வட மாகாண எதிர்க்கட்சி தலைவரும், ஈ.பி.டி. பி யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கமல் கைது
ஈ.பி.டி.பி அமைப்பின் தீவக அமைப்பாளரும், நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான றெக்சிகன் படுகொலையில் பிரதான சந்தேக நபரான வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவரும், ஈ.பி.டி. பி அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கமல் என்பவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கொலையினை ஆரம்பத்தில் தற்கொலைச் சம்பவம் என ஈ.பி.டி.பி அமைப்பு மூடிமறைக்க முற்பட்டிருந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத பரிசோதனையில் அது தற்கொலை அல்ல கொலைச் சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இலங்கையின் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் மன்றில் சாட்சியமளித்திருந்தனர்.
இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் மேற்படி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பி முக்கியஸ்த்தர் கமல் என்பரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

Post a Comment