Header Ads



தமிழ் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணம் என்ன..? விளக்குகிறார் சுமந்திரன்

(தி.சோபிதன்)

தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். எமது கட்சியின் தலைமையும் நிர்வாக கட்டமைப்பும் தோற்றுப் போயுள்ளது.

ஆகவே அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும். கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம். உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. வடக்கு கிழக்கில் 20 அசனங்களை வழங்க வேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்பொழுது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களிற்கு கிடைத்துள்ளது. பத்து ஆசனங்கள். இது மிக சொற்பம்.

இது நாங்கள் எதிர்பாராத ஒரு பின்னடைவு. உள்ளூராட்சி தேர்தல்களில் 2018 ஒக்டோபரில் எங்களிற்கு இப்படியான பின்னடைவு இருந்த போதிலும், அந்த தேர்தல் முறை ரீதியாக – சூழல்வித்தியாசம் காரணமாக அந்த பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலிற்கு முகம் கொடுத்தோம்.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனைகளை எழுப்புகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொள்வதுடன், அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம்.

மக்களுடன், அடிமட்ட தொண்டர்களுடனான கலந்துரையாடல்கள், எங்களிற்குள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மூலம் பின்னடைவிற்கான காரணத்தை கண்டறிந்து, உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

எங்களிற்கு வாக்களிக்காத மக்கள் வழக்கம் போல இரண்டு பக்கமும் போயிருக்கிறார்கள் என்றால் அது சரியாக அமையாது. கடும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பக்கமாக சிலர் இருக்கிறார்கள். அவர்களை போலித் தமிழ் தேசியவாதிகள் என நாங்கள் வர்ணிப்பதுண்டு. ஆனால் அவர்களிற்கும் ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஆனால் வடக்கு, கிழக்கையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்க்கின்ற போது, அரசாங்கத்துடன் இணைந்த செயற்படும் அணிகளின் திசையில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அதன் ஒரு பிரதிபலிப்பாக அம்பாறையில் இம்முறை ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போயுள்ளது.

எனவே நாம் எமது கட்சியினை மறு சீரமைப்பது அவசியமானது.குறிப்பாக நாம் இளைஞர்களை பலப்படுத்தி அவர்களை கொண்டு பயணிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் உடனடியாக இடம்பெறும் என்றார்.

No comments

Powered by Blogger.