Header Ads



அதாஉல்லாக்கு நேற்று, பாராளுமன்றத்தில் நடந்தது என்ன...?


அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அணிந்திருந்த ''குர்தா'' வகை ஆடையால் சபையில் பெரும் சர்ச்சை வெடித்தது. எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பு, படைக்கல சேவிதர்களின் வேண்டுகோள் ஆகியவற்றுக்குச் செவிமடுத்து அவர், சபையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நேற்று (22) காலை 10 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆளும் தரப்பினரின் பதில் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை அமளி துமளிப்பட்டுக்கொண்டிருந்தது.  

அப்போது, ''குர்தா'' வகை ஆடையை அணிந்தவாறு, ஆளும் தரப்பு பக்கத்திலிருக்கும் கதவை மெதுவாகத் திறந்த ஏ.எல்.எம். அதாவுல்லா, புன்முறுவலுடன்  சபைக்குள் வந்தமர்ந்தார்.

அமளி துமளி, கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலும் அதாவுல்லாவின் ஆடையைக் கண்டுவிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்  பண்டார, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி, ''நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்துள்ள அதாவுல்லாவை சபையிலிருந்து வெளியேற்றவும்'' எனக் கோரிநின்றார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ''அது அவரின் தேசிய உடை'' என்றார். அப்போது, ஓடோடிச்சென்ற உதவி படைக்கல சேவித்தர்களில் ஒருவர் அதாவுல்லாவிடம், ஏதோ கூறினார். அவரும் அவசர அவசரமாக, தனது ஆடைக்கு மேலாக போட்டிருந்த கோர்ட்டின் பொத்தான்களைப் பூட்டினார்.

அப்போது எழுந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.மரிக்கார், “​அதாவுல்லா அணிந்திருப்பது ஆப்கானிஸ்தான் உடையா? எனக் கேட்டுவிட்டார். இதனால், சிலர் கெக்கென சிரித்துவிட்டனர்.

தங்களுடைய எதிர்ப்பில் உறுதியாய் நின்ற எதிரணியினர், அவருடைய ஆடை, சம்பிரதாயங்களுக்கு முரணானது என்றனர். விடாப்பிடியாகவும் நின்றனர். அப்போது, படைக்கல சேவிதர் போய் அதாவுல்லாவிடம் ஏதோ கூறினார். அதாவுல்லாவும் அதற்குத் தலையசைத்து  மறுப்புத் தெரிவித்தார்.

அப்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி அதாவுல்லா ''எதிர்க்கட்சியினருக்கு 20ஆ, எனது ஆடையா  என்பதுதான்,  இப்போது பிரச்சினையாகி உள்ளது'' என்றார்.

இதன்போது ஆளும் தரப்பினர் சிலர், அதாவுல்லாவின் ஆசனத்துக்கு அருகில் சென்று, கூடி நின்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்குச் சென்ற படைக்கல சேவிதர், அதாவுல்லாவிடம் மீண்டும் ஏதோ கூறிவிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் ஏதோகூறினார்.  

இதனையடுத்து அதாவுல்லா எம்.பி. எழுந்து சபைக்கு வெளியே சென்றபோது அவருடன் துணையாக ராமேஸ்வரன்  எம்பி.யும்  வெளியேனார்.   எதிர்க்கட்சியினர் ''ஹூ''அடித்து அதாவுல்லாவைக் கிண்டலடித்தனர்.

2 comments:

  1. அவர்க்கு கூதலாக இருந்ததாம்...

    ReplyDelete
  2. கடைசிப் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயம் மனதிற்கு மிக வேதனையாக இருக்கின்றது. இன்னமும் Westminister Parliamentary System த்தை கடைப்பிடிக்கும் நாம் பண்பாட்டில் "வெள்ளைக்காரர்" களைப்போல் இல்லாவிட்டாலும் ஆகக்குறைந்தது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைப்போலாவது இருக்கக் கூடாதா? பாருங்கள் இராமேஸ்வரன் MP எப்படியான பண்பாடுடையவராக இருந்தார் என்பதனை. பார்த்தாவது படியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.