June 11, 2018

ஸகாதுல் பித்ர் என்னும், நோன்பு பெருநாள் தர்மம்

எம்.ஐ அன்வர் (ஸலபி)

ஸகாதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் தர்மமானது ஒரு முஸ்லிமின் உள்ளத்தை உலோபித்தனத்திலிருந்து சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோருக்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.


நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள் (அபூதாவுத்)

ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ''ஸகாத்துல் ஃபித்ரை'' அனைத்து மனிதர்கள் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ''ஸாஉ'' பேரீத்தம்பழம் அல்லது ஒரு ''ஸாஉ'' கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்''. (புகாரி,முஸ்லிம்)

ஒரு ''ஸாஉ'' உணவு, அல்லது ஒரு ''ஸாஉ'' கோதுமை, அல்லது ஒரு ''ஸாஉ'' பேரீத்தம் அல்லது ஒரு ''ஸாஉ'' தயிர் அல்லது ஒரு ''ஸாஉ'' வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்'' (புகாரி, முஸ்லிம்).

ஸாஉ'' என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ''ஸாஉ' என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.  இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.

யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ''ஸகாத்''தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' (அபூ தாவூத், இப்னு மாஜா).

இந்த நபி வழி ''ஸகாதுல் ஃபித்ரா''வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.

நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரணமாகும். பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும்.

இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்குவது. இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).

மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ''அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.'' (புகாரி)

எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம். 

ஸகாதுல் ஃபித்ரை'' அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள்.

ஸகாதுல் ஃபித்ரா''வாக ஒரு ''ஸாஉ'' உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ''ஃபித்ரா''வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீஃபா (ரஹ் )அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

2 கருத்துரைகள்:

“பித்ரா” என்ற அம்சத்தில் இரண்டு விடயங்கள் கருத்தில் கொள்ளப் படுவது சிறப்பு மிக்கது.
1. ஒரு முஸ்லிமிடத்தில் ஏனைய நற்பண்புகளைப் போன்று கொடுக்கக் கூடிய பண்பும் நோன்பு நோற்பதினூடாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை வழியுறுத்துவதாக அமைந்திருக்கிறது. சுருங்கச் சொன்னால் “பித்ரா” வைப் பெற்றவரும் தனக்கு மேலதிகமாக இருப்பதை “பித்ரா” வாக கொடுக்க வேண்டும் என்பதே சட்டமாகும். அந்தளவுக்கு எல்லாரிடத்தில் கொடுக்கும் நற்பண்பு உருவாக வேண்டும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

2. மேலதிகாமான “பித்ரா” வை என்ன செய்வது. மேலதிகமான தாணியங்களை மீண்டும் விற்பதாக இருந்தால் அதை குறைந்த விலைக்கே விற்க வேண்டி ஏற்படும். எனவே “பித்ரா” என்ற விடயத்தில் பொதுவாக புழக்கத்திலுள்ள விடயம் (பண்ட மாற்று யுகத்தில் தாணியம், இன்றய யுகத்தில் பணம்) என்ற வகையிலேயே தாணியம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றவகையில் இமாம் அபூ ஹனீபா அவர்களின் கருத்து சிறப்பு மிக்கது.

Post a comment