சோபித தேரரின் மரணம் தொடர்பில், விசாரணை நடாத்த கமிட்டி
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடாத்த கமிட்டி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சோபித தேரரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விட்டமைக்கான காரணங்களை கண்டறியவே இவ்வாறு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடாத்த தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் உள்ளிட்ட ஐந்து வைத்தியர்கள் இந்தக் கமிட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சோபித தேரரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக்க தேரர் சோபித தேரரின் மரணம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சோபித தேரரின் மரணம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
என்ன காரணத்திற்காக சோபித தேரர் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய புலனாய்வுப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் போது குறித்த விடயம் தொடர்பில் ஐந்து பேர் அடங்கிய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment