அமெரிக்காவுக்கு அடிபணிந்து சியோனிசத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்குமானால்..?


உங்களுடைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவு உண்மையிலேயே மீண்டும் IMFயிடம் சரணாகதி ஆகி, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் உடைய ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையின் அழுத்தங்களுக்கு அடிபணிவது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் நீண்டகாலமாக இலங்கைக்கு ஒத்துழைப்பும் உதவிகளும் வழங்கி வந்த ஈரான் போன்ற நட்பு நாடுகளின் நலன்களையும் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதாகும்.


குறிப்பாக, அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் சியோனிச அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை இலங்கை எடுக்குமானால், அது நமது நீண்டகால அணிசேராக் கொள்கைக்கும் சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கைக்கும் முரணானதாக அமையும்.


அதேவேளை, இத்தகைய நிலைப்பாடு நமது அண்டை நாடான இந்தியாவுடனான பிராந்திய இராஜதந்திர உறவுகள் தொடர்பிலும் தேவையற்ற சிக்கல்களையும் கேள்விகளையும் உருவாக்கக்கூடும். 


அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் மத்திய கிழக்கின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பதோடு, அந்தப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார, வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு, எரிசக்திப் பாதுகாப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், இலங்கைக்கு கிடைக்கும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் எனப் பல துறைகளிலும் இதன் தாக்கம் ஏற்படக்கூடும். 


இந்தப் பாவச் செயல்களுக்கு நாமும் பங்காளிகளாக மாறுகிறோம்


நாம் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு வல்லரசின் அரசியல் அல்லது இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை துணைபோவது என்பது வெறுமனே வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான ஒரு முடிவாக மட்டும் அமையாது. சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கும் முரணான இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியளிக்குமானால், அதற்கான சர்வதேச சட்டப் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளும் எழலாம்.


எனவே, இலங்கை எந்தவொரு வல்லரசின் அழுத்தத்திற்கும் அடிபணியாமல், தனது இறைமை, சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கை, அணிசேராக் பாரம்பரியம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாக்க வேண்டும். 


கிழக்கு மாகாணத்தின் முக்கிய வர்த்தக மற்றும் சனத்தொகை மையமான கல்முனை நகரின் உட்கட்டமைப்பு, கடலரிப்புத் தடுப்பு மற்றும் வடிகாலமைப்பு அபிவிருத்திக்குக் குறைந்தபட்சம் 65,000 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்முனையை ஏனைய 18 நகரங்களுடன் இணைத்து, மொத்தமாக 5,000 மில்லியன் ரூபாவை பகிர்ந்து கொள்ளுமாறு ஒதுக்கியிருப்பது கல்முனை மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.


இப்பொழுது இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முற்றாகச் சிதைவடைந்துள்ளது. 


இதனைப் பற்றி நீங்கள் எந்தவித அக்கறையும் காட்டாமல் இருக்கலாம். 


ஆனால், அதன் உண்மையான பிரதிபலிப்பை எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயமாகக் காண்பீர்கள்.


அதனால்தான் உங்களுக்கு நான் ஒரு சவாலை முன்வைக்கிறேன்!


கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது நகர சபை தேர்தலை நடத்துங்கள்.


நாங்கள் ரெடீ. நீங்கள் ரெடியா….?


சாய்ந்தமருது நகர சபை தொடர்பான உங்கள் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன?


2020ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது நகர சபை (Sainthamaruthu Urban Council), தற்போது சட்டரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதன் சட்டபூர்வமான நிலை உறுதிப்படுத்தப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்பொழுதுதான் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது நடவடிக்கையாக நீங்கள் மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளீர்கள். எல்லை நிர்ணய ஆணை குழு நியமித்துள்ளீர்கள்.


நீதி மன்ற தீர்ப்பின் படி இரண்டு மாத காலத்திற்குள் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை பற்றி எந்தக் குறிப்பும் உங்கள் வர்த்தமானியில் குறிப்பிட தவறி உள்ளீர்கள்.


அடுத்ததாக, அந்தக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர், உரிய அமைச்சர் அதனைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழிவகை செய்ய முடியும்.


இந்த நடைமுறைகளைக் கருத்தில் கொண்டால், இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், அதாவது ஜனவரி 17ஆம் திகதியளவில், குழுவின் அறிக்கை கிடைத்துவிடும் என வைத்துக்கொள்வோம். அவ்வாறாயின், பெப்ரவரி மாதத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?


அதற்குத் தயாராக இருந்தால், சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நீங்கள் விசேடமாகச் செய்திருக்கிறீர்களா?


சரி, இது ஒரு சிறிய தேர்தல் என்பதால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தேர்தலை நடத்துவதற்கு முன்னரே சாய்ந்தமருது நகர சபையை முறையாக உருவாக்குவதற்கும், அது சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் பல அத்தியாவசியமான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.


இதனை நான் இந்தப் பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாக வலியுறுத்திக் கூறுகின்றேன்.


முதலாவதாக, நகர சபைக்கான நிரந்தர அலுவலகக் கட்டடம் அடையாளம் காணப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான புதிய கட்டடம் அமைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, சபையின் நிர்வாகத்திற்குத் தேவையான பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, சபை தனது பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.


இவை அனைத்தும் தேர்தலுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.


ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சாய்ந்தமருது நகர சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சட்டபூர்வமான நிலையும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கும்போது, சாய்ந்தமருது நகர சபைக்குரிய அதிகாரங்களும் பொறுப்புகளும் தனியாகச் செயற்படுத்தப்பட வேண்டிய நிலையில், கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் அந்தப் பிரதேசத்திற்கான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


இதன் காரணமாக, சாய்ந்தமருது மக்களால் எதிர்கொள்ளப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் என்ன?


கட்டட அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. உள்ளூராட்சி மன்றத்திற்குரிய அனுமதிகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை நகராட்சி சேவைகளைக்கூட உரிய முறையில் வழங்குவதற்கான தெளிவான நிர்வாக ஏற்பாடுகள் இல்லை.

No comments

Powered by Blogger.