Header Ads



'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கை பின்பற்றப்பட்டால் ஒத்துழைக்கத் தயார் - இந்துனில் துஷார Mp

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியதைப் போன்று 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கை முறையாக பின்பற்றப்பட்டால் அதற்கு எதிர்கட்சி என்ற வகையில் ஒத்துழைக்க தயார். அவ்வாறில்லை  எனில் ஒத்துழைக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதி பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பது தொடர்பிலும் தொல்பொருள் பாதுகாப்பு செயலணி தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி கூறியதைப் போன்று 'ஒரே நாடு ஒரே சட்டம்'  என்ற கொள்கை பின்பற்றப்படுகின்றதா?  

தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்தாலும், குருநாகலில் காணப்பட்ட இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரசமண்டபம் உடைக்கப்பட்ட போது ஜனாதிபதி அமைதியாகவே இருந்தார். தற்போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவிருந்த நியமனங்கள் , அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு , ஓய்வூதியம் என்பவற்றை தேர்தல் பிரசார காலம் என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தது.

இதே போன்று பொதுத் தேர்தலின் போது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் ,  50 ஆயிரம் பட்டதாரி நியமனங்களை தேர்தல்கள் ஆணைக்குழு இடை நிறுத்தியது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த நியமனங்கள் எதுவும் மீண்டும் வழங்கப்படாத நிலையில் , தற்போதைய அரசாங்கம் வழங்குவதாக குறிப்பிட்ட நியமனங்களை மாத்திரம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஜனாதிபதி கூறிய 'ஒரு நாடு ஒரே சட்டம்' இதுதானா ? இவ்வாறான நிலைமைகளின் போது எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது. ஒரே சட்டம் என்றால் நாட்டிலுள்ள அனைவருக்கும் அது பொதுவானதாக இருக்கவேண்டும்.

கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுமா?

பதில்: அவர்களை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்று கூற முடியாது. பின்னடைவையே சந்தித்துள்ளனர். ஒரு மாவட்டத்தில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கப் பெறுகின்றதோ அதற்கமைய தான் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தெரிவுச் செய்யப்படுகின்றனர். அதனால் அவர்களது வெற்றி தோல்வியை போட்டியிடும் கட்சியே தீர்மானிக்கின்றது. தற்போது எமது கட்சியில் போட்டியிட்டு பின்னடைவை சந்தித்துள்ள வேட்பாளர்கள் அவர்கள் விரும்பினால் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம்.

கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹரிண் பெர்னாண்டோவை நியமிக்க போவதாக தெரியவந்துள்ளதே?

பதில்: அவ்வாறு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கதான் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றும் நோக்கில் பிரதி தலைவர் மற்றும் உபத்தலைவர் போன்ற நியமனங்களை கட்சிக்குள் பெற்றுக் கொடுத்து வந்தார். எங்களை பொருத்தவரையில் அதற்கான அவசியமில்லை. எமது கட்சிக்குள் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவுக்கு தகுதிவாய்ந்த பல உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாங்கள் அனைவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழே செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.