மலேசிய விமானம் காணாமல் போனமைக்கு, பயங்கரவாத தாக்குதல் காரணமாக இருக்காது - சர்வதேச பொலிஸ்
மலேசிய பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
காணாமல் போன விமானத்தின் சேதமடைந்த பகுதிகள் எதுவும் தென்சீனக் கடற்பரப்பிலோ மலாக்கா நீரிணைப் பகுதியிலேயோ மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் திட்டமிட்ட பயணப் பாதையிலிருந்து திரும்பி, மலாக்கா நீரிணை ஊடாக பயணித்ததாக மலேசிய விமானப் படை நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் பயங்கரவாத தொடர்புக்கள் காணப்படலாம் என அமெரிக்கப் மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் ஜோன் பிறினன் கூறியுள்ளார்.
எனினும் விமானம் காணாமல் போன சம்பவத்திற்கு எந்தவொருவரும் இதுவரை உரிமைக்கோராத நிலையில், அது தொடர்பான மர்மம் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை விமானம் காணாமல் போன சம்பவத்திற்கு, பயங்கரவாத தாக்குதல் காரணமாக இருக்காது என நம்புவதாக சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களவாடப்பட்டதாக கூறப்பட்ட கடவுச் சீட்டில் பயணித்த இரண்டு ஈரான் இளைஞர்களுக்கும் பயங்கரவாத தொடர்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை விமானத்தைத் தேடும் பணிகளில் அவுஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

Post a Comment