செய்தி தான் பாடசாலை சம்பந்தப் பட்ட சகலரதும் பேச்சாக இருக்க வேண்டும். அந்த செய்தி தான் வட்ஸ் அப் , முகப் புத்தகம், நோட்டீஸ், புத்தகங்கள், சஞ்சிகைகள் மூலமாக சமூகத்தைச் சென்றடைய வேண்டும்.  


இது தான் ஒரு பாடசாலை சார்ந்த அதன் அதிபர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர், சமூகம், ஊர் போன்ற அனைவரதும் கடமையாகும். 


எனவே பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதனை தூசி கூட விழாமல் பாதுகாப்பது தான் எல்லோரினதும் கடமை. 

No comments

Powered by Blogger.